பிரபல தயாரிப்பாளர் ஏவியம் சரவணன் காலமானார். ஏவிஎம் நிறுவனத்தின் உரிமையாளரும் தயாரிப்பாளருமான ஏவிஎம் சரவணன் வயது மூப்பு காரணமாக இன்று அதிகாலை 5.30am மணிக்கு உயிரிழந்தார். அவருக்கு வயது 86 சிறிது காலமாகவே உடல்நல பிரச்சினைகளால் பாதிக்கப்பட்ட வந்துள்ளார். அவரது உடல் ஏவிஎம் ஸ்டூடியோ வளாகத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அவரை தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் சென்று இரங்கல் தெரிவித்துள்ளனர். அதோடு மட்டுமில்லாமல் அவரின் நினைவுகளைப் பகிர்ந்து உருக்கமாகவும் பதிவிட்டுள்ளார்.
“தமிழ்த் திரையுலகின் முதுபெரும் ஆளுமைகளில் ஒருவரும் வரலாற்றுப் புகழ்மிக்க AVM நிறுவனத்தின் முகமாகவும் திகழ்ந்த ஏவி.எம். சரவணன் அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து மிகவும் வருந்தினேன். தமிழ்த்திரையுலகின் பாதையைத் தீர்மானித்து உருவாக்கியதில் ஏவி.எம். நிறுவனத்தின் பங்கு எவ்வளவு முக்கியமானதோ – அதே அளவுக்கு ஏவி.எம். நிறுவனத்தின் பாதையைத் தீர்மானித்ததில் திரு. சரவணன் அவர்களுடைய பங்கும் அளப்பரியது”.
“புதல்வராகவும் – திரைத்துறை ஆளுமையாகவும் “அப்பச்சி” என்று எல்லோராலும் அழைக்கப்பட்ட அவரது தந்தை மதிப்பிற்குரிய ஏவி.எம். அவர்களுக்குப் புகழ் சேர்த்தவர் சரவணன் அவர்கள். பேரறிஞர் அண்ணாவின் “ஓர் இரவு”, தலைவர் கலைஞரின் “பராசக்தி”, முரசொலி மாறன் அவர்களது “குலதெய்வம்” என ஏவி.எம். நிறுவனத்துக்கும் திராவிட இயக்கத்தின் திரைப்பயணத்துக்கும் நெடிய தொடர்புண்டு. அந்த பந்தம் குடும்பப் பாசமாகி, எங்கள் குடும்பத்துடன் நெருங்கிப் பழகியவர் ஏவி.எம்.சரவணன் அவர்கள்”.
“கடந்த 2023-ஆம் ஆண்டு மே மாதம் ஏவி.எம்-மின் ஹெரிடேஜ் அருங்காட்சியகத்தை நான் பார்வையிடச் சென்றபோது, அந்த நினைவலைகளைப் பகிர்ந்து பாசமுடன் பழகினார். அமைதியும் எளிமையுமே பண்புநலமாகக் கொண்டு எல்லோரிடமும் அன்பொழுகப் பழகிய அவரது மறைவால் வாடும் ஏவி.எம் குடும்பத்தாருக்கும், திரையுலக நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்”. என்று குறிப்பிட்டுள்ளார்.