latest news
தெருவெங்கும் மரண ஓலம்!.. விஷ சாராயத்துக்கு 40 பேர் பலி!.. கள்ளக்குறிச்சியில் சோகம்!..
நேற்று மாலையிலிருந்தே தமிழகத்தில் உலுக்கிய சம்பவமாக கள்ளக்குறிச்சி கள்ளச்சாரய விவகாரம் மாறி இருக்கிறது. முதலில் ஒருவர் பலி என்றார்கள். அதன்பின் 3 பேர் உயிரிழந்தார்கள் என செய்திகள் வெளியானது. கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் பல வருடங்களாகவே கள்ளச்சாராயத்தை தொடர்ந்து பலரும் அருந்தி வந்தனர்.
கடந்த செவ்வாக்கிழமை மாலை அந்த பகுதியில் இருக்கும் சிலர் கள்ளச்சாராயம் குடித்துவிட்டு வீட்டிற்கு வந்துள்ளனர். அதன்பின் வயிறு வலி, கண் தெரியவில்லை என சொல்ல சிலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அதில் ஒருவர் உயிரிழக்க, அவரின் மரணத்திற்கு போனர் சில அங்கேயும் கள்ளச்சாராயம் வாங்கி குடித்துள்ளனர்.
இதனால், அந்த பகுதியில் பலரும் உடல்நிலை பாதிக்கப்பட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். பலி எண்ணிக்கை உயர்ந்து கொண்டே போனது. தற்போது வரை விஷ சாராயம் குடித்து 40 பேர் உயிரிழந்துவிட்டனர். 10 பேர் கண் பார்வை இழந்துள்ளனர். அவர்கள் குடித்த சாராயத்தில் மெத்தனால் கலந்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இப்போதும் நூற்றுக்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது தொடர்பாக காவல்துறை விசாரித்து வருகின்றனர். கள்ளச்சாராயம் விற்பனை செய்து வருபவர்கள் போலீசார் நினைத்திந்ருதால் தடுத்திருக்க முடியும். ஆனால், அவர்கள் அதை செய்யவில்லை என்பதுதான் அந்த பகுதியில் வசிக்கும் பலரின் குற்றச்சாட்டாக இருக்கிறது.
பாக்கெட் சாராயம் விற்ற 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அதேநேரம், கருணாபுரத்தின் ஊருக்கு நடுவேதான் கள்ளச்சாராயம் விற்றவரின் வீடு இருக்கிறது. அங்குதான் கள்ளச்சாராயம் விற்பனை செய்யப்பட்டு வந்தது. எனவே, போலீசாருக்கு கண்டிப்பாக அது தெரியும் என சொல்லப்படுகிறது.