இந்தியாவின் 77-வது குடியரசு தின விழாவிற்குத் தலைநகர் டெல்லி தயாராகி வரும் நிலையில், வானில் போர் விமானங்கள் நிகழ்த்தும் சாகசங்களின் போது ‘பறவை மோதல்’ (Bird Hit) விபத்துகளைத் தவிர்க்க இந்திய விமானப்படை மற்றும் வனத்துறை இணைந்து ஒரு புதுமையான திட்டத்தைச் செயல்படுத்தியுள்ளன.
1,270 கிலோ ‘போன்லெஸ்’ சிக்கன்:
விமானங்கள் தாழ்வாகப் பறக்கும் போது கழுகுகள் மற்றும் பருந்துகள் குறுக்கே வராமல் இருக்க, சுமார் 1,270 கிலோ எலும்பில்லாத சிக்கன் (Boneless Chicken) பயன்படுத்தப்பட உள்ளது.
20 முக்கிய இடங்கள்:
டெல்லி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பறவைகள் அதிகம் கூடும் செங்கோட்டை, ஜமா மசூதி, மாண்டி ஹவுஸ் உள்ளிட்ட 20 இடங்கள் இதற்காகத் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
திசைதிருப்பும் முறை:
விமானங்கள் சாகசம் செய்யும் நேரத்தில், இந்த இடங்களில் சிறு சிறு துண்டுகளாகச் சிக்கன் இறைச்சி தூவப்படும். இதன் வாசனையால் ஈர்க்கப்படும் பறவைகள், வானில் பறப்பதைத் தவிர்த்துவிட்டு உணவிற்காகத் தரையை நோக்கி வரும். இதனால் விமானப் பாதை ‘கிளியர்’ ஆக இருக்கும்.
ஏன் இந்த மாற்றம்?
கடந்த காலங்களில் இத்தகைய பணிகளுக்காக எருமை இறைச்சி (Buffalo meat) பயன்படுத்தப்பட்டு வந்தது. ஆனால், இந்த ஆண்டு முதல் முறையாக சிக்கன் இறைச்சி பயன்படுத்தப்படுகிறது. பறவைகளை எளிதில் ஈர்க்கவும், அவற்றின் உணவுப் பழக்கத்திற்கு ஏற்பவும் இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பறவை மோதல் பெரும் சவால்:
குடியரசு தின அணிவகுப்பில் ரஃபேல், சுகோய்-30 எம்கேஐ மற்றும் தேஜஸ் போன்ற அதிநவீன போர் விமானங்கள் மிகக் குறைந்த உயரத்தில் பறக்கும். அப்போது ஒரு சிறிய பறவை மோதினால் கூட, அது என்ஜினுக்குள் இழுக்கப்பட்டு மிகப்பெரிய விபத்திற்கு வழிவகுக்கும். கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள விமானங்கள் மற்றும் விமானிகளின் பாதுகாப்பைக் கருதியே இந்த ‘முன்னெச்சரிக்கை விருந்து’ வழங்கப்படுகிறது.
15 நாள் பயிற்சி:
இது ஏதோ ஒரே நாளில் நடக்கும் விஷயம் அல்ல. ஜனவரி 15 முதல் 26 வரை சுமார் 15 நாட்களுக்குத் தொடர்ந்து இந்த இறைச்சி போடும் பணி நடைபெறும். இதன் மூலம் பறவைகள் அந்த இடங்களுக்கு வந்து உணவருந்துவதை வழக்கமாக்கிக் கொள்ளும். குடியரசு தின நாளன்று விமானங்கள் பறக்கும் போது, பறவைகள் அனைத்தும் தரையில் சிக்கன் வேட்டையில் பிஸியாக இருப்பதை இது உறுதி செய்யும்.