தமிழக அரசியல் களத்தில் ‘இன்ஸ்டா’ அரசியலும், கட்சித் தாவல்களும் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில், போகி பண்டிகையை முன்னிட்டு ஒரு புகைப்படம் இணையத்தையே தீப்பிடிக்க வைத்துள்ளது. நடிகர் விஜய் தொடங்கிய தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) ‘தளபதி… தளபதி…’ என வலம் வந்த வைஷ்ணவி, இன்று அதே தளபதியின் உருவம் பொறித்த டி-ஷர்ட்டை தீயிட்டுக் கொளுத்தி, தனது திமுக விசுவாசத்தைக் காட்டியுள்ளார்.
தவெக டு திமுக: யார் இந்த வைஷ்ணவி?
சமூக வலைதளங்களில் பிரபலமான வைஷ்ணவி, நடிகர் விஜய் கட்சி தொடங்கியபோது அதில் தன்னைத் தீவிரமாக ஈடுபடுத்திக் கொண்டார். ஆனால், கட்சியில் உரிய அங்கீகாரம் இல்லை என்றும், மூத்த நிர்வாகிகள் தொந்தரவு செய்வதாகவும் கூறி கடந்த மே மாதம் தவெக-விலிருந்து அதிரடியாக விலகினார். அதைத் தொடர்ந்து, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி முன்னிலையில் திமுகவில் இணைந்து, தற்போது உதயநிதி ஸ்டாலினின் தீவிர ஆதரவாளராக வலம் வருகிறார்.
போகியில் எரிந்த ‘MY LEADER’ சட்டை!
இந்நிலையில், இன்று போகி பண்டிகையை முன்னிட்டு பழைய பொருட்களை எரிப்பதைப் போல, தான் தவெக-வில் இருந்தபோது அணிந்திருந்த “MY LEADER” என அச்சிடப்பட்ட மஞ்சள் நிற டி-ஷர்ட்டை வைஷ்ணவி தீயில் பொசுக்கியுள்ளார்.
“பழையன கழிதலும், புதியன புகுதலும்” என போகிக்கு விளக்கம் அளித்தாலும், இது தவெக தொண்டர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. “எந்தக் கட்சியில் வேண்டுமானாலும் சேருங்கள், ஆனால் ஒரு தலைவரை இப்படி இழிவுபடுத்துவதா?” என விஜய் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் வைஷ்ணவியைக் கடுமையாகச் சாடி வருகின்றனர்.
தளபதி வேஸ்ட்!.. அனல் பறக்கும் பதிலடி!
ஏற்கனவே, “தவெக-வில் இருந்ததே வேஸ்ட்” என்று பேட்டி கொடுத்து வந்த வைஷ்ணவி, தற்போது டி-ஷர்ட்டையே எரித்திருப்பது அவர் திமுகவில் தனது இடத்தை உறுதிப்படுத்திக் கொள்ள நடத்தும் ‘அரசியல் ஸ்டண்ட்’ என விமர்சகர்கள் கருதுகின்றனர். அதே சமயம், திமுக தரப்பினரோ, “அவர் தனது கடந்த கால கசப்பான நினைவுகளை எரிக்கிறார்” என முட்டுக்கொடுத்து வருகின்றனர்.
போகி பண்டிகை நெருப்பில் அரசியல் ஆதங்கம் எரிந்து சாம்பலாகுமா? அல்லது இந்தச் சம்பவம் தவெக – திமுக இடையே புதிய மோதலை உருவாக்குமா? என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.