விஜய்க்கு கூட்டம் வந்தா ஓட்டு வந்துருமா?.. டெபாசிட் காலிதான்.. வெடிகுண்டுகளைப் வீசும் ராஜகுமாரன்

தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியைத் தொடங்கி, விக்கிரவாண்டி மாநாட்டின் மூலம் தமிழக அரசியலில் ஒரு பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளார் நடிகர் விஜய். 2026 சட்டமன்றத் தேர்தலே தனது இலக்கு என அவர் முழங்கி வரும் வேளையில், திரையுலகைச் சேர்ந்த பிரபல இயக்குநர் ராஜகுமாரன், விஜய்யின் அரசியல் எதிர்காலம் குறித்துப் பகிர்ந்துள்ள கருத்துக்கள் இணையத்தில் காட்டுத்தீயாய் பரவி வருகின்றன.

விஜய்யை துவம்சம் செய்த ராஜகுமாரன்:
சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் விஜய்யின் அரசியல் நகர்வுகள் குறித்துக் கேட்கப்பட்ட கேள்விக்கு, ராஜகுமாரன் எவ்விதத் தயக்கமும் இன்றி பதிலளித்தார். அவர் கூறியதாவது,

“விஜய் அரசியலுக்கு வருவதால் தமிழகத்தில் எந்த மாற்றமும் விளையப் போவதில்லை. அவருக்குத் தேர்தலில் வெறும் 10,000 வாக்குகள் கூடக் கிடைப்பது கடினம். உண்மையில் சொல்லப்போனால், பல தொகுதிகளில் அவர் டெபாசிட் கூட வாங்க மாட்டார். சினிமாவில் வேண்டுமானால் அவர் சூப்பர் ஸ்டாராக இருக்கலாம், ஆனால் அரசியலில் அவர் ஒரு கத்துக்குட்டிதான்” எனத் தெரிவித்துள்ளார்.

தமிழகத்துக்கு ஆபத்து:
இதுமட்டுமின்றி, விஜய்யின் தனிப்பட்ட குணாதிசயங்களையும் அவர் கடுமையாகச் சாடினார். “தன்னுடன் பல காலம் பயணித்த இயக்குநர்களுக்கே அவர் எவ்வித உதவியும் செய்ததில்லை. கூட இருந்தவர்களையே கண்டுகொள்ளாதவர், பொதுமக்களுக்கு என்ன செய்துவிடுவார்? விஜய்யின் அரசியல் வருகையால் தமிழகத்திற்கு ஆபத்துதான் வருமே தவிர, நன்மைகள் ஏதும் ஏற்படப்போவதில்லை” என ராஜகுமாரன் பேசியது தவெக தொண்டர்களைக் கொந்தளிக்க வைத்துள்ளது.

ஸ்டாலின் Vs விஜய்:
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் அரசியல் அனுபவத்தோடு விஜய்யை ஒப்பிட்டுப் பேசிய அவர், “முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் பல போராட்டங்களைக் கடந்து இந்த இடத்திற்கு வந்துள்ளார். அவரைப் போல விஜய்யால் ஒரு நாளாவது சாதாரண மனிதனாகத் தெருவில் இறங்கி நடக்க முடியுமா?” எனச் சவால் விடுத்துள்ளார்.

இணையத்தில் மூண்ட போர்:
ராஜகுமாரனின் இந்தத் தொடர் விமர்சனங்களால் ஆத்திரமடைந்த விஜய் ரசிகர்கள், “விஜய்யின் வளர்ச்சியைப் பொறுக்க முடியாமல் சிலர் இப்படிப் பேசுகிறார்கள்” எனச் சமூக வலைதளங்களில் பதிலடி கொடுத்து வருகின்றனர். அதே நேரத்தில், ராஜகுமாரனின் பேச்சை எதிர்க்கட்சிகள் மற்றும் விஜய்யின் அரசியல் எதிர்ப்பாளர்கள் வைரலாக்கி வருகின்றனர்.

விக்கிரவாண்டி மாநாட்டிற்குப் பிறகு விஜய்யின் வாக்கு வங்கி 15% முதல் 20% வரை இருக்கும் எனக் கணிப்புகள் வெளியாகி வரும் நிலையில், “வெறும் 10,000 வாக்குகள் தான்” என ராஜகுமாரன் கூறியிருப்பது அரசியல் களம் இன்னும் சூடுபிடிக்கப் போவதையே காட்டுகிறது.

Leave a Comment