முதல்வராக பதவியேற்கிறார் விஜய்.. டெல்லியில் இருந்து வந்த ராகுல் காந்தி.. முதல் வரிசையில் எஸ்.ஏ.சி, ஷோபா, த்ரிஷா.. அரசை ஆதரிக்கும் அரசியல் கட்சி தலைவர்கள் பங்கேற்பு.. ஸ்டாலின், உதயநிதி, ஈபிஎஸ், ரஜினிகாந்த் வருவார்களா? விஜய்க்கு நேரில் வாழ்த்து தெரிவித்த காவல்துறை உயரதிகாரிகள்.. ஐஏஎஸ் அதிகாரிகள்..

தமிழக அரசியல் வரலாற்றில் 60 ஆண்டுகால திராவிட ஆட்சிகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து, ஒரு புதிய சகாப்தத்தை படைக்கும் வகையில் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் இன்று தமிழக முதலமைச்சராக பதவியேற்கிறார். சென்னை நேரு உள்விளையாட்டரங்கமே விழாக்கோலம் பூண்டுள்ள நிலையில், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் லட்சக்கணக்கான தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் சென்னையில் குவிந்துள்ளனர். ஒரு நடிகராக கோடிக்கணக்கான ரசிகர்களை ஈர்த்த விஜய், இன்று ஒரு மாநிலத்தின் நிர்வாகியாக பொறுப்பேற்பது, தமிழக அரசியலில் பெரும் எதிர்பார்ப்பையும் மாற்றத்திற்கான நம்பிக்கையையும் விதைத்துள்ளது.

இந்த விழாவிற்கு தேசிய அளவில் முக்கியத்துவம் அளிக்கும் வகையில், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி டெல்லியிலிருந்து சிறப்பு விமானம் மூலம் சென்னை வந்து விழாவில் பங்கேற்றுள்ளார். விஜய்யின் அரசுக்கு காங்கிரஸ், விசிக, இடதுசாரிகள் மற்றும் முஸ்லீம் லீக் ஆகிய கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. தேர்தல் களத்தில் திமுகவுடன் நெருக்கம் காட்டிய ராகுல் காந்தி, இன்று விஜய்யின் பதவியேற்பு மேடையை அலங்கரிப்பது, வரும் காலங்களில் தமிழகத்தில் புதிய கூட்டணிக் கணக்குகள் உருவாகப்போவதற்கான வலுவான அடையாளமாகவே பார்க்கப்படுகிறது.

விழா மேடையின் முதல் வரிசையில் விஜய்யின் தந்தை இயக்குநர் எஸ்.ஏ. சந்திரசேகர் மற்றும் தாய் ஷோபா சந்திரசேகர் ஆகியோர் அமர்ந்து தங்களது மகனின் உன்னத தருணத்தை கண்டு நெகிழ்ச்சியடைய காத்திருக்கின்றனர் அவர்களுடன் விஜய்யின் நீண்டகால நண்பரும், சக கலைஞருமான நடிகை த்ரிஷாவுக்கு முதல் வரிசையில் சிறப்பு இடம் ஒதுக்கப்பட்டிருந்தது. த்ரிஷாவின் வருகை திரையுலகினரிடையே பெரும் பேசுபொருளாகியுள்ளது. மேலும், விஜய்யின் இந்த புதிய அரசியல் பயணத்தை வாழ்த்த திரையுலகின் முன்னணி நட்சத்திரங்கள் பலரும் அரங்கில் திரண்டுள்ளனர்.

அதே சமயம், அரசியல் ரீதியாக மு.க. ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி மற்றும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஆகியோருக்கு முறைப்படி அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. ஸ்டாலின் அவர்கள் தனது வாழ்த்துகளை தெரிவித்திருந்தாலும், அவர் நேரில் வருவாரா அல்லது பிரதிநிதியை அனுப்புவாரா என்ற எதிர்பார்ப்பு நிலவியது. ரஜினிகாந்த்வருகைக்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர். அரசியல் நாகரிகத்தின் அடிப்படையில் மாற்றுக் கட்சித் தலைவர்களை அழைத்திருப்பது, விஜய்யின் முதிர்ச்சியான அணுகுமுறையை வெளிப்படுத்துவதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.

பதவியேற்பு விழா தொடங்குவதற்கு முன்னதாகவே, தமிழக காவல்துறையின் உயர் அதிகாரிகள் மற்றும் மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் விஜய்யை நேரில் சந்தித்து பூங்கொத்துக்களை வழங்கி தங்களது வாழ்த்துகளை தெரிவித்தனர். புதிய அரசுடன் இணைந்து பணியாற்றுவதற்கான நிர்வாக ரீதியான நகர்வுகள் ஏற்கனவே தொடங்கிவிட்டதையே இது காட்டுகிறது. ஒரு கட்சியின் தலைவராக தொடங்கி, இன்று ஆளுநரிடம் இருந்து பதவி பிரமாணத்தை பெற்று தமிழகத்தின் முதல்வராகப் பொறுப்பேற்கும் விஜய்யின் இந்த நாள், தமிழக அரசியலின் திசையை மாற்றியமைக்கும் ஒரு பொன்னாளாக கருதப்படுகிறது.

Leave a Comment