புலி பதுங்குவது பாய்வதற்குத்தான்.. விஜய்யின் அமைதிக்கு பெரிய பவர் உண்டு.. நடிகர் ஜீவா ரவியின் அதிரடி கருத்து!

நடிகரும், சினிமா பிரபலமுமான ஜீவா ரவி, இன்று கோபிசெட்டிபாளையத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் (த.வெ.க) முக்கிய பிரமுகரான செங்கோட்டையனை சந்தித்து அக்கட்சியில் விஜயின் கட்சியில் இணைந்துள்ளதால் அவருக்கு வாழ்த்தி தெரிவித்தார். அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நடிகர் விஜய்யின் அரசியல் துணிச்சலைப் பாராட்டிப் பேசியதுடன், த.வெ.க.வின் இலக்கு குறித்துத் தெளிவாக எடுத்துரைத்தார்.

மக்கள் நலனுக்காகத் துடிக்கும் தலைவர்:
நடிகர் விஜய்யின் துணிச்சல் தன்னை மிகவும் கவர்ந்ததாகக் குறிப்பிட்ட ஜீவா ரவி, அவர் எந்தவொரு விஷயத்தைச் சொன்னாலும், அதை உண்மையாகவும் உறுதியாகவும் செய்து முடிப்பார் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

“விஜய் சாருடைய துணிவு எனக்கு ரொம்ப பிடிக்கும். அவர் ஒரு விஷயம் சொன்னா உண்மையா செய்வாரு. அவர் பேச்சிலேயே தெரியுது மக்களுக்கு எவ்வளவு நல்லது பண்ணனும்னு துடிக்கிறார் என்று. சில பேரின் பேச்சை வைத்து கண்டுபிடித்து விடலாம் அவர்கள் மக்களுக்கு நல்லது செய்ய வருகிறார்களா இல்லையா என்று,” என்று ஜீவா ரவி கூறினார்.

மேலும், விஜய்யுடன் நடித்த அனுபவத்தைப் பகிர்ந்துகொண்ட அவர், “விஜய் சார் உடன் நான் நடித்திருக்கிறேன். அவர் என்னிடம் பேசும்போது எல்லாம் மக்களுக்காக ஏதாவது நல்லது செய்ய வேண்டும் என்று சொல்லிக் கொண்டே இருப்பார். அதனாலே அவரை எனக்கு ரொம்ப பிடித்து விட்டது,” என்றார்.

விஜய்யின் அமைதிக்கு பெரிய பவர்:
விஜய் யாருடைய பின்புலமும் இல்லாமல் தனித்து கட்சியை ஆரம்பித்தார் என்றும், அவருக்கென்று தமிழகம் முழுவதும் மிகப்பெரிய இளைஞர் பட்டாளம் உருவாகி இருக்கிறது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

“இந்த தமிழ்நாட்டிற்கு ஒரு நல்ல தலைவர் வேண்டும். அதற்காக சிறப்பாக நாங்கள் பாடுபடுவோம். விஜய்யின் அமைதிக்கு என்றுமே பெரிய பவர் உண்டு. வெளியே வந்து கத்தனும் பாக்கணும் என்று அவசியம் இல்லை,” என்று தெரிவித்த அவர், விஜய்யின் அமைதியான போக்கிற்கு ஒரு விளக்கமும் அளித்தார்.

“விஜய் எல்லா இடங்களுக்கும் சென்றிருக்கிறார். கரூர்க்கு திரும்ப சென்றிருந்தார் என்றால் பெரிய சம்பவங்கள் நடக்க வாய்ப்பிருக்கு. அதற்காகத்தான் அவர் எப்போதும் அமைதியாக இருக்கிறார். புலி பதுங்குவது பாய்வதற்காகத்தான் ஆனால் விஜய் பாய மாட்டார், மக்களுக்கு நல்லது செய்ய இறங்கி வருவார். அவர் தேவையில்லாமல் வெளியே வராமல் இருப்பது தான் எல்லோருக்கும் நல்லது. ஆனால் தற்போது வெளியே வர ஆரம்பித்துவிட்டார் விஜய்,” என்று ஜீவா ரவி தெரிவித்தார்.

வெற்றி பெறாவிட்டாலும் மக்கள் பணி தொடரும்:
2026 சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெறுவது மட்டுமே தங்கள் இலக்கு அல்ல என்று ஜீவா ரவி தெளிவுபடுத்தினார்.  “2026 தேர்தலில் நாங்கள் வெற்றி பெறுவோம் என்று சொல்லவில்லை, மக்களுக்கு நல்லது செய்ய வந்திருக்கிறோம். வெற்றி பெறவில்லை என்றாலும் மக்கள் நலப் பணிகளை செய்து கொண்டே இருப்போம்,” என்று நடிகர் ஜீவா ரவி உறுதியாகத் தெரிவித்தார்.

Leave a Comment