தமிழக அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள தமிழக வெற்றிக் கழகத்தில் (TVK) இருந்து அதிரடியாக வெளியேறிய நடிகர் தாடி பாலாஜி, தான் விலகியதற்கான காரணங்களை முதல்முறையாக வெளிப்படையாகப் பகிர்ந்துள்ளார்.
விஜய் எனக்கு அவர் ‘நண்பன்’:
சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய தாடி பாலாஜி, தவெக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் குறித்து அதிருப்தியை வெளிப்படுத்தினார். அவர் கூறியதாவது,
“அந்தக் கட்சியில் இருப்பவர்கள் அனைவருமே விஜய் என்கிற அந்த ஒரு ‘முகத்திற்காகத்தான்’ ஓடுகிறார்கள். ஆனால், நான் அவர்களை விட ஒரு படி மேலே போய், என் நண்பனுக்காக (விஜய்) ஓடினேன். சினிமாவில் அவரை நண்பனாக ஏற்றுக்கொண்ட நான், அரசியல் களத்தில் இப்போது வரை அவரை ‘தலைவர்’ என்றுதான் அழைக்கிறேன். ஆனால், நான் ஓடிய வேகத்திற்கு அங்கு எனக்கான அங்கீகாரம் கிடைக்கவில்லை.”
மரியாதை இல்லாத இடத்தில் இருக்க முடியாது!
தவெக-வில் இருந்து விலகி ஜோஸ் சார்லஸ் மார்ட்டினின் (LJK) கட்சியில் இணைந்ததற்கான காரணத்தை விளக்கிய அவர், “அரசியலுக்கு வருவது பதவிக்காக மட்டுமல்ல, ஒரு பவர் (அதிகாரம்) கிடைத்தால் தான் நம்மால் மக்களுக்கு கூடுதலாக உதவ முடியும். நாம் சொல்வதை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும், அதற்கான வாய்ப்பை அவர்கள் வழங்க வேண்டும். அப்படிப்பட்ட மரியாதை எங்கு கிடைக்கிறதோ அங்குதான் நான் இருப்பேன். எனக்கான இடம் தவெக-வில் இல்லை என்பதை உணர்ந்ததால் வெளியே வந்தேன்,” என உருக்கமாகத் தெரிவித்தார்.
எதிரிகள் இருந்தால்தான் வளர்ச்சி!
சினிமாவில் வாய்ப்பு இல்லாததால் தான் நடிகர்கள் அரசியலுக்கு வருகிறார்கள் என்ற விமர்சனத்திற்குப் பதிலளித்த பாலாஜி, “தனிப்பட்ட தாடி பாலாஜியால் மட்டும் எதையும் சாதித்துவிட முடியாது. ஒரு கூட்டமைப்பு தேவைப்படுகிறது. ஒருவன் முன்னுக்கு வருகிறான் என்றால் அவனுக்கு எதிரிகள் அதிகமாக இருப்பார்கள். எதிரிகள் இருந்தால் தான் வாழ்க்கையில் வளர முடியும்,” என அதிரடியாகப் பேசினார்.
விஜய்யின் தீவிர விசுவாசியாக இருந்து, அவரது உருவத்தையே நெஞ்சில் பச்சை குத்திய தாடி பாலாஜி, தற்போது அக்கட்சியிலிருந்து விலகி “மரியாதை முக்கியம்” எனப் பேசியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.