தமிழக அரசியல் களத்தில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) எடுத்து வரும் ஒவ்வொரு அடியும் விவாதத்திற்கு உள்ளாகி வரும் நிலையில், தற்போது பாஜக-வில் இருக்கும் நடிகர் சரத்குமார் தவெக குறித்து அதிரடியான கருத்துக்களை முன்வைத்துள்ளார்.
ஒப்பிடாதீர்கள் – சரத்குமார் ஆவேசம்:
சமீபத்தில் செய்தியாளர்களிடம் பேசிய சரத்குமார், தன்னையும் விஜய்யையும் ஒரே தட்டில் வைத்துப் பேசுபவர்களுக்குத் தெளிவான பதிலடி கொடுத்தார். “விஜய்யுடன் என்னை ஒப்பிட்டுப் பேசுவது முற்றிலும் தவறு. அவர் இப்போதுதான் தனது அரசியல் பயணத்தைத் தொடங்கியிருக்கிறார். ஆனால் நான் 1996-ல் இருந்தே அரசியலில் இயங்கி வருகிறேன். அவர் வளர்ந்த நடிகர், அவருக்கு நான் அறிவுரை சொல்ல முடியாது. ஆனால், இன்னும் அவரை நான் ஒரு முழுமையான அரசியல்வாதியாகவே ஏற்றுக்கொள்ளவில்லை” என்று அவர் காட்டமாகத் தெரிவித்தார்.
நான் கட்சியை கலைக்கவில்லை:
முக்கியமாக, தனது ‘அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி’யை பாஜக-வுடன் இணைத்தது குறித்துத் தவறான தகவல்கள் பரப்பப்படுவதாக அவர் குறிப்பிட்டார். “பலர் நான் கட்சியை கலைத்துவிட்டு ஒதுங்கிவிட்டதாக நினைக்கிறார்கள். நான் கட்சியை கலைக்கவில்லை மாறாக, ஒரு பெரிய நோக்கத்திற்காக ‘தேசிய நீரோட்டத்தில்’ எங்களை இணைத்துக்கொண்டோம். பிரதமர் மோடியின் கரங்களை வலுப்படுத்தவே இந்த முடிவு எடுக்கப்பட்டது. இது ஒரு இணைப்பு , கலைப்பு அல்ல” என்று விளக்கமளித்தார்.
விஜய்க்கு வைத்த செக்:
விஜய்யின் அரசியல் புரிதல் குறித்துப் பேசிய அவர், “விஜய்க்கு இன்னும் அரசியலில் யார் நண்பர், யார் எதிரி என்றே தெரியவில்லை. 100 பேர் கூடினால் அது ஓட்டாக மாறாது. கூட்டத்தை ஓட்டாக மாற்றுவது எப்படி என்பது அவருக்குத் தெரியவில்லை. என்னைப் போலவே அவரும் பத்திரிகையாளர்களைச் சந்தித்து, அவர்கள் கேட்கும் கேள்விகளுக்குப் பதில் சொல்லட்டும். அதன் பிறகு அவரைப் பற்றிப் பேசலாம்” என்று சவால் விடுத்தார்.
2026 சட்டமன்றத் தேர்தலில் பாஜக நிச்சயமாக விஜய்யுடன் கூட்டணி வைக்காது என்றும், தவெக-வை ஒரு அரசியல் கட்சியாகவே தான் கருதவில்லை என்றும் சரத்குமார் கூறியிருப்பது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.