விஜய்யை சந்தித்த ராகுல் காந்தியின் தூதுவர்கள் மாணிக்கம் தாகூர், பிரவீன் சக்கரவர்த்தி.. பிரதமர் வேட்பாளர் ராகுல் காந்தி என அறிவியுங்கள் என கோரிக்கை.. விஜய் முடியாது என்று சொல்லிவிட்டதாக தகவல்…

விஜய்யை சந்தித்த ராகுல் காந்தியின் தூதுவர்கள் மாணிக்கம் தாகூர், பிரவீன் சக்கரவர்த்தி.. பிரதமர் வேட்பாளர் ராகுல் காந்தி என அறிவியுங்கள் என கோரிக்கை.. விஜய் முடியாது என்று சொல்லிவிட்டதாக தகவல்… இன்னொருத்தரை பிரதமர் வேட்பாளர் என அறிவிக்க நான் என்ன ஸ்டாலினா? என கிண்டலடித்ததாகவும் தகவல்.. நீங்க ஆதரவு கொடுத்தது உண்மைதான்.. அதுக்காக உங்களுக்கு 2 அமைச்சர் பதவி, ஒரு ராஜ்யசபா சீட் கொடுத்தாச்சு.. உதவிக்கு உதவி சரியா போச்சு.. என கறாராக கூறிவிட்டாரா விஜய்?

ராகுல் காந்தியின் தூதர்களாக தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யை சந்திக்கச் சென்றதாக கூறப்படும் தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் மற்றும் ராஜ்யசபா எம்.பி. பிரவீன் சக்கரவர்த்தி விவகாரம் இப்போது தமிழக அரசியல் களத்தில் ஹாட் டாபிக்காக மாறியுள்ளது. சந்திப்பில் என்ன பேசப்பட்டது என்பதுதான் தற்போது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்படுகிறது. குறிப்பாக, விஜய்யை சமாதானப்படுத்தும் முயற்சியாகவே இந்த சந்திப்பு அமைந்ததாக கூறப்படும் நிலையில், அவர் எதிர்பார்த்த அளவுக்கு பதில் அளிக்கவில்லை என்ற தகவல் காங்கிரஸ் தரப்பில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாக பேச்சு எழுந்துள்ளது.

இதற்கு பின்னணியாக இருப்பது பிரதமர் வேட்பாளர் விவகாரம். இந்தியா டுடே – சி வோட்டர் சர்வே தொடர்பான தகவல்களில், பிரதமர் பதவிக்கான போட்டியில் ராகுல் காந்திக்கு அடுத்த நிலையில் விஜய்க்கும் குறிப்பிடத்தக்க ஆதரவு இருப்பதாக கூறப்பட்டது. இதையடுத்து, தவெக நிர்வாகிகள் மற்றும் ஆதரவாளர்கள் சிலர் விஜய்தான் அடுத்த பிரதமர் வேட்பாளர் என்று பேச ஆரம்பித்திருப்பது காங்கிரஸ் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியதாக சொல்லப்படுகிறது. குறிப்பாக, இந்த பிரசாரம் வடஇந்திய மாநிலங்களிலும் தீவிரமாக பேசப்படுவதாக காங்கிரஸ் தரப்பில் கவலை இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதன் வெளிப்பாடாகத்தான் கன்னியாகுமரியில் அமைச்சர் ராஜேஷ்குமார் பேசிய கருத்துகளும் பார்க்கப்படுகின்றன. 2029-ல் பிரதமர் வேட்பாளர் ராகுல் காந்திதான் என்றும், அதை தவெக ஏற்றுக்கொள்ளவில்லை என்றால் தாங்கள் அமைச்சரவையில் இருந்து விலகும் நிலை ஏற்படும் என்றும் அவர் கடுமையாக பேசியிருந்தார். இந்த பேச்சு கூட்டணி அரசியலில் பெரிய விவாதத்தை கிளப்பியது. ஒரு பக்கம் விஜய்யை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தும் பேச்சு, இன்னொரு பக்கம் ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர் என்ற காங்கிரஸின் நிலைப்பாடு என இரு தரப்புக்கும் இடையிலான உரசல் வெளிப்படையாகத் தொடங்கியிருப்பதாக அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர்.

