உங்களுக்கு 10 வயது சினிமா என்றால், எங்களுக்கு பல வருட கால அரசியல்! – விஜய்க்கு எதிராக தமிழிசை விளாசல்

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் நேற்று ஈரோட்டில் நடைபெற்ற மக்கள் சந்திப்புக் கூட்டத்தில், “களத்தில் இல்லாதவர்களுடன் எங்களுக்குப் போட்டி இல்லை” என்று பேசியிருந்தார். விஜய்யின் இந்த மறைமுக விமர்சனத்திற்கு பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் இன்று மிகக் கடுமையான பதிலடியைக் கொடுத்துள்ளார்.

திடீரென வருவதும், காணாமல் போவதும் களமா?:
கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழிசை சௌந்தர்ராஜன், “களத்தில் இல்லாதவர்களுடன் போட்டி இல்லை என்று விஜய் கூறுகிறார். உண்மையில் விஜய் தமக்குத் தாமே தான் இதைச் சொல்லிக் கொள்கிறார் என்று நான் பார்க்கிறேன். ஏனென்றால், விஜய் திடீரென்று அரசியலுக்கு வருகிறார், திடீரென்று காணாமல் போகிறார். ஆனால் பாஜக அப்படியல்ல,பல மாநிலங்களில் ஆட்சியில் இருப்பதோடு, தமிழகத்திலும் 18 சதவீத வாக்குகளைப் பெற்று வலுவாக உள்ளது” என அவர் குறிப்பிட்டார்.

திமுக எதிர்ப்பு ஓகே.. :

திமுகவை விஜய் ‘தீய சக்தி’ என்றும், தங்களது பிரதான எதிரி என்றும் விமர்சிப்பதை வரவேற்பதாகக் கூறிய தமிழிசை, தேர்தல் களம் குறித்த விஜய்யின் கணிப்பு தவறு எனச் சுட்டிக்காட்டினார்.

“திமுக எதிர்க்கப்பட வேண்டிய கட்சி என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால், திமுகவுடன் மட்டும்தான் போட்டி என்று விஜய் எதை வைத்துச் சொல்கிறார்? தமிழகத்தில் திமுக கூட்டணிக்கும், அதிமுக – பாஜக கூட்டணிக்கும் இடையே தான் நேரடிப் போட்டி நிலவுகிறது. கள எதார்த்தம் இப்படியிருக்க, விஜய் எதைக் கணக்கிட்டுப் பேசுகிறார் எனத் தெரியவில்லை” என்று அவர் வினவினார்.

சினிமாவும் அரசியலும் ஒன்றல்ல :

விஜய்யின் அனுபவமின்மையைச் சுட்டிக்காட்டிய தமிழிசை, அரசியலில் வசனம் பேசி வெற்றி பெற முடியாது என எச்சரித்தார். “அரசியலில் பஞ்ச் டயலாக் பேச இது ஒன்றும் சினிமா கிடையாது. 10 வயது சினிமா அனுபவத்தில் வந்த விஜய்க்கே இவ்வளவு பிணைப்பு இருக்கும்போது, பல தசாப்தங்களாக மக்களுடன் மக்களாகக் களத்தில் நின்று பணியாற்றும் எங்களுக்கு மக்களுடன் எவ்வளவு பெரிய பிணைப்பு இருக்கும் என்பதை அவர் உணர வேண்டும்” என தமிழிசை ஆவேசமாகத் தெரிவித்தார்.

விஜய்யின் அரசியல் வருகை தமிழகத்தில் மூன்றாவது முனையை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், தமிழிசை சௌந்தர்ராஜனின் இந்தத் தாக்குதல் அரசியல் வட்டாரத்தில் புதிய விவாதத்தைக் கிளப்பியுள்ளது.

Leave a Comment