தமிழக அரசியலில் தேர்தல் களம் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில், ஆளுங்கட்சியான திமுக தலைமையிலான கூட்டணியில் முன்னெப்போதும் இல்லாத வகையில் ஒரு மிகப்பெரிய உட்கட்சிப் பூசல் வெடிக்கத் தொடங்கியுள்ளது.
உதயசூரியன் சின்னத்திற்கு நாங்கள் ஏன் வாக்களிக்க வேண்டும்?” என்ற கேள்வியை காங்கிரஸ் தொண்டர்கள் மட்டுமின்றி, விடுதலை சிறுத்தைகள், மதிமுக மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளின் அடிமட்ட தொண்டர்களும் வெளிப்படையாக எழுப்ப தொடங்கியுள்ளனர்.
பல தசாப்தங்களாக திராவிட கட்சிகளின் நிழலிலேயே தங்களது அரசியல் அடையாளத்தை தொலைத்துவிட்டதாக உணரும் இக்கட்சிகளின் தொண்டர்கள், இப்போது ஒரு மாற்றத்தை நோக்கி தீவிரமாக சிந்திக்க தொடங்கியுள்ளனர். இது திமுகவின் வெற்றியை உறுதி செய்யும் என கருதப்பட்ட ‘மெகா கூட்டணி’க்கே ஒரு பெரிய சவாலாக உருவெடுத்துள்ளது.
பொதுவாக தேர்தல் சமயங்களில் கட்சித் தலைமைகள் தங்களுக்குள் இடங்களை பகிர்ந்து கொண்டு ஒப்பந்தம் செய்து கொள்வது வழக்கம். ஆனால், அந்த ஒப்பந்தங்கள் அடிமட்ட தொண்டர்களின் மனநிலையைப் பிரதிபலிப்பதில்லை என்பதற்கு தற்போதைய சூழல் ஒரு சாட்சியாக உள்ளது.
குறிப்பாக, காங்கிரஸ் தொண்டர்கள் தங்களது கட்சியின் பாரம்பரியத்தையும் தேசிய அடையாளத்தையும் திமுகவின் அதிகார அரசியலுக்காக தாரை வார்த்து கொடுத்துவிட்டதாக தலைமை மீது அதிருப்தியில் உள்ளனர். அதேபோல், விசிக மற்றும் கம்யூனிஸ்ட் கட்சித் தொண்டர்கள் தங்களது கொள்கை ரீதியான போராட்டங்களுக்கு திமுக அரசு சரியான முக்கியத்துவம் அளிக்கவில்லை என்றும், தேர்தல் நேரத்தில் மட்டுமே தங்களை பயன்படுத்தி கொள்வதாகவும் குற்றம் சாட்டுகின்றனர்.
இந்த அதிருப்தி அலை, எந்த கூட்டணி மிகவும் பலமானது என்று திமுக பெருமிதத்துடன் நினைத்ததோ, அதையே இப்போது அதன் பலவீனமாக மாற்றியுள்ளது. கூட்டணி தலைவர்கள் மேடைகளில் கைகோர்த்து நின்றாலும், வாக்கு சாவடியில் தொண்டர்களின் விரல்கள் உதயசூரியன் சின்னத்தை நோக்கி போகுமா என்பது மிகப்பெரிய கேள்விக்குறியாகியுள்ளது.
இந்த பிளவை மிகச்சரியாகப் பயன்படுத்திக் கொள்ள துடிக்கும் மாற்று சக்திகள், குறிப்பாக இளைஞர்கள் மற்றும் நடுநிலை வாக்காளர்களை கவர்ந்து வரும் விஜய் தரப்பு, இந்த அதிருப்தி வாக்குகளை தங்கள் பக்கம் திருப்ப திட்டமிட்டு வருகின்றன. சொந்த கட்சியின் சின்னம் இல்லாத தொகுதிகளில் கூட்டணி கட்சிக்கு வாக்களிக்க விரும்பாத தொண்டர்கள், நோட்டாவிற்கு வாக்களிக்கவோ அல்லது மாற்று தலைமையை ஆதரிக்கவோ முடிவெடுத்து வருவது திமுக தலைமையை திணற செய்துள்ளது.
கூட்டணிக் கட்சிகளின் பலத்தை நம்பி போர் புரிய தயாரான திமுகவிற்கு, அந்த பலமே இப்போது ‘உள்ளடி’ வேலைகளால் பலவீனமாகி வருவது 2026 தேர்தல் முடிவுகளில் ஒரு மிகப்பெரிய மாற்றத்திற்கு வித்திடக்கூடும்.