வேல்முருகனை கழட்டிவிட்டது முதல் தப்பு.. காங்கிரஸை கழட்டிவிடாமல் சேர்த்து கொண்டது 2வது தப்பு.. விசிகவை கதற வச்சது 3வது தப்பு.. கமலுக்கு திமுகவும், தொண்டர்களுக்கு கமலும் செய்தது 4வது தப்பு.. கம்யூனிஸ்ட்களை ஒரு கட்சியாகவே மதிக்காதது 5வது தப்பு.. விஜய்க்கு குடைச்சல் மேல் குடைச்சல் கொடுத்து அவரை பேசுபொருளாக்குவது 6வது தப்பு.. தப்பு மேல் தப்பு செய்யும் திமுக தேறுமா?

தமிழக அரசியல் களத்தில் அசைக்க முடியாத சக்தியாக விளங்கும் திமுக, தற்போதைய தேர்தல் நெருக்கத்தில் எடுத்து வரும் சில முடிவுகள் அக்கட்சியின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கி உள்ளதாக அரசியல் விமர்சகர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். குறிப்பாக, வேல்முருகன் போன்ற தரைமட்ட தொடர்புகளை கொண்ட தலைவர்களை கூட்டணியில் இருந்து கழட்டிவிட்டது முதல் தப்பு என்று கருதப்படுகிறது. வடதமிழகத்தில் குறிப்பிட்ட சமூக வாக்குகளை திரட்டும் வலிமை கொண்ட ஒருவரை தனிமைப்படுத்துவது, திமுகவின் வாக்கு வங்கியில் ஓட்டையை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது. சிறிய கட்சிகளாக தெரிந்தாலும், நெருக்கடியான தேர்தல் களத்தில் ஒரு சதவீத வாக்கு கூட வெற்றியையும் தோல்வியையும் தீர்மானிக்கும் என்பதை திமுக தலைமை மறந்துவிட்டதோ என்ற ஐயம் எழுகிறது.

இரண்டாவதாக, காங்கிரஸ் கட்சியை இன்னும் சுமந்து கொண்டிருப்பது திமுகவின் பலவீனமாக பார்க்கப்படுகிறது. தமிழகத்தில் காங்கிரஸின் செல்வாக்கு என்பது பெரும்பாலும் திமுகவின் தயவிலேயே தங்கியிருக்கிறது. அத்தகைய சூழலில், அக்கட்சிக்கு அதிகப்படியான தொகுதிகளை ஒதுக்குவதும், அவர்களை கூட்டணியிலேயே வைத்திருப்பதும் திமுகவின் சொந்த தொகுதி எண்ணிக்கையை குறைப்பதோடு மட்டுமல்லாமல், தேவையற்ற சுமைகளையும் கூட்டுகிறது. காங்கிரஸ் கட்சியை விடுவித்திருந்தால், அந்த தொகுதிகளைத் தனது சொந்த பலத்தில் திமுக வென்றிருக்க முடியும் அல்லது மற்ற மாநில கட்சிகளுக்கு பகிர்ந்து வழங்கி பெரும் கூட்டணியை வலுப்படுத்தியிருக்கலாம் என்பது நடுநிலையாளர்களின் பார்வையாக உள்ளது.

மூன்றாவது தப்பு, விசிக போன்ற உறுதியான கூட்டாளிகளை கதற வைப்பது. திருமாவளவன் தலைமையிலான விசிக, திமுகவின் கொள்கை ரீதியான தோழனாக இருந்து வருகிறது. ஆனால், தொகுதி பங்கீட்டின் போது அவர்களைக் கௌரவமாக நடத்தாமல் இழுத்தடிப்பது, அக்கட்சியின் தொண்டர்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. ஒரு சமூகத்தின் பிரதிநிதிகளாக இருக்கும் அவர்களை புறக்கணிப்பது, தேர்தலின் போது அந்த சமூக வாக்குகளை திமுகவுக்கு எதிராக திருப்பக்கூடும். கூட்டணி கட்சிகளை சமமாக மதிக்க தவறுவது திமுகவுக்கு பெரும் பின்னடைவைத் தரும்.

நான்காவதாக, கமல்ஹாசனை பயன்படுத்துவதில் திமுக காட்டும் அணுகுமுறை இருதரப்புக்கும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. கமல்ஹாசனுக்கு திமுக இடம் கொடுத்தது ஒரு தவறு என்றால், தன்னுடைய கட்சி நிர்வாகி இருவருக்காவது சீட்டு வாங்கி தரமால் ஏமாற்றியது பெரும் தவறு.

ஐந்தாவது தப்பாக கருதப்படுவது கம்யூனிஸ்ட் கட்சிகளை ஒரு பொருட்டாகவே மதிக்காத போக்கு. இடதுசாரி இயக்கங்கள் தமிழகத்தில் தொழிலாளர் வர்க்கத்தின் குரலாக ஒலிக்கின்றன. அவர்களின் வாக்கு சதவீதம் குறைவாக இருந்தாலும், தேர்தல் களத்தில் அவர்களின் உழைப்பும், பிரச்சார முறையும் தனித்துவமானது. அத்தகைய பாரம்பரியமிக்க கட்சிகளை ஒரு கட்சியாகவே மதிக்காமல் ஓரங்கட்டுவது, திமுகவின் முற்போக்கு முகத்திரையை கிழிப்பதாக அமையும். எளிய மக்களின் வாக்குகளை பெறுவதற்கு இடதுசாரிகளின் உதவி இன்றியமையாதது என்பதை திமுக உணர மறுப்பது ஆபத்தானது.

இறுதியாக, நடிகர் விஜய்க்கு தொடர்ந்து குடைச்சல் கொடுத்து அவரை ஒரு மிகப்பெரிய பேசுபொருளாக்குவது திமுக செய்யும் ஆறாவது தப்பு. விஜய்யின் அரசியல் வருகையை கண்டு அஞ்சுவது போன்ற பிம்பத்தை உருவாக்குவது, தேவையற்ற முறையில் அவருக்கு மக்களிடையே அனுதாபத்தை தேடித்தரும். ஒரு புதிய அரசியல் சக்தியை எதிர்கொள்ள வேண்டிய ஜனநாயக ரீதியிலான முறையை விட்டுவிட்டு, அதிகாரத்தை பயன்படுத்தி முடக்க நினைப்பது விஜய்யை ஒரு பெரும் போராட்டக்காரராக சித்திரிக்கிறது. இத்தனை தப்புகளையும் செய்துவிட்டு திமுக மீண்டும் ஆட்சியைப் பிடிக்குமா என்பது சந்தேகமே. இந்த தவறுகளை திருத்திக்கொள்ளாவிட்டால், வரப்போகும் தேர்தல் திமுகவுக்கு ஒரு கடினமான பாடத்தை கற்பிக்கும் என்பது நிதர்சனம்.

Leave a Comment