அமெரிக்காவா அல்லது டென்மார்க்கா என வரும்போது, நாங்கள் எப்போதும் டென்மார்க்கையே தேர்ந்தெடுப்போம். கிரீன்லாந்து ஒருபோதும் அமெரிக்காவிற்கு சொந்தமானதாக இருக்க விரும்புவதில்லை என்று கிரீன்லாந்து பிரதமர் ஜென்ஸ் பிரடெரிக் நீல்சன் அமெரிக்காவிற்கு மிகத்தெளிவான பதிலடியைக் கொடுத்துள்ளார்.
ட்ரம்ப்பின் மிரட்டல்:
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், ஆர்க்டிக் பகுதியில் சீனா மற்றும் ரஷ்யாவின் ஆதிக்கத்தைத் தடுக்க கிரீன்லாந்தை அமெரிக்கா கைப்பற்றியே தீர வேண்டும் என்பதில் பிடிவாதமாக உள்ளார். சமீபத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
“கிரீன்லாந்துக்கு என்ன பாதுகாப்பு இருக்கிறது? வெறும் இரண்டு நாய் இழுக்கும் வண்டிகள்தான் (Dog Sleds) அவர்களின் பாதுகாப்பு. நாங்கள் எடுக்க நினைத்தால் ‘நல்ல விதமாகவோ’ அல்லது ‘கடினமான முறையிலோ’ (The Hard Way) கிரீன்லாந்தை எடுத்துக்கொள்வோம்” என்று மிரட்டும் தொனியில் பேசினார்.
பிரதமரின் அதிரடி பதிலடி:
டென்மார்க் பிரதமருடன் இணைந்து பேட்டியளித்த கிரீன்லாந்து பிரதமர் நீல்சன், “நாங்கள் ஒரு ஜனநாயக நாடு. எங்களை யாரும் ஆக்கிரமிக்க முடியாது. அமெரிக்காவின் மிரட்டலுக்குப் பயந்து எங்களுடைய அடையாளத்தை மாற்றிக்கொள்ள மாட்டோம். எங்களுக்கு டென்மார்க், நேட்டோ (NATO) மற்றும் ஐரோப்பிய யூனியன் தான் முக்கியம்” என்று திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
ட்ரம்ப் எச்சரிக்கை:
பிரதமர் நீல்சனின் இந்தப் பதிலைக் கேட்டு ஆத்திரமடைந்த ட்ரம்ப், “அந்த ஆள் (நீல்சன்) யாரென்றே எனக்குத் தெரியாது. ஆனால் அவர் எடுத்திருக்கும் இந்த முடிவு அவருக்குப் பெரிய பிரச்சனையை உருவாக்கும்” என்று மீண்டும் ஒரு மிரட்டலை விடுத்துள்ளார்.
இந்த விவகாரம் தற்போது சர்வதேச அளவில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் இந்த “நில ஆசை”க்கு பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட பல ஐரோப்பிய நாடுகள் கண்டனம் தெரிவித்து டென்மார்க்கிற்கு ஆதரவாகக் களம் இறங்கியுள்ளன.