தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு முக்கியப் தலைவரின் கைது என்பது வெறும் சட்டப் பூர்வமான நடவடிக்கை மட்டுமல்ல; அது இருதரப்புக்கும் இடையிலான மாபெரும் அரசியல் சதுரங்க விளையாட்டு. இத்தகைய சூழலில் எப்போதும் இரண்டு விதமான அரசியல் கணக்குகள் மிகத் தீவிரமாகச் செயல்படும். ஒன்று, கைது செய்யப்படும் தலைவர் தன் மீதான நடவடிக்கையை ஒரு மாபெரும் “தியாகமாக” மக்கள் மத்தியில் பிம்பப்படுத்த முயற்சிப்பார்; அதன் மூலம் அனுதாப அலையை உருவாக்கித் தன் அரசியல் வாழ்வை மீட்டெடுக்க நினைப்பார். இன்னொன்று கைது நடவடிக்கை எடுத்த ஆட்சியாளர்கள் அதைத் தங்களின் சட்ட ஒழுங்குப் பராமரிப்புச் சாதனையாகவும், ஊழலுக்கு எதிரான துணிச்சலான முடிவாகவும் மேற்கோள் காட்ட முனைவார்கள். ஆனால், இந்த இரண்டு கணக்குகளில் களத்தில் யாருடைய நரேட்டிவ் ஜெயிக்கிறது என்பதில்தான் உண்மையான அரசியல் வெற்றியே அடங்கியிருக்கிறது.
கடந்த கால வரலாற்றைத் திரும்பிப் பார்த்தால், கைது நடவடிக்கைகளில் உருவான பிம்பங்கள் ஆட்சியாளர்களின் தலையெழுத்தையே மாற்றியமைத்திருக்கின்றன. உதாரணத்திற்கு, முன்னாள் முதலமைச்சர் மு.க. கருணாநிதி நள்ளிரவில் கைது செய்யப்பட்டபோது, அன்றைய முதலமைச்சர் ஜெயலலிதா மீது மக்கள் மத்தியிலும் தேசிய அளவிலும் மிகப்பெரிய கெட்ட பெயர் உருவானது. அது அனுதாப அலையாக மாறி திமுகவிற்கு அரசியல் ரீதியாகப் பெரும் பலத்தைத் தந்தது. அதேபோல, ஜெயலலிதா மீதான வழக்குகள் மற்றும் கைது நடவடிக்கைகளின் போது, கருணாநிதி மிகவும் கண்ணியமாகவும், ‘டீசண்டாகவும்’ நடந்துகொண்டார் என்ற பெயரையே பெற்றார். பழிவாங்கும் அரசியல் செய்யாமல் சட்டத்தை அதன் வழியில் செல்ல விட்டதாகவே மக்கள் அதைப் பார்த்தார்கள்.
ஆனால், தற்போதைய அரசியல் சூழலில் உதயநிதி ஸ்டாலின் தொடர்பான கைது மற்றும் அது சார்ந்த சர்ச்சைகளில் களநிலவரம் முற்றிலும் வேறு திசையில் நகர்ந்துள்ளது. இந்த விவகாரத்தில் முதல்வர் விஜய் மிகவும் புத்திசாலித்தனமாகவும், முதிர்ச்சியோடும் காய்களை நகர்த்தியுள்ளார். பாரம்பரியமாக நடக்கும் “அரசியல் பழிவாங்கல்” அல்லது “தியாகப் பிம்பம்” என்ற இரு வழக்கமான எல்லைக்குள்ளும் இந்த சம்பவத்தைச் செல்ல விடாமல், தவெகவின் அரசியல் வியூகம் அதை முற்றிலும் வேறு தளத்திற்கு எடுத்துச் சென்றுள்ளது. உதயநிதியின் தரப்பு இதை ஒரு தியாகமாகவோ அல்லது வீரக் கதையாகவோ மாற்றி அனுதாபம் தேட முயன்ற முயற்சியை ஆரம்பத்திலேயே அசைத்துப் பார்த்தது.
குறிப்பாக, இச்சம்பவத்தின் போது உதயநிதி பதற்றமடைந்து, “பாத்ரூமில் ஒளிந்து கொண்டார்” என்பது போன்ற பிம்பமும் நரேட்டிவும் சமூக வலைதளங்கள் மற்றும் மக்கள் மத்தியில் மிக வேகமாகப் பரப்பப்பட்டு கட்டமைக்கப்பட்டது. ஒரு அரசியல் தலைவர் கைது நடவடிக்கைக்கோ அல்லது எதிர்ப்புகளுக்கோ அஞ்சி ஓடுகிறார் என்ற பிம்பம் உருவாக்கப்படும்போது, அவர் உருவாக்க நினைக்கும் தியாக பிம்பம் சுக்குநூறாக உடைந்துவிடும். உதயநிதி விஷயத்தில் சரியாக இதுவே நடந்தது; அவர் தன்னை ஒரு வீரன் போலக் காட்டிக்கொள்ள முற்பட்ட வேளையில், எதிரத்தரப்பு உருவாக்கிய இந்தத் தற்காப்பு பிம்பம் அவரை மக்கள் மத்தியில் பலவீனமான தலைவராகச் சித்தரிப்பதில் வெற்றி பெற்றது.
மற்றொரு புறம், இந்த ஒட்டுமொத்த நகர்விலும் தவெக தலைவர் விஜய் காட்டிய நிதானமும், அரசியல் ரீதியான கூர்மையான அணுகுமுறையும் நடுநிலையாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. பழைய திராவிடக் கட்சிகள் போல வன்முறையிலோ அல்லது தரங்கெட்ட விமர்சனங்களிலோ இறங்காமல், உதயநிதி தரப்பின் பலவீனத்தைச் சரியான நேரத்தில் சுட்டிக்காட்டி அரசியல் களத்தில் மேலாதிக்கம் செலுத்தியுள்ளார். ஆட்சியாளர்களின் அதிகார பலத்தை விட, ஒரு தலைவரின் பிம்பத்தைச் சட்டென மாற்றியமைக்கும் மக்களின் மனநிலையைக் கணித்து விஜய் செயல்பட்டது, அவரது அரசியல் முதிர்ச்சியைக் காட்டுவதாக அமைந்தது.
ஒட்டுமொத்தத்தில், ஒரு தலைவரின் கைது நாடகத்தில் யாருக்கு வெற்றி என்பதில் எந்தக் குழப்பமும் தேவையில்லை. கைது செய்யப்பட்டவர் தன்னைத் தியாகியாகக் காட்டத் தோற்று, தற்காப்பு தேடிய தலைவராக மக்கள் மத்தியில் நின்றுவிட்டார். அதேவேளையில், நிதானமான மற்றும் புத்திசாலித்தனமான நகர்வுகளால் விஜய் இந்த அரசியல் சதுரங்கத்தில் மக்களின் ஆதரவையும், பிம்ப ரீதியான மாபெரும் வெற்றியையும் அறுவடை செய்துள்ளார். மக்கள் யாருடைய பக்க நியாயத்தை ஏற்றுக்கொண்டார்கள், யாரை உண்மையான தலைவராகப் பார்க்கிறார்கள் என்பதை இந்த சம்பவங்கள் தெள்ளத்தெளிவாகப் உணர்த்துகின்றன.