உடன் இருந்தவர்களுக்கே உதவாதவர் நாட்டுக்கு எப்படிச் செய்வார்?.. விஜயின் வாக்குறுதிக்கு எதிராக இயக்குனர் ராஜகுமாரன் கேள்வி!

தமிழக வெற்றி கழகத்தின் தலைவரும், நடிகருமான விஜய், தாம் 2026 சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றால் தமிழக மக்களுக்கு வீடு, மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட நலத்திட்டங்களை வழங்குவதாகப் பேசியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளது.

இந்நிலையில், இந்த வாக்குறுதிகளை முன்வைத்து, அவருடன் திரையுலகில் பல ஆண்டுகள் பணியாற்றிய திரைப்படத் தொழிலாளர் நலனில் அவர் காட்டிய அக்கறை என்ன? என்று இயக்குனர் ராஜகுமாரன் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பியுள்ளார்.

திரைத்துறையினரின் உழைப்பை சுட்டிக்காட்டி,
சமீபத்தில் ஊடகம் ஒன்றுக்குப் பேட்டியளித்த இயக்குனர் ராஜகுமாரன், நடிகர் விஜய்க்காக கடந்த முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக உழைத்த பெப்சி (FEFSI) தொழிலாளர்களின் நிலையைச் சுட்டிக்காட்டி வேதனை தெரிவித்தார்.

“கடந்த 30 ஆண்டுகளாக, நாங்கள் தான் அவருக்கு ‘வயர் பிடித்து’, ‘குடை பிடித்து’, மேக்கப் போட்டு, சோறு போட்டு, பாத்திரம் கழுவி, அவரைக் காருக்குள் உட்கார வைத்து, ஏசி ரூம் போட்டு உட்கார வைத்தோம். எங்களின் உழைப்பில்தான் அவர் இன்று இந்த நிலையை அடைந்துள்ளார்,” என்று ராஜகுமாரன் உணர்வுபூர்வமாகக் குறிப்பிட்டார்.

சுமார் ஒன்றரை லட்சம் குடும்பங்களுக்கு மேல் உள்ள பெப்சி தொழிலாளர்களின் நிலையைக் குறிப்பிட்டு, அவர்களைப் பற்றி விஜய் சிந்திக்கவில்லை எனக் குற்றம் சாட்டினார்.
“இன்று அவர் முதலமைச்சர் ஆனால், எல்லோருக்கும் வீடு கொடுப்போம் என்று சொல்கிறார். முதலில், அவருடன் இத்தனை காலம் முதுகில் சுமந்து உழைத்த இந்த ஒன்றரை லட்சம் பெப்சி தொழிலாளர் குடும்பங்களுக்கு வீடு கொடுங்கள் பார்ப்போம்! அவர் நினைத்தால் நிச்சயம் செய்ய முடியும். ஆனால், அந்த சிந்தனை அவரிடம் கிடையாது,” என்று சவால் விடுத்தார்.

“கூட இருந்தவர்களுக்கே விஜய் எதுவும் செய்யவில்லை. அப்படியிருக்க, அவர் எப்படி ஒட்டுமொத்த நாட்டு மக்களுக்கும் நலன் செய்வார்?” என்று கேட்டுள்ளார்.

விஜய்யின் அரசியல் பிரவேச அறிவிப்பு மற்றும் தேர்தல் வாக்குறுதிகள் தமிழ்நாட்டில் ஒருபுறம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், மறுபுறம் திரையுலகில் உடன் இருந்தவர்களின் வாழ்வாதாரப் பிரச்சினைகளை முன்னிறுத்தி முன்னாள் சகாக்களே எழுப்பும் இந்தக் குற்றச்சாட்டுகள், அரசியல் களத்தில் புதிய விவாதத்தை கிளப்பியுள்ளது.

Leave a Comment