மை லைஃப்.. மை ரூல்ஸ்..: என் மனசாட்சிதான் எனக்குச் சட்டம்!.. ஃபயர் மோடில் டிரம்ப்..

சர்வதேச சட்டவிதிகளுக்கு நான் கட்டுப்பட்டவன் இல்லை,எனது மனசாட்சியும் சித்தாந்தமும்தான் எனது அதிகாரத்தைக் கட்டுப்படுத்தும். என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ள கருத்து உலக அரசியலில் பெரும் பூகம்பத்தைக் கிளப்பியுள்ளது.

ஒரே நாளில் 66 ஒப்பந்தங்கள் காலி!
அதிபர் டிரம்ப் தனது இரண்டாவது பதவிக்காலத்தில் “அமெரிக்கா ஃபர்ஸ்ட்” (America First) கொள்கையை மிகத் தீவிரமாக அமல்படுத்தி வருகிறார். அதன் ஒரு பகுதியாக, நேற்று (ஜனவரி 8, 2026) ஒரே கையெழுத்தில் ஐநா பருவநிலை மாற்ற ஒப்பந்தம் (UNFCCC) மற்றும் இந்தியாவால் முன்னெடுக்கப்பட்ட சர்வதேச சூரிய சக்தி கூட்டமைப்பு (ISA) உள்ளிட்ட 66 சர்வதேச அமைப்புகளில் இருந்து அமெரிக்கா வெளியேறுவதாக அறிவித்தார்.

மை லைஃப்.. மை ரூல்ஸ்..
இந்த வெளியேற்றம் குறித்து உலக நாடுகள் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், தனது வழக்கமான பாணியில் டிரம்ப் பதிலடி கொடுத்துள்ளார்.

“நான் சர்வதேச சட்டவிதிகளுக்குக் கட்டுப்பட்டவன் இல்லை. எனக்கு சர்வதேச சட்டங்கள் தேவையும் இல்லை. அமெரிக்காவின் நலன் மட்டுமே எனக்கு முக்கியம். மக்களைக் காயப்படுத்த வேண்டும் என்பது எனது நோக்கமல்ல, ஆனால் மற்ற நாடுகளுக்காக அமெரிக்காவின் வரிப்பணத்தை வீணடிக்க முடியாது. எனது மனசாட்சியும் எனது சித்தாந்தமும்தான் எனக்கு மேலானது.”

ஏன் இந்த வெளியேற்றம்?
வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, இந்த 66 அமைப்புகளும் “அமெரிக்காவின் இறையாண்மைக்கு எதிராகவும், தேவையற்ற வரிப்பண விரயமாகவும்” கருதப்படுகின்றன.மேலும் இது அமெரிக்கத் தொழில்துறையை முடக்குவதாக டிரம்ப் சாடியுள்ளார்.

இந்த அமைப்புகளுக்கு வழங்கப்பட்டு வந்த பில்லியன் கணக்கான டாலர்களை மிச்சப்படுத்தி, அமெரிக்காவின் எல்லைப் பாதுகாப்பு மற்றும் உள்நாட்டு உள்கட்டமைப்பிற்குப் பயன்படுத்த டிரம்ப் திட்டமிட்டுள்ளார்.

அமெரிக்காவின் இந்தத் ‘தனிமைப்படுத்திக் கொள்ளும்’ கொள்கை (Isolationism), உலகளாவிய அமைதி மற்றும் பொருளாதாரச் சமநிலையைச் சீர்குலைக்கும் என ஐரோப்பிய யூனியன் மற்றும் ஐநா சபையின் பொதுச்செயலாளர் கவலை தெரிவித்துள்ளனர். குறிப்பாக, அமெரிக்கா வெளியேறும் இடங்களில் சீனாவின் ஆதிக்கம் அதிகரிக்கும் என அரசியல் வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.

இருப்பினும், எதைப் பற்றியும் கவலைப்படாமல் தனது “மை லைஃப் மை ரூல்ஸ்” பாணியில் டிரம்ப் எடுத்துள்ள இந்த முடிவு, 2026-ஆம் ஆண்டின் மிகப்பெரிய சர்வதேச அரசியல் நிகழ்வாகப் பார்க்கப்படுகிறது.

Leave a Comment