இந்த சூழலில்தான் சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் விஜய்யை மாணிக்கம் தாகூரும், பிரவீன் சக்கரவர்த்தியும் சந்தித்துள்ளனர். பிரவீன் சக்கரவர்த்தி மாணிக்கம் தாகூருடன் சென்றது, இந்த சந்திப்புக்கு கூடுதல் முக்கியத்துவத்தை ஏற்படுத்தியது. இது வெறும் சாதாரண சந்திப்பு அல்ல; டெல்லி காங்கிரஸ் தலைவர்களின் முக்கியமான அரசியல் செய்தியுடன் இருவரும் வந்திருக்கலாம் என்ற எதிர்பார்ப்பும் எழுந்தது. திமுக ஏற்கனவே தவெக அரசுக்கு ஆதரவு கொடுத்த விவகாரத்தில் காங்கிரஸ் மீது அதிருப்தியில் இருப்பதாகவும், மறுபக்கம் பாஜக திமுகவை அணுகி வருவதாகவும் பேசப்படும் நிலையில், காங்கிரஸ் தனது அரசியல் இடத்தை பாதுகாக்க வேண்டிய கட்டாயத்தில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில், “உங்கள் கட்சியினர் விஜய்தான் அடுத்த பிரதமர் என்று பேசுவதை கட்டுப்படுத்துங்கள்; குறிப்பாக வடஇந்தியாவில் இந்த பிரசாரம் தீவிரமாகிறது. இது டெல்லி தலைவர்களுக்கு கவலையை ஏற்படுத்துகிறது” என்ற கருத்தை காங்கிரஸ் தரப்பினர் விஜய்யிடம் எடுத்துச் சொன்னதாக அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்படுகிறது. ஆனால், இந்த பேச்சை விஜய் எதிர்பார்த்த அளவுக்கு ஏற்றுக்கொள்ளவில்லை என்றும் கூறப்படுகிறது. சந்திப்பின்போது அவரது உடல்மொழி கூட அந்த உரையாடலில் பெரிய ஆர்வம் காட்டாத வகையில் இருந்ததாகவும் தகவல்கள் உலா வருகின்றன. இருப்பினும், இவை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் அல்ல என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும், சந்திப்பு முடிந்தபோது வழக்கமான அரசியல் மரியாதைக்காக “சரி, நான் பார்த்துக்கொள்கிறேன்”, “கட்சியினரிடம் பேசுகிறேன்” போன்ற வார்த்தைகளை விஜய் கூறுவார் என எதிர்பார்க்கப்பட்டதாகவும், ஆனால் அதுபோன்ற உறுதியான பதில் எதுவும் கிடைக்கவில்லை என்றும் கூறப்படுகிறது. இதனால் காங்கிரஸ் தரப்பு சற்று அப்செட்டில் இருப்பதாக அரசியல் வட்டாரங்களில் பேச்சு எழுந்துள்ளது. ஒருபுறம் ராகுல் காந்தியின் பிரதமர் கனவை முன்னிறுத்த வேண்டிய கட்டாயம் காங்கிரசுக்கு இருக்கிறது; மறுபுறம் விஜய்யின் தேசிய அரசியல் உயர்வு குறித்த பேச்சு வேகமெடுத்து வருகிறது. இந்நிலையில், இந்த சந்திப்பு ஒரு சாதாரண சந்திப்பா அல்லது 2029 அரசியலுக்கான முக்கியமான எச்சரிக்கை சந்திப்பா என்பதுதான் இப்போது அரசியல் களத்தில் எழும் பெரிய கேள்வியாக உள்ளது.

Leave a Comment