தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் விராட் கோலி தனது 52-வது சர்வதேச சதத்தைப் பதிவு செய்த நிலையில், இந்திய அணியின் சுழல் பந்துவீச்சாளர் குல்தீப் யாதவ், கோலியின் ஆக்ரோஷமான ஆட்டத்தைக் கண்டு வியந்து பாராட்டியுள்ளார்.
கோலியின் இன்னிங்ஸ் குறித்துப் பேசிய குல்தீப், அது தமக்கு எட்டு முதல் ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு உள்ள ‘வின்டேஜ் கோலியை நினைவுபடுத்துவதாகக் கூறியுள்ளார்.
குல்தீப் யாதவ், விராட் கோலியுடனான தனது ஆரம்பகால கிரிக்கெட் பயணம் குறித்து உணர்ச்சிப்பூர்வமாகப் பேசினார். “எனது கிரிக்கெட் பயணம் விராட் பாய் கேப்டனாக இருந்தபோதுதான் தொடங்கியது. அவரது தலைