2026 சட்டமன்றத் தேர்தலை ஒட்டி வெளியாகும் பல்வேறு கருத்துக்கணிப்புகள் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றி கழகத்திற்கு (TVK) 15% முதல் 20% வரை வாக்குகள் கிடைக்கும் எனக் கூறி வருகின்றன. ஆனால், இந்த பிம்பத்தை முற்றிலுமாக மறுக்கிறார் மூத்த பத்திரிகையாளர் மணி. கள எதார்த்தம் கருத்துக்கணிப்புகளை விட முற்றிலும் மாறுபட்டது என்பது அவரது வாதம்.
திமுக மட்டும் தான் களத்தில் இருக்கிறதா?
“நேற்று வரை தமிழகத்தில் திமுக மட்டும் தான் ஒற்றைச் சக்தியாக களத்தில் இருக்கிறது, அவர்களுக்குப் போட்டியே இல்லை என்ற ஒரு தோற்றம் நிலவி வந்தது. ஆனால், நிலைமை இப்போது அப்படி இல்லை” என்கிறார் மணி. பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி (NDA) மீண்டும் ஒருங்கிணைக்கப்பட்டு பலம் பெற்று வருவதை அவர் சுட்டிக்காட்டுகிறார். குறிப்பாக, அதிமுக மற்றும் பாஜக உள்ளிட்ட கட்சிகளின் கூட்டணி மாற்றங்கள் ஆளுங்கட்சிக்கு பெரும் சவாலாக மாறும் என அவர் கருதுகிறார்.

3-வது இடத்துக்கு தள்ளப்படும் விஜய்:
விஜய்யின் அரசியல் வருகை குறித்து மணி முன்வைக்கும் மிக முக்கியமான விமர்சனங்கள், அரசியலில் கடைசி நேர கூட்டணி மாற்றங்கள் தான் வெற்றியாளரைத் தீர்மானிக்கும். விஜய் தற்போது ‘தனித்து போட்டி’ என்பதில் உறுதியாக இருந்தாலும், தேர்தல் நெருங்க நெருங்க திமுக-வா அல்லது அதிமுக-வா என்ற இருமுனைப் போட்டி தான் தீவிரமடையும்.
திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகளுக்கும் தமிழகத்தின் ஒவ்வொரு குக்கிராமத்திலும் கிளைக் கழகங்கள் உள்ளன. விஜய்யின் கட்சிக்கு இன்னும் அந்த கட்டமைப்பு முழுமையாக உருவாகவில்லை.
மக்களின் மனநிலை:
வாக்காளர்கள் வழக்கமாக இரு பெரும் திராவிடக் கட்சிகளுக்கு இடையே ஒருவரைத் தேர்ந்தெடுக்கும் போக்கையே கொண்டுள்ளனர். இந்த ‘பைனரி’ போரில், மூன்றாவதாக வரும் ஒரு சக்தி வாக்கு பிளவை மட்டுமே ஏற்படுத்தும், ஆனால் ஆட்சியைக் கைப்பற்றாது. இதனால் தான் விஜய் மூன்றாவது இடத்திற்குத் தள்ளப்படுவார் என்று மணி குறிப்பிடுகிறார்.
2026-ல் ரியல் மேட்ச் யாருக்கு?
பத்திரிகையாளர் மணியின் கூற்றுப்படி, “நாள்கள் செல்லச் செல்ல தமிழக அரசியல் களம் பழையபடி ‘திமுக-வா அல்லது அண்ணா திமுக-வா’ என்ற நிலைக்குத்தான் வருமே தவிர, ‘திமுக-வா அல்லது தவெக-வா’ என்ற சூழல் உருவாக வாய்ப்பில்லை”.
இந்தக் கணிப்பு, விஜய் அரசியலில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்துவார் என்று நம்பும் அவரது ரசிகர்களுக்கும், தவெக தொண்டர்களுக்கும் இடையே பெரிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. எது எப்படியோ, 2026 சட்டமன்றத் தேர்தல் களம் ஒரு ‘மெகா ட்விஸ்ட்’ நோக்கிப் போய்க் கொண்டிருப்பது மட்டும் உறுதி.