நண்பேண்டான்னு சொல்லிட்டு நழுவிட்டாரே! .. தவெக-விலிருந்து விலகி கட்சி மாறிய தாடி பாலாஜி.

தமிழக வெற்றிக் கழகத்தின் தீவிர ஆதரவாளராகவும், அக்கட்சியின் தலைவர் விஜய்யின் நீண்டகால நண்பராகவும் அறியப்பட்ட நடிகர் தாடி பாலாஜி, இன்று திடீரென தவெக-வில் இருந்து விலகி, லட்சிய ஜனநாயக கட்சியில் (LJK) இணைந்துள்ளார்.

நெஞ்சில் பச்சை குத்தியும் பலனில்லை:

நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்கியதில் இருந்து அவருக்குத் தீவிர ஆதரவு தெரிவித்து வந்தவர் தாடி பாலாஜி. விஜய்யின் முகத்தைத் தனது நெஞ்சில் பச்சை குத்தும் அளவிற்கு விசுவாசத்தைக் காட்டிய அவர், தவெக-வின் முதல் மாநில மாநாடு மற்றும் பல்வேறு பொதுக்கூட்டங்களில் முன்னிலை வகித்தார். தவெக-வில் தனக்கு முக்கியப் பொறுப்பு வழங்கப்படும் என அவர் எதிர்பார்த்துக் காத்திருந்ததாகக் கூறப்படுகிறது.

விலகலுக்கு என்ன காரணம்?

சமீபகாலமாக தவெக நிர்வாகிகளுக்கும் தாடி பாலாஜிக்கும் இடையே பனிப்போர் நிலவி வந்ததாகத் தெரிகிறது. குறிப்பாக, “விஜய்க்கு 100% அரசியல் தெரியாது”, “அவரைச் சுற்றி சரியான ஆட்கள் இல்லை” எனச் சில அதிருப்தி கருத்துக்களை அவர் அவ்வப்போது தெரிவித்து வந்தார். மேலும், கட்சி நிகழ்ச்சிகளில் அவருக்குச் சரியான முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை என்ற ஆதங்கமும் அவருக்கு இருந்ததாகச் சொல்லப்படுகிறது.

லாட்டரி அதிபர் சாண்டியாகோ மார்ட்டின் மகன் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் லட்சிய ஜனநாயக கட்சியை தொடங்கியுள்ளார். மார்ட்டின் முன்னிலையில் தாடி பாலாஜி, தன்னை அந்தக் கட்சியில் இணைத்துக் கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “விஜய் எப்போதும் என் இனிய நண்பர் தான். ஆனால், லட்சிய ஜனநாயக கட்சியின் கொள்கைகள் என்னை மிகவும் கவர்ந்துள்ளன. இங்கு எனக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கும் என நம்புகிறேன்” என்றார்.

அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு:

ஈரோடு பொதுக்கூட்டம் வெற்றிகரமாக முடிந்து, விஜய்யின் அரசியல் எழுச்சி அதிகரித்துள்ள நிலையில், அவரின் ஆரம்பகால விசுவாசியான தாடி பாலாஜி விலகியது தவெக-வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Comment