தமிழக அரசியலில் எடப்பாடி பழனிசாமி ஒரு சாதாரண விவசாயியாக தன் பயணத்தை தொடங்கி, இன்று அசைக்க முடியாத ஒரு அரசியல் சக்தியாக உருவெடுத்துள்ள விதம் பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. தன்னை வீழ்த்த நினைப்பவர்களை அதே வேகத்தில் வீழ்த்துவதில் அவர் ஒரு தேர்ந்த ராஜதந்திரி என்பதை தனது ஒவ்வொரு நகர்விலும் நிரூபித்து வருகிறார். ஜெயலலிதாவின் மறைவிற்கு பிறகு, அதிமுக என்ற மாபெரும் இயக்கம் சிதறிவிடும் என்று கணக்கு போட்டவர்களுக்கு மத்தியில், எடப்பாடி பழனிசாமி எழுதிய திரைக்கதை முற்றிலும் வேறானது.
அரசியல் சதுரங்கத்தில் அவர் சந்தித்த முதல் சவால் சசிகலா. முதல்வர் நாற்காலியில் அமருவதற்கு சசிகலாவின் காலில் விழுந்து ஆசி பெற்றவர் என்று விமர்சனங்கள் எழுந்தாலும், அதிகாரம் தன் கைக்கு வந்தவுடன் கட்சியை சசிகலாவின் பிடியில் இருந்து மீட்டெடுத்தது அவரது முதல் மாஸ்டர் ஸ்ட்ரோக். சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினர் யாரும் அதிமுகவின் நிழலில் கூட இருக்க கூடாது என்பதில் உறுதியாக இருந்து, அவர்களை கட்சியை விட்டே விரட்டியடித்தார். அதன் தொடர்ச்சியாக, தனது ஆட்சிக்கும் முதல்வர் பதவிக்குமே சவாலாக விளங்கிய டிடிவி தினகரனை தந்திரமாக ஓரங்கட்டினார். ஸ்லீப்பர் செல்கள் மூலம் ஆட்சியை கவிழ்க்க நினைத்த டிடிவியின் கனவுகளை தகர்த்து, கட்சித் தொண்டர்களை தன் பக்கம் இழுத்துக்கொண்டார்.
அடுத்ததாக, கட்சியின் இரட்டை தலைமைப் போரில் ஓ. பன்னீர்செல்வத்துடன் ஏற்பட்ட மோதல் எடப்பாடியின் ஆளுமையை உரசி பார்த்தது. விட்டுக்கொடுத்து போவது பலவீனம் என்று கருதிய அவர், பொதுக்குழுவை கூட்டி ஒற்றை தலைமை முழக்கத்தை கொண்டு வந்தார். சட்ட போராட்டங்களில் வெற்றி பெற்று, ஓபிஎஸ்-ஐ கட்சியில் இருந்து நீக்கியதுடன், அதிமுகவின் பொதுச்செயலாளர் என்ற உச்சபட்ச பதவியையும் அடைந்தார். தன்னை எதிர்த்த சீனியர் தலைவர்களை ஒவ்வொன்றாக நீக்கி, இன்று அதிமுக என்றால் அது எடப்பாடி பழனிசாமி தான் என்ற பிம்பத்தை உருவாக்கியுள்ளார்.
தற்போது 2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, தமிழக பாஜகவின் முகமாக தன்னை முன்னிறுத்திக் கொண்ட அண்ணாமலையையும் எடப்பாடி லாவகமாக கையாண்டுள்ளார். அதிமுகவின் தயவில்லாமல் தமிழகத்தில் பாஜக கால் பதிக்க முடியாது என்பதை உணர்த்தும் வகையில், அண்ணாமலையின் கடும் விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்து கூட்டணியை முறித்தார். இறுதியில், பாஜக மேலிடமே எடப்பாடியின் நிபந்தனைகளுக்கு பணிந்து கூட்டணிக்கு திரும்பியதும், அண்ணாமலை சட்டமன்ற தேர்தலில் போட்டியிடாமல் டெல்லிக்கு செல்லும் சூழல் உருவானதும் எடப்பாடியின் அரசியல் வெற்றியாகவே பார்க்கப்படுகிறது. தன்னை நோக்கி வீசப்படும் கற்களை கொண்டே தனக்கான ஏணியை அமைத்து கொள்வதில் எடப்பாடி பழனிசாமி ஒரு ‘கெட்டிக்காரர்’ என்பது இப்போது தமிழக அரசியலுக்கு தெளிவாக தெரிகிறது.