ஈரோடு டூ சேலம்!.. மீண்டும் களமிறங்கும் விஜய்; அடுத்த ‘டார்கெட்’ ரெடி!

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், ஈரோட்டில் தனது அரசியல் அதிரடியைத் தொடங்கிவிட்ட நிலையில், அடுத்தகட்டமாகச் சேலத்தைக் குறிவைத்துள்ளார். ஏற்கனவே அனுமதி மறுக்கப்பட்ட சேலத்தில், வரும் டிசம்பர் 30-ஆம் தேதி மீண்டும் பொதுக்கூட்டத்தை நடத்தத் தீவிர ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

முன்னதாக, டிசம்பர் 4-ஆம் தேதி சேலத்தில் பரப்புரை மேற்கொள்ள விஜய் திட்டமிட்டிருந்தார். இதற்காகத் தவெக நிர்வாகிகள் சேலம் மாநகர காவல் ஆணையரிடம் அனுமதி கோரி மனு அளித்திருந்தனர். ஆனால், கார்த்திகை தீபம் மற்றும் பாதுகாப்பு காரணங்களைக் காட்டி காவல்துறை அப்போது அனுமதி வழங்கவில்லை. இதனால் சேலம் மாவட்டத் தொண்டர்கள் ஏமாற்றமடைந்தனர்.

ஈரோடு ‘பூஸ்ட்’ கொடுத்த தெம்பு:

டிசம்பர் 18-ஆம் தேதி (நேற்று) ஈரோடு விஜயமங்கலம் அருகே நடைபெற்ற மக்கள் சந்திப்புப் பொதுக்கூட்டம் மாபெரும் வெற்றியைப் பெற்றுள்ளது. இதில் திமுகவை ‘தீய சக்தி’ என விஜய் கடுமையாகச் சாடியது அரசியல் வட்டாரத்தில் பெரும் அலைகளை உருவாக்கியுள்ளது. இந்த உத்வேகத்துடன், விடுபட்ட சேலம் கூட்டத்தை முடித்தே தீர வேண்டும் எனத் தவெக நிர்வாகிகள் களம் இறங்கியுள்ளனர்.

நிர்வாகிகளின் தீவிர ஏற்பாடு:

டிசம்பர் 30-ஆம் தேதி சேலத்தில் பொதுக்கூட்டத்தை நடத்த அனுமதி கோரி மீண்டும் மனு அளிக்கத் தவெக நிர்வாகிகள் முடிவு செய்துள்ளனர்.

சேலம் இரும்பாலை சாலை அல்லது சீலநாயக்கன்பட்டி புறவழிச்சாலை ஆகிய பகுதிகளில் இடங்களைத் தவெக நிர்வாகிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு:

ஈரோடு கூட்டத்தை விடப் பலமடங்கு கூட்டத்தைச் சேலத்தில் திரட்டத் திட்டமிட்டுள்ளனர். இதற்கான அதிகாரப்பூர்வ தேதி மற்றும் அனுமதி குறித்த தகவல்கள் ஓரிரு நாட்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அரசியல் எதிர்பார்ப்பு:

சேலம் மாவட்டமானது அதிமுகவின் கோட்டையாகக் கருதப்படும் நிலையில், அங்கு விஜய் நடத்தவிருக்கும் கூட்டம் திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகளுக்கும் ஒரு சவாலாக அமையும் என அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர். 2025-ஆம் ஆண்டின் கடைசி அரசியல் அதிரடியாகச் சேலம் கூட்டம் அமையப் போவதால், தமிழக அரசியல் களம் இப்போதே பரபரப்படைந்துள்ளது.

Leave a Comment