2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், தமிழக அரசியலில் ‘கூட்டணி’ பேச்சுகள் இப்போதே சூடுபிடிக்கத் தொடங்கிவிட்டன. குறிப்பாக, த.வெ.க தலைவர் விஜய்யின் தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர் மற்றும் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை இடையே நடந்த இந்த “பூஸ்ட் – ஹார்லிக்ஸ்” உரையாடல் தற்போது சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகிறது.
எஸ்.ஏ.சி போட்ட ‘பூஸ்ட்’ பிளான்!
சமீபத்தில் செய்தியாளர்களிடம் பேசிய இயக்குநர் எஸ்.ஏ. சந்திரசேகர், விஜய்யின் அரசியல் வருகை குறித்துப் பேசும்போது காங்கிரஸ் கட்சிக்கு ஒரு அட்வைஸ் கொடுத்தார். “காங்கிரஸ் கட்சி பல ஆண்டுகளாக மற்ற கட்சிகளுக்கு ஆதரவு கொடுத்துத் தேய்ந்து போய்விட்டது. விஜய் இப்போது ‘ஆட்சியில் பங்கு’ என்று ஒரு புதிய கதவைத் திறந்து வைத்திருக்கிறார். அவருடன் கூட்டணி அமைத்தால் அது காங்கிரஸ் கட்சிக்கு ஒரு பெரிய ‘பூஸ்ட்’ ஆக அமையும். இந்த வாய்ப்பை அவர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்” என்று தெரிவித்திருந்தார்.
செல்வப்பெருந்தகையின் ‘ஹார்லிக்ஸ்’ கவுண்டர்!
எஸ்.ஏ. சந்திரசேகரின் இந்த கருத்துக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை மிகவும் கலகலப்பாகவும் அதே சமயம் நறுக்கென்றும் பதிலளித்துள்ளார்.
அவர் கூறுகையில், “எங்கள் தொண்டர்களுக்கு ‘பூஸ்ட்’ கொடுப்பதாகச் சொன்ன எஸ்.ஏ. சந்திரசேகர் அவர்களுக்கு நன்றி. ஆனால், எங்களுக்கு யாரும் வெளியே இருந்து பூஸ்ட் தரத் தேவையில்லை. ராகுல் காந்தி ஏற்கனவே எங்கள் தொண்டர்களுக்கு பூஸ்ட், ஹார்லிக்ஸ் என எல்லாம் கொடுத்து தெம்பாகத்தான் வைத்திருக்கிறார். நாங்கள் ஏற்கனவே ரொம்ப ஸ்ட்ராங்காகத்தான் இருக்கிறோம்” என்று பதிலடி கொடுத்துள்ளார்.
கூட்டணி கனவு பழிக்காதா?
விஜய் தரப்பில் இருந்து காங்கிரஸை நோக்கித் தொடர்ந்து தூது விடப்படுவதாக அரசியல் வட்டாரத்தில் கிசுகிசுக்கப்படும் நிலையில், செல்வப்பெருந்தகையின் இந்தப் பதில் தற்போதைக்கு திமுக கூட்டணியை விட்டு காங்கிரஸ் நகருவதாக இல்லை என்பதையே காட்டுகிறது.
“பூஸ்ட் விளம்பரத்தில் வரும் கிரிக்கெட் வீரர்களைப் போல கூட்டணி மேட்ச் நடக்குமா? அல்லது ஹார்லிக்ஸ் குடித்துவிட்டு காங்கிரஸ் தனிப் பாதை அமைக்குமா?” என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.