தமிழக அரசியல் களம் தற்போது அனல் பறக்கும் தேர்தல் பிரசாரத்தில் தகித்து கொண்டிருக்கிறது. குறிப்பாக, நடிகர் விஜய்யின் தமிழக வெற்றி கழகம் சந்தித்து வரும் அடுத்தடுத்த தடைகள், அக்கட்சியின் தொண்டர்களை கடும் கொதிப்படைய செய்துள்ளன. “திமுகவும் பாஜகவும் விஜய்யை தொட்டிருக்க கூடாது” என்ற முழக்கம் இப்போது சமூக வலைதளங்களில் தவெகவினரின் ஆவேச பதிவுகளாக பரவி வருகின்றன.
இதற்கு முக்கிய காரணமாக இரண்டு விஷயங்கள் முன்வைக்கப்படுகின்றன. ஒன்று, தமிழகத்தில் விஜய் மேற்கொள்ள திட்டமிட்டிருந்த பிரசாரங்களுக்கு தொடர்ந்து முட்டுக்கட்டை போடப்படுவது. சென்னை பெரம்பூர், வில்லிவாக்கம், தி.நகர் போன்ற பகுதிகளில் விஜய் பிரசாரம் செய்ய அனுமதி கோரியபோது, காவல்துறை பல்வேறு காரணங்களை கூறி அனுமதி மறுத்ததும், பிரசார இடங்களை தோண்டி குழிகள் அமைக்கப்பட்டதும் தவெகவினரை ஆத்திரமூட்டியுள்ளது. இது ஆளுங்கட்சியின் நேரடி தலையீடு என்று அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
மற்றொரு பக்கம், விஜய்யின் அரசியல் த்ரில்லர் திரைப்படமான ‘ஜனநாயகன்’ ரிலீஸ் ஆவதில் ஏற்பட்டுள்ள சிக்கல். சிபிஎப்சி சான்றிதழ் அளிக்க மறுப்பதும், படம் தேர்தல் ஆணையத்தின் ஆய்வுக்கு அனுப்பப்பட்டிருப்பதும் பாஜக அரசின் சதி என்று விஜய் ஆதரவாளர்கள் கொதிக்கின்றனர். “இங்கே பிரசாரத்திற்கு திமுக இடைஞ்சல் கொடுக்கிறது, அங்கே மத்திய அரசின் மூலம் ‘ஜனநாயகன்’ படத்தை முடக்க பாஜக பார்க்கிறது” என்பதுதான் இவர்களின் பிரதான குற்றச்சாட்டு.
விஜய் தனது திரைப்படங்களில் வரும் ‘வசனங்களை’ நிஜ வாழ்க்கையிலும் நிரூபிப்பார் என்று நம்பும் தொண்டர்கள், “தொட்டவனை விஜய் என்றைக்கும் விட்டதில்லை; இன்னும் ஒரு மாதத்தில் தேர்தல் முடிவுகள் வரும்போது, இருவருமே விஜய்யின் பலம் என்னவென்று புரிந்துகொள்வார்கள்” என்று சவால் விடுகின்றனர்.
இந்த அடக்குமுறைகள் அனைத்தும் விஜய்க்கு ஆதரவாக ஒரு மிகப்பெரிய ‘அனுதாப அலையை’ உருவாக்கி வருவதாகவும், இது தேர்தலில் 200-க்கும் மேற்பட்ட இடங்களை வெல்ல வழிவகுக்கும் என்றும் அரசியல் விமர்சகர்கள் சிலர் கருதுகின்றனர்.
மொத்தத்தில், விஜய்யை முடக்க நினைக்கும் ஒவ்வொரு நகர்வும், அவரது வெற்றிக்கான படிக்கட்டுகளாக மாறி வருவதாகவே தெரிகிறது. ஒரு மாத இடைவெளியில் தமிழகத்தின் அரசியல் சிம்மாசனம் யாருக்கு என்பது தெரிந்துவிடும். அப்போது, “ஏன் விஜய்யை வம்புக்கிழுத்தோம்” என்று எதிரிகள் வருத்தப்படும் காலம் வரும் என்பதே தவெகவினரின் இப்போதைய ஆவேச குரலாக உள்ளது.