அதெப்படி நீங்க இவ்வளவு Cool-ஆ இருக்கீங்க? பிரீத்தி ஜிந்தா கேள்விக்கு ரிக்கி பாண்டிங் சொன்ன டைமிங் பதில்

கிரிக்கெட் உலகில் மிகவும் வெற்றிகர கேப்டன்களில் ஒருவர். உலகக் கோப்பை இறுதிப் போட்டிகளில் வெற்றி வாகை சூடுவதில் ஸ்பெஷலிஸ்ட் ஆக விளங்கியவர் முன்னாள் ஆஸ்திரேலிய அணி கேப்டன் ரிக்கி பாண்டிங். தற்போது பயிற்சியாளர் மற்றும் ஆலோசகர் பணியை மேற்கொண்டு வரும் ரிக்கி பாண்டிங், சமீபத்தில் நடந்து முடிந்த ஐ.பி.எல். தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணியின் பயிற்சியாளராக செயல்பட்டார்.

இந்த சீசனில் பஞ்சாப் கிங்ஸ் அணி இறுதிப் போட்டி வரை முன்னேறியது. எனினும், இறுதிப் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை எதிர்கொண்ட பஞ்சாப் கிங்ஸ் அணி கடைசி வரை போராடி 6 ரன்களில் தோல்வியை தழுவி கோப்பையை தவறவிட்டது. பஞ்சாப் அணியின் இணை உரிமையாளரான பிரீத்தி ஜிந்தா பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் உடன் உரையாடிய வீடியோவினை பஞ்சாப் அணி வெளியிட்டு உள்ளது.

அந்த வீடியோவில் பிரீத்தி ஜிந்தா பேச்சு வழக்கில் அதெப்படி மிகவும் ஆக்ரோஷமான நபராக அறியப்படும் ரிக்கி பாண்டிங் டக்-அவுட்டில் அவ்வளவு அமைதியாக இருக்க முடியும்? என்று கேள்வி எழுப்பினார். “களத்தில் வீரராக இருக்கும் போது அத்தனை ஆக்ரோஷமாக இருக்கின்றீர்கள், ஆனால் களத்திற்கு வெளியில் எப்படி இத்தனை அமைதியாக இருக்க முடியும்? என்று கேட்டார்.

இதற்கு பதிலளித்த ரிக்கி பாண்டிங், “சமயங்களில் நீங்கள் என்னுடன் வந்து டக்-அவுட்டில் உட்கார வேண்டும், ஏனென்றால் நான் எப்போதும் அவ்வளவு அமைதியாக இருக்கும் நபர் இல்லை. நான், இயல்பிலேயே அதிக கோபம் கொள்ளும் நபர் தான், அதுவும் கிரிக்கெட் நேரத்தில் அந்த கோபம் இன்னும், அதிகமாகவே இருக்கும்.”

“கிரிக்கெட் இல்லாத சமயங்களில் நான் யாருடன் வேண்டுமானாலும் அமர்ந்து கொண்டு நக்கலடித்து பேசிக்கொண்டு காஃபி குடித்துக் கொண்டிருக்க முடியும். ஆனால், கிரிக்கெட் சமயத்தில், அணியிடம் இருந்து சிறப்பானதை வெளிக்கொண்டுவருவது என் பணி. அங்கு என்னால் ஒரு நாள், ஒரு நிமிடம் கூட வீணடிக்க முடியாது.”

“பயிற்சி நேரத்தில் நான் தலைசிறந்த பயிற்சியாளராக இருக்க முயற்சிக்க மாட்டேன், என்னுடன் இருக்கும் வீரர்கள் அவர்களது முழு திறமையை வெளிப்படுத்தி அவர்கள் சிறந்த வீரர்களாக இருக்க செய்யும் பயிற்சி நேரத்தை என்னால் வீணடிக்க முடியாது,” என்று ரிக்கி பாண்டிங் தெரிவித்தார்.

Leave a Comment