வல்லரசுன்னா மிரட்டுவீங்களா?.. அமெரிக்காவுக்கு நேருக்கு நேர் ‘வார்னிங்’ கொடுத்த கனடா பிரதமர்!

வல்லரசு நாடுகள் தங்களது பொருளாதார பலத்தை மற்ற நாடுகளை அச்சுறுத்தும் ஆயுதமாகப் பயன்படுத்துவதற்கு எதிராகக் கனடா பிரதமர் மார்க் கார்னி பகிரங்கமாகப் போர்க்கொடி தூக்கியுள்ளார். “பழைய கூட்டணிகள் இனி பாதுகாப்பு அளிக்காது” என்று கூறிய அவர், அமெரிக்காவின் ஆதிக்கத்தை எதிர்கொள்ள உலக நாடுகள் புதிய பாதையை உருவாக்க வேண்டும் என அதிரடி அழைப்பு விடுத்துள்ளார்.

பொருளாதாரம் ஒரு ஆயுதம்!
ஒட்டாவாவில் நடைபெற்ற சர்வதேச பொருளாதார மாநாட்டில் உரையாற்றிய மார்க் கார்னி, இன்றைய உலக அரசியல் சூழல் மிகவும் அபாயகரமாக மாறி வருவதைச் சுட்டிக்காட்டினார். அவர் பேசுகையில், “பொருளாதார பலம் என்பது தற்போது மற்ற நாடுகளை அச்சுறுத்தும் ஒரு ஆபத்தான ஆயுதமாக மாறிவிட்டது. இது நாம் எதிர்கொள்ள வேண்டிய ஒரு கசப்பான புதிய எதார்த்தம். உணவு, எரிசக்தி மற்றும் பாதுகாப்பு போன்ற அடிப்படைத் தேவைகளுக்காகச் சுயசார்புடன் இல்லாத நாடுகள், இனி மற்றவர்களின் தயவில் தான் வாழ வேண்டியிருக்கும்” என்று எச்சரித்தார்.

அமெரிக்காவுக்குப் பதிலடி?
அமெரிக்காவின் பெயரை நேரடியாகக் குறிப்பிடாமல், அதன் சமீபத்திய வர்த்தகக் கெடுபிடிகளை மறைமுகமாகத் தாக்கிப் பேசிய அவர், “சர்வதேச விதிகள் உங்களைக் கைவிடும்போது, உங்களை நீங்களே பாதுகாத்துக் கொள்வதைத் தவிர வேறு வழியில்லை. பழைய கூட்டணிகளும், புவியியல் ரீதியான பாதுகாப்பும் நமக்கு எப்போதும் பாதுகாப்பு அளிக்கும் என்ற காலம் கடந்துவிட்டது” என்றார். இதன் மூலம், அமெரிக்காவைச் சார்ந்து இருப்பதை விடத் தற்சார்பு பொருளாதாரமே சிறந்தது என்பதை அவர் வலியுறுத்தினார்.

நடுத்தர நாடுகளுக்கு அழைப்பு:
வல்லரசு நாடுகளின் மிரட்டல்களுக்கு அடிபணியாமல் இருக்க ஒரு புதிய வியூகத்தை அவர் முன்மொழிந்தார். “வல்லரசுகளின் மிரட்டல்களுக்குப் பணியாமல் இருக்க, கனடா போன்ற நடுத்தரச் சக்தி கொண்ட நாடுகள் (Middle Powers) ஒன்றிணைந்து ஒரு புதிய பாதையை உருவாக்க வேண்டும். அப்போதுதான் நாம் ஒரு வல்லரசின் பிடியில் சிக்காமல் சுதந்திரமாகச் செயல்பட முடியும்” என அவர் அறைகூவல் விடுத்தார்.

அமெரிக்காவின் புதிய வர்த்தக வரி விதிப்புகள் மற்றும் அண்டை நாடுகளுடனான எல்லைக் கட்டுப்பாடுகள் கனடாவின் பொருளாதாரத்தைப் பாதித்துள்ள நிலையில், மார்க் கார்னியின் இந்தப் பேச்சு சர்வதேச அளவில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. அமெரிக்காவுக்கும் கனடாவுக்கும் இடையிலான நீண்டகால ‘நட்புறவு’ தற்போது ஒரு இக்கட்டான நிலையை எட்டியுள்ளதையே இது காட்டுகிறது.

Leave a Comment