சினிமாவுல ‘கட்’ சொன்னா சீன் முடிஞ்சிடும்… ஆனா அரசியல்ல ‘பட்ஜெட்’ போட்டாதான் வேலையே நடக்கும்! ஒரு லட்சம் கோடிக்கு வடை சுடுறதுக்கு முன்னாடி, முதல்ல ஒரு ரூபாய்க்கு உருப்படியா ஒரு கணக்கு சொல்லுங்க விஜய்? தாய்மாமன் சீருன்னு சொல்லி தங்கம் தர்றதுக்கு இது ஒன்னும் உங்க சொந்த ஊரு கல்யாணம் இல்ல… தமிழ்நாடு அரசு கஜானா! ரீல் லைஃப்ல ஒரு விரலைச் சொடுக்குனா காசு வரும், ரியல் லைஃப்ல கையை விரிச்சா கடன் தான் வரும்!

 

தமிழக வெற்றிக் கழத்தின் தலைவர் விஜய், தனது கட்சியின் கூட்டத்தில் அள்ளி வீசிய வாக்குறுதிகள், தற்போது பொருளாதார மேதைகளையும் சமூக ஆர்வலர்களையும் ஒருசேர தலைசுற்ற வைத்துள்ளன. நிஜ வாழ்க்கையை விட சினிமா ரீல்கள் அதிகம் ஓடும் ஒரு கட்சியின் தலைவராக, விஜய் வழங்கியுள்ள பகட்டான திட்டங்கள் அனைத்தும் நடைமுறைக்கு சாத்தியமற்ற கோமாளித்தனமாகவே விமர்சிக்கப்படுகின்றன. குறிப்பாக, 60 வயதிற்கு உட்பட்ட பெண்களுக்கு மாதம் 2,500 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும் என்ற அவரது அறிவிப்பு, தமிழகத்தின் நிதி நிலைமையை சுடுகாட்டிற்கு அனுப்பும் ஒரு திட்டமிட்ட முயற்சியாகவே பார்க்கப்படுகிறது.

ஒரு தோராயமான கணக்கீட்டின்படி, தமிழகத்தில் சுமார் இரண்டு கோடி பெண்களுக்கு இந்த தொகையை வழங்க வேண்டுமென்றால், வருடத்திற்கு 52,000 கோடி ரூபாய் தேவைப்படும். ஏற்கனவே கடன் சுமையில் தத்தளிக்கும் தமிழக அரசுக்கு, இந்த ஒரு திட்டமே ‘சவப்பெட்டியின் கடைசி ஆணி’யாக அமையும். சினிமாவில் தியேட்டர் டிக்கெட் விலையை ஏற்றி ரசிகர்களின் பாக்கெட்டை பறிப்பது போல், இந்த திட்டங்களுக்கான பணத்தை எங்கிருந்து கொண்டு வருவார் என்ற கேள்விக்கு அவரிடம் பதிலில்லை. ஒருவேளை ‘சர்கார்’ படத்தில் வருவது போல் விரலை சொடுக்கினால் கஜானாவில் பணம் நிறைந்துவிடும் என்று அவர் கற்பனை செய்து கொண்டிருக்கலாம்.

அடுத்ததாக, கல்யாணம் ஆகும் ஒவ்வொரு பெண்ணுக்கும் ஒரு சவரன் தங்கம் தாய்மாமன் சீராக வழங்கப்படும் என்ற அவரது ‘புரட்சிகரமான’ அறிவிப்புதான் உச்சகட்ட நகைச்சுவை. தமிழகத்தில் 18 முதல் 25 வயதிற்கு உட்பட்ட சுமார் 30 லட்சம் பெண்களுக்கு தங்கம் வழங்க வேண்டுமென்றால், இன்றைய விலை நிலவரப்படி 37,516 கோடி ரூபாய் தேவைப்படும். விஜய் வழங்கிய இந்த இரண்டு திட்டங்களைச் செயல்படுத்த மட்டுமே வருடத்திற்கு ஒரு லட்சம் கோடி ரூபாய் வேண்டும். இது தமிழகத்தின் மொத்த பட்ஜெட்டையே கபளீகரம் செய்துவிடும் ஒரு விபரீத விளையாட்டு ஆகும்.

இந்தத் திட்டங்களை கேட்கும் போது, பழைய படங்களில் வரும் “வானத்திலிருந்து தேன் மழையை பொழிய வைப்பேன்” என்ற வசனங்கள்தான் நினைவுக்கு வருகின்றன. சினிமாவில் கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் மூலம் எதையும் சாதிக்கலாம், ஆனால் அரசியலில் ஒவ்வொரு ரூபாய்க்கும் கணக்கு சொல்ல வேண்டும். ஒருவேளை விஜய் தனது படத்தில் வருவது போல் அமித்ஷாவையோ அல்லது பிரதமரையோ நேரில் சந்தித்து ஜஸ்ட் ஆஸ்கிங் என்று கேட்டால் தங்கம் இலவசமாக கிடைத்துவிடும் என்று நினைக்கிறாரா? நிஜ உலகிற்கும் சினிமா கனவு உலகிற்கும் உள்ள இடைவெளியை அவர் எப்போது புரிந்து கொள்வார்?

கையில் பைசா இல்லாமல், ஆனால் வாயில் வடை சுடும் இத்தகைய கவர்ச்சி திட்டங்கள் வாக்காளர்களை ஏமாற்றும் ஒரு மலிவான உத்தி என்பதை தாண்டி வேறொன்றுமில்லை. ஒரு முதலமைச்சராக வரத்துடிக்கும் ஒருவருக்கு தமிழகத்தின் வருவாய் ஆதாரங்கள் என்ன, நிதி பற்றாக்குறை எவ்வளவு என்பது குறித்த அடிப்படை அறிவு கூட இல்லையா என்ற கேள்வி எழுகிறது. திரையில் நூறு பேரை ஒரே அடியில் வீழ்த்தும் ‘தளபதி’, நிஜத்தில் தமிழகத்தின் பொருளாதாரத்தை ஒரே அடியில் வீழ்த்த கங்கணம் கட்டிக்கொண்டு கிளம்பியுள்ளது போல தெரிகிறது.

இறுதியாக, விஜய்யின் இந்த வாக்குறுதிகள் ஆழமான குழியில் தமிழகத்தை புதைத்துவிடும் என்பதில் சந்தேகமில்லை. இலவச திட்டங்களை அள்ளி வீசுவதன் மூலம் ஆட்சியை பிடிக்கலாம் என்ற அவரது கணக்கு, வெறும் ‘கால்ஷீட்’ கணக்காகவே முடிந்துவிடும். மக்கள் இப்போது விழிப்புணர்வுடன் இருக்கிறார்கள்; திரையில் பார்க்கும் ‘மாஸ்’ அரசியலுக்கும், நிஜத்தில் நடக்கும் ‘கமிஷன்’ அரசியலுக்கும் வித்தியாசம் அவர்களுக்கு தெரியும். விஜய்யின் இந்த ஒரு லட்சம் கோடி ரூபாய் மேஜிக் ட்ரிக், தேர்தல் களத்தில் வெறும் ‘புஸ்வானமாக’ மாறப்போவது உறுதி.

Leave a Comment