தமிழக அரசியல் களம் 2026 சட்டமன்றத் தேர்தலை நோக்கி விறுவிறுப்பாக நகர்ந்து வரும் நிலையில், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள கருத்துக்கள் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளன. குறிப்பாக, ஒரு படத்தின் வெற்றியோ அல்லது சினிமா செல்வாக்கோ அரசியலைத் தீர்மானிக்காது என அவர் பேசியுள்ளது தவெக தலைவர் விஜய்யை நோக்கிய விமர்சனமாகவே பார்க்கப்படுகிறது.
சினிமா வேறு.. அரசியல் வேறு:
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, “அரசியல் என்பது ஏதோ ஒரு திரைப்படத்தின் மூலமாகத் தீர்மானிக்கப்படுவது அல்ல. ஒரு படம் நன்றாக இருக்கிறது என்பதற்காக ஒருவரைத் தலைவராக ஏற்றுக்கொள்வது அரசியலுக்கு அழகல்ல. மக்கள் தங்கள் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும்,” என்று தெரிவித்தார்.
பிங்கி பாங்கி போட்டுப் பார்க்கும் தேர்தல் அல்ல:
தொடர்ந்து பேசிய அவர், புதிய அரசியல் வருகைகள் குறித்துக் கூறுகையில்,”புதுசா ஒருத்தர் வந்திருக்காரே, அவருக்கு ஒரு வாய்ப்பு கொடுத்துப் பார்க்கலாம் என ‘பிங்கி பாங்கி’ (Inky Pinky Ponky) போட்டுப் பார்க்கும் தேர்தல் அல்ல இது. தமிழகத்தின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் முக்கியமான தேர்தல். ஆட்சியில் இருப்பவர்களை அகற்றுவது மட்டும் இலக்கல்ல, அவர்களுக்குப் பதில் யார் வந்தால் சரியாக இருக்கும் என்பதைச் சிந்தித்து மக்கள் வாக்களிக்க வேண்டும்.”
திமுக-வை அகற்ற வேண்டும்:
“திமுக அரசை அகற்ற வேண்டும் என்பதில் தமிழக மக்கள் உறுதியாக இருக்கிறார்கள். அப்படி ஒரு முடிவை எடுத்த பிறகு, அந்த இடத்தில் யாரை உட்கார வைத்தால் தமிழகம் வளர்ச்சி பெறும் என்பதை மக்கள் யோசிக்க வேண்டும். அந்தத் தகுதியும், திறமையும் பாஜக-விடம் மட்டுமே உள்ளது,” என அண்ணாமலை நம்பிக்கை தெரிவித்தார்.
சமீபகாலமாக விஜய்யின் ‘ஜனநாயகன்’ திரைப்பட விவகாரம் மற்றும் அவரது அரசியல் வருகை குறித்துப் பல்வேறு கருத்துக்கள் நிலவி வரும் சூழலில், அண்ணாமலையின் இந்த ‘பிங்கி பாங்கி’ கமெண்ட் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளது.