தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் களம் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் வேளையில், சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் ஏற்பட்டுள்ள கடும் போக்குவரத்து நெரிசல் வாக்காளர்கள் மத்தியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, சென்னையின் நுழைவு வாயிலான கிளாம்பாக்கம் பேருந்து முனையம், வண்டலூர், செங்கல்பட்டு மற்றும் மதுரவாயல் உள்ளிட்ட பகுதிகளில் போக்குவரத்து ஸ்தம்பித்துள்ளதால், லட்சக்கணக்கான மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்று வாக்களிக்க முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இதில் தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்த ஏராளமான இளைஞர்கள் மற்றும் தொண்டர்கள் சிக்கிக்கொண்டுள்ளதால், அவர்கள் தங்களின் ஜனநாயக கடமையை ஆற்ற முடியாமல் போகுமோ என்ற அச்சத்தில் சமூக வலைதளங்கள் வாயிலாக உதவி கோரி வருகின்றனர்.
கிளாம்பாக்கம் பேருந்து முனையம் திறக்கப்பட்ட பிறகு ஏற்படும் முதல் பொதுத்தேர்தல் என்பதால், போதிய திட்டமிடல் இல்லாத காரணத்தால் போக்குவரத்து நிர்வாகம் முற்றிலுமாக முடங்கியுள்ளதாக பயணிகள் குற்றம் சாட்டுகின்றனர். பல மணி நேரமாக பேருந்துகள் மற்றும் தனியார் வாகனங்கள் நகர முடியாமல் ஒரே இடத்தில் நிற்பதால், ஊருக்கு சென்று வாக்களிக்க திட்டமிட்டிருந்த மக்கள் பெரும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர்.
“நாங்கள் இன்னும் கிளாம்பாக்கத்தையே தாண்டவில்லை, அதற்குள் வாக்குப்பதிவு நேரம் முடிந்துவிடுமோ?” என்ற ஆதங்கம் பொதுமக்களிடையே மேலோங்கியுள்ளது. இந்த போக்குவரத்து நெரிசலை சரிசெய்ய அதிகாரப்பூர்வ அமைப்புகள் எடுக்கும் நடவடிக்கைகள் போதவில்லை என்பதே கள நிலவரமாக உள்ளது.
இந்த இக்கட்டான சூழலில், கிளாம்பாக்கம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் தொண்டர்களுக்கு ஒரு அவசர அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. “டிவிகே பாய்ஸ்” என்று அழைக்கப்படும் அந்த இயக்கத்தின் இளைஞர்கள், உடனடியாக தங்களால் இயன்ற இடங்களில் களமிறங்கி போக்குவரத்தை சீர்செய்ய உதவ வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
அரசியலில் ஒரு மாற்றத்தை கொண்டுவர துடிக்கும் இளைஞர்கள், வாக்குப்பதிவு மையங்களுக்கு செல்வதற்கு தடையாக இருக்கும் இந்த நெரிசலை தன்னார்வலர்களாக நின்று சரிசெய்ய வேண்டியது அவசியமாகிறது. ஒரு தனிமனிதனின் வாக்கு சிதறிவிடக்கூடாது என்ற நோக்கத்தில், கட்சி வேறுபாடின்றி இந்தப் பணியில் ஈடுபட வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.
லட்சக்கணக்கான வாக்காளர்கள் சாலையில் முடங்கிக் கிடப்பது ஜனநாயக திருவிழாவிற்கு ஒரு பின்னடைவாக கருதப்படுகிறது. ஓட்டுப் போடுவதற்காகவே வேலையிலிருந்து விடுமுறை எடுத்துக்கொண்டு, பெரும் சிரமங்களுக்கு மத்தியில் கிளம்பி வந்த மக்கள், போக்குவரத்து குளறுபடியால் வாக்களிக்க முடியாமல் போனால் அது தேர்தல் ஆணையத்தின் தோல்வியாகவே பார்க்கப்படும்.
எனவே, சமூக வலைதளங்களில் இந்த வீடியோக்களையும் செய்திகளையும் அதிகம் பகிர்ந்து, அரசின் கவனத்திற்கு இதைக் கொண்டு செல்வதுடன், அருகில் இருக்கும் தன்னார்வலர்கள் அந்தந்த பகுதிகளில் போக்குவரத்தை முறைப்படுத்த உதவி செய்ய வேண்டும். ஒவ்வொரு நிமிடமும் மிக முக்கியமானது என்பதால், விரைந்து செயல்படுவது மட்டுமே தீர்வாக அமையும்.
இதுகுறித்து ஏற்கனவே விஜய் தனது சமூக வலைத்தளத்தில் ஆதங்கத்துடன் தேர்தல் ஆணையத்திற்கு சில வேண்டுகோள் வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.