தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் 9-ம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ள நிலையில், காரைக்காலில் டிக்கெட் ஒதுக்கீட்டில் ஆளுங்கட்சி எம்.எல்.ஏ-க்கள் தலையிடுவதாகக் கூறி முன்னாள் எம்.எல்.ஏ அசனா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது ரசிகர்களுக்கும் அரசியல்வாதிகளுக்கும் இடையிலான மோதலாக மாறியுள்ளது.
பிளாக்கில் விற்கப்படும் டிக்கெட்டுகள்?
காரைக்காலில் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் எம்.எல்.ஏ அசனா, ‘ஜனநாயகன்’ திரைப்படத்தின் முதல் நாள் முதல் காட்சி (FDFS) டிக்கெட்டுகளை ரசிகர்களுக்கு வழங்காமல், தியேட்டர் நிர்வாகங்கள் ஆளுங்கட்சி எம்.எல்.ஏ-க்களுக்கு பிளாக்கில் சட்டவிரோதமாக விற்பனை செய்ய முயல்வதாகப் பகீர் குற்றச்சாட்டினை முன்வைத்தார்.

அரசியலை எதிர்க்கும் உங்களுக்கு டிக்கெட் எதற்கு?
விஜய்யின் அரசியல் வருகையை எதிர்க்கும் கட்சிகளைச் சாடிய அவர் பேசியதாவது, “விஜய் அரசியலுக்கு வருவதைக் கடுமையாக விமர்சிக்கும் மற்றும் அவரை அரசியல் ரீதியாகப் புறக்கணிக்கும் கட்சிகளுக்கு, இப்போது அவர் பட டிக்கெட் மட்டும் கேட்கிறதா? எங்க தலைவர் பட டிக்கெட் மட்டும் உங்களுக்கு வேணுமா? தியேட்டர் நிர்வாகம் ரசிகர்களுக்கான டிக்கெட்டை முறையாக ஒப்படைக்கவில்லை என்றால், தியேட்டர்களை முற்றுகையிடுவோம்.”என்று ஆவேசமாகத் தெரிவித்தார்.
எம்.எல்.ஏ-க்களுக்கு எச்சரிக்கை:
எம்.எல்.ஏ-க்களின் செல்வாக்கைப் பயன்படுத்தி ரசிகர்களின் உரிமையைப் பறிக்கக் கூடாது என்றும், உண்மையான தொண்டர்களுக்கும் ரசிகர்களுக்கும் முன்னுரிமை அளிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். இந்தப் பேச்சு காரைக்கால் மற்றும் புதுச்சேரி அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
‘ஜனநாயகன்’ படம் வெளியாக இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், டிக்கெட் கவுண்டர்களில் இப்போதே பதற்றம் நிலவி வருகிறது. இதனால் தியேட்டர் வளாகங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.