வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ அமெரிக்கப் படைகளால் கைது செய்யப்பட்டு, நியூயார்க் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் சம்பவம் உலக அரசியலில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் அமெரிக்காவின் நடவடிக்கையை ‘ஒருதலைப்பட்சமான அராஜகம்’ எனச் சீனா கடுமையாகச் சாடியுள்ளது.
சர்வதேச நீதிபதி ஆக முடியாது!
சீன வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், அமெரிக்காவின் இந்த அதிரடி நடவடிக்கை சர்வதேச சட்டங்களை அப்பட்டமாக மீறும் செயல் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இது குறித்து சீன வெளியுறவு அமைச்சர் பேசுகையில்,
“எந்த ஒரு நாடும் தன்னை ‘உலக போலீசாக’ கருதி செயல்பட முடியும் என்று நாங்கள் ஒருபோதும் நம்பவில்லை. அதேபோல், ஒரு நாடு தன்னைத்தானே ‘சர்வதேச நீதிபதியாக’ அறிவித்துக்கொண்டு பிற நாட்டுத் தலைவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதையும் சீனா ஏற்காது,” எனத் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
இறையாண்மைக்கு விடப்பட்ட சவால்:
வெனிசுலாவின் இறையாண்மையை அமெரிக்கா காலால் மிதித்துள்ளதாகக் குற்றம் சாட்டிய சீனா, ஒரு நாட்டின் உள்நாட்டு விவகாரங்களில் ராணுவ ரீதியாகத் தலையிட்டு, அந்நாட்டின் தலைவரையே கடத்திச் செல்வது ஐக்கிய நாடுகள் சபையின் விதிகளுக்கு எதிரானது என்று கூறியுள்ளது. “அமெரிக்காவின் இத்தகைய ஆதிக்க மனப்பான்மை உலக அமைதிக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல்” என்றும் சீனா எச்சரித்துள்ளது.
மதுரோவை விடுதலை செய்ய வலியுறுத்தல்:
கைது செய்யப்பட்டுள்ள அதிபர் மதுரோ மற்றும் அவரது மனைவியின் பாதுகாப்பை அமெரிக்கா உறுதி செய்ய வேண்டும் என்றும், அவர்களை உடனடியாக விடுதலை செய்து பேச்சுவார்த்தை மூலம் தீர்வுகாண முன்வர வேண்டும் என்றும் சீனா வலியுறுத்தியுள்ளது.
ஏற்கனவே ரஷ்யா மற்றும் வட கொரியா போன்ற நாடுகள் அமெரிக்காவைக் கண்டித்துள்ள நிலையில், சீனாவின் இந்தத் தீவிரமான எதிர்வினை சர்வதேச அரசியலில் அமெரிக்காவிற்குப் பெரும் அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.