மோடியின் கையில் இருக்கும் சாவி.. இந்தியா -அமெரிக்கா வர்த்தகம் க்ளைமாக்ஸ் நெருங்கிவிட்டதா?

இந்தியா மற்றும் அமெரிக்கா இடையேயான வர்த்தக ஒப்பந்தம் நீண்ட நாட்களாகக் கையெழுத்தாகாமல் இருப்பதற்கு, பிரதமர் நரேந்திர மோடி அதிபர் ட்ரம்பிற்கு போன் செய்து பேசாததே காரணம் என அமெரிக்க வர்த்தகத் துறை அமைச்சர் ஹோவர்ட் லுட்னிக் அதிரடி கருத்தைத் தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா சொன்ன ‘தடை’ என்ன?
பிரபல ‘ஆல்-இன்’ (All-in Podcast) நிகழ்ச்சியில் பேசிய ஹோவர்ட் லுட்னிக், இந்தியாவுடனான வர்த்தக ஒப்பந்தம் குறித்த பல ரகசியங்களை உடைத்தார். அவர் கூறியதாவது,

“ஒப்பந்தத்திற்கான அனைத்து வேலைகளையும் நான் தயார் செய்துவிட்டேன். ஆனால், அதிபர் ட்ரம்ப் தான் இந்த ஒப்பந்தத்தை இறுதி செய்ய வேண்டும். இதற்காக பிரதமர் மோடி அவர்கள் அதிபர் ட்ரம்ப்பைத் தொலைபேசியில் அழைத்து பேச வேண்டும் என்று நான் இந்திய அதிகாரிகளிடம் கூறினேன். ஆனால், அவர்கள் அதற்குத் தயக்கம் காட்டினர். இறுதியில் மோடி பேசவில்லை.”

மேலும், ட்ரம்ப் வர்த்தக ஒப்பந்தங்களை ஒரு ‘ஏணிப்படி’ (Staircase) போலக் கருதுவதாகவும், முதலில் வரும் நாடுகளுக்கே (உதாரணமாக பிரிட்டன்) சிறந்த சலுகைகள் கிடைக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார். இந்தியா தாமதம் செய்ததால், தற்போது அந்த வாய்ப்பு கைநழுவி, மற்ற ஆசிய நாடுகள் முந்திக்கொண்டதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

இந்தியாவின் அதிரடி மறுப்பு:
அமெரிக்க அமைச்சரின் இந்தக் கருத்தை இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் (MEA) வன்மையாக மறுத்துள்ளது. இது குறித்துப் பேசிய வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால்,

“லுட்னிக் கூறிய கருத்துக்கள் துல்லியமானவை அல்ல. இந்தியா – அமெரிக்கா இடையே கடந்த ஒரு வருடமாக விரிவான பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன. 2025-ஆம் ஆண்டில் மட்டும் பிரதமர் மோடியும், அதிபர் ட்ரம்ப்பும் 8 முறை தொலைபேசி வாயிலாகப் பேசியுள்ளனர். எனவே, பேச்சுவார்த்தை நடக்கவில்லை என்பது தவறு.”

“இரு நாடுகளுக்கும் பரஸ்பர லாபம் தரும் வகையிலான ஒப்பந்தத்தை எட்டுவதிலேயே இந்தியா உறுதியாக உள்ளது.”

ரஷ்யாவிடமிருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்குவதற்கு அமெரிக்கா கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இதன் காரணமாக இந்தியப் பொருட்கள் மீது அமெரிக்கா ஏற்கனவே 50% வரை வரி விதித்துள்ளது. இந்நிலையில், மோடியின் ‘போன் கால்’ குறித்த இந்த விவாதம் சர்வதேச அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Comment