தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், அண்மையில் நடைபெற்ற கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் அதிமுக மற்றும் பாஜகவை விமர்சித்துப் பேசியது தமிழக அரசியலில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. குறிப்பாக, “அதிமுக நேரடியாக பாஜகவிடம் சரணடைந்துவிட்டது” என்ற விஜய்யின் விமர்சனத்திற்கு, பாஜக மாநிலத் துணைத் தலைவரும் நடிகையுமான குஷ்பு காட்டமான பதிலடியைக் கொடுத்துள்ளார்.
விசில் சத்தமும் வீராப்பு பேச்சும்!
செய்தியாளர்களைச் சந்தித்த குஷ்பு, விஜய்யின் அரசியல் முதிர்ச்சியை விமர்சிக்கும் வகையில் பேசினார். “மேடையில் இருக்கும்போது தொண்டர்களின் விசில் சத்தத்தைக் கேட்டு உணர்ச்சிவசப்பட்டுப் பேசுவது அரசியலுக்கு ஆகாது. சினிமா மேடை வேறு, அரசியல் மேடை வேறு. தம்பி விஜய் அரசியலுக்குப் புதியவர் என்பதால் இப்படிப் பேசுகிறார். மேடை விசிலுக்காக வீராப்பாகப் பேசுவதை விட்டுவிட்டு, வார்த்தைகளை நிதானமாகப் பயன்படுத்தக் கற்றுக்கொள்ள வேண்டும்,” என அறிவுறுத்தினார்.
அதிமுக சரணடைய வேண்டிய அவசியமில்லை!
அதிமுக மீதான விஜய்யின் விமர்சனத்திற்குப் பதிலளித்த அவர்,
“அதிமுக என்பது நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த காளான் அல்ல. பேரறிஞர் அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா மற்றும் எடப்பாடி பழனிசாமி எனப் பல ஆளுமைகளால் வளர்க்கப்பட்டு, தமிழகத்தில் ஆழமாக வேரூன்றி இருக்கும் ஒரு பேரியக்கம். அத்தகைய கட்சி யாரிடமும் சரணடைய வேண்டிய அவசியம் கிடையாது. அதிமுகவினரை அரசியலுக்கு நேற்று வந்தவர்கள் என விஜய் நினைக்க வேண்டாம்.”
விரைவில் திருந்துவார் தம்பி!
மேலும் பேசிய குஷ்பு, “அரசியல் களம் என்பது அவ்வளவு எளிதானது அல்ல. போகப்போகத்தான் அதன் சவால்கள் விஜய்க்குத் தெரியும். இப்போது அவர் ஆரம்பக் கட்டத்தில் இருக்கிறார். விரைவில் அவர் தனது தவறை உணர்ந்து, அரசியலில் எப்படிப் பேச வேண்டும் என்பதைத் தெரிந்துகொண்டு தன்னைத் திருத்திக்கொள்வார் என நம்புகிறேன்,” என்று கிண்டலாகவும் அதேசமயம் எச்சரிக்கை விடுக்கும் தொனியிலும் பேசினார்.
பரபரக்கும் 2026 தேர்தல் களம்!
விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம், திமுகவை ‘தீய சக்தி’ என்றும், அதிமுகவை ‘சரண் அடைந்த கட்சி’ என்றும் விமர்சித்து வரும் நிலையில், குஷ்புவின் இந்த நேரடித் தாக்குதல் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விஜய்யின் ரசிகர்கள் மற்றும் தவெக நிர்வாகிகள் இதற்கு என்ன எதிர்வினை ஆற்றப்போகிறார்கள் என்பதுதான் இப்போது சமூக வலைதளங்களில் ஹாட் டாபிக்!