நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டமன்றங்களில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் வரலாற்று சிறப்புமிக்க மசோதாக்கள் இன்று மக்களவையில் வாக்கெடுப்பிற்கு வருகின்றன. சுமார் 30 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த அனல் பறக்கும் விவாதங்களுக்கு பிறகு, இந்த மசோதாக்கள் சட்டமாக மாறுமா அல்லது எண்களின் விளையாட்டில் சிக்கி நிற்குமா என்ற எதிர்பார்ப்பு நாடு முழுவதும் எழுந்துள்ளது.
குறிப்பாக, மகளிர் இடஒதுக்கீட்டை தொகுதி மறுவரையறையுடன் இணைத்த மத்திய அரசின் முடிவை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வரும் நிலையில், இந்த வாக்கெடுப்பு ஒரு அரசியல் சதுரங்க ஆட்டமாக மாறியுள்ளது. தற்போதுள்ள 543 மக்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கையை 850 ஆக உயர்த்தும் அம்சமும் இந்த மசோதாவில் இருப்பதால், இது கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது என்ற குரல்களும் வலுத்துள்ளன.
அரசியலமைப்பு திருத்த மசோதாவை பொறுத்தவரை, அதை நிறைவேற்ற சாதாரண பெரும்பான்மை போதாது; அவைக்கு வந்து வாக்களிக்கும் உறுப்பினர்களில் மூன்றில் இரண்டு பங்கு ஆதரவு கட்டாயம் தேவை. தற்போதைய நிலவரப்படி, மக்களவையில் மசோதா வெற்றி பெற 360 உறுப்பினர்களின் ஆதரவு அவசியமாகிறது. ஆனால், ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் மொத்த பலம் 293 மட்டுமே. இதில் பாஜகவின் சொந்த பலம் 240 ஆகும். இன்னும் 67 உறுப்பினர்களின் ஆதரவு இருந்தால் மட்டுமே இந்த மசோதாவை பாஜகவால் நிறைவேற்ற முடியும். இந்த இக்கட்டான சூழலில், போதிய பலம் இல்லாத பாஜக அந்த 67 இடங்களுக்கு என்ன மாதிரியான அரசியல் ‘மேஜிக்’ செய்யப்போகிறது என்பதுதான் தற்போதைய மில்லியன் டாலர் கேள்வியாக உள்ளது.
இந்த எண்களின் சவாலை சமாளிக்க பாஜக கையில் எடுக்கப்போகும் ஒரு தந்திரம் “மறைமுக ஆதரவு”. அதாவது, சில எதிர்க்கட்சிகள் மசோதாவை வெளிப்படையாக ஆதரிக்க முடியாவிட்டாலும், வாக்கெடுப்பு நேரத்தில் அவைக்கு வராமல் தவிர்ப்பதன் மூலம் மசோதா நிறைவேற வழிவகை செய்யலாம். அவையில் இருக்கும் உறுப்பினர்களின் எண்ணிக்கை குறையும்போது, தானாகவே மூன்றில் இரண்டு பங்கு என்ற இலக்கும் குறைந்துவிடும். வாக்கெடுப்பு நடக்கும் முக்கியமான நேரத்தில் எம்பிக்கள் அவையை விட்டு வெளியேறி கேண்டீனுக்கு செல்வதோ அல்லது உடல்நலக்குறைவு என கூறி வராமலோ இருப்பது நாடாளுமன்ற வரலாற்றில் ஒன்றும் புதிதல்ல. இப்படிப்பட்ட ஒரு ‘கேண்டீன் பாலிடிக்ஸ்’ மூலம் மசோதா தப்பிக்கும் என அரசியல் நோக்கர்கள் கணிக்கின்றனர்.
அப்படியானால், பாஜகவிற்கு துணையாக இந்த மறைமுக ஒத்துழைப்பை வழங்கப்போகும் கட்சிகள் எவை என்ற விவாதம் கிளம்பியுள்ளது. அண்மையில் மத்திய அரசுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்துள்ள ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ், பிஜு ஜனதா தளம் போன்ற கட்சிகள் நேரடியாகவே தங்கள் ஆதரவை தெரிவித்துள்ளன. ஆனால் இந்தியா கூட்டணியில் இருந்தாலும் சில சிறிய கட்சிகளின் உறுப்பினர்கள் வாக்கெடுப்பில் கலந்துகொள்ளாமல் போவதற்கும் வாய்ப்புகள் உள்ளன. காங்கிரஸ் மற்றும் இதர எதிர்க்கட்சிகள் கொறடா உத்தரவு பிறப்பித்தாலும், சிபிஐ அல்லது அமலாக்கத்துறை வழக்குகளின் பிடியில் இருக்கும் எம்பிக்கள், கடைசி நேரத்தில் ‘நழுவும்’ வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக கூறப்படுகிறது.
இறுதியாக, பிரதமர் மோடி குறிப்பிட்டது போல “எண்களின் விளையாட்டை காலம் தீர்மானிக்கும்” என்பது ஒருபுறம் இருந்தாலும், பெண் வாக்காளர்களின் ஆதரவை பெற வேண்டும் என்ற கட்டாயம் அனைத்து கட்சிகளுக்கும் உள்ளது. மசோதாவை எதிர்த்தால் பெண்களுக்கு எதிரியாக சித்தரிக்கப்படுவோம் என்ற அச்சம் எதிர்க்கட்சிகளிடம் உள்ளது. அதே நேரத்தில், போதிய பலம் இல்லாமல் மசோதா வீழ்ந்தால் அது பாஜகவிற்கு பெரும் பின்னடைவாக அமையும். எனவே, இன்றைய வாக்கெடுப்பில் 67 இடங்களுக்கான இடைவெளியை நிரப்ப சில கட்சிகள் தங்களது எம்பிக்களை கேண்டீனுக்கு அனுப்பப்போகிறார்களா அல்லது நேருக்கு நேர் நின்று மசோதாவை வீழ்த்த போகிறார்களா என்பது இன்னும் சில மணி நேரங்களில் தெரிந்துவிடும்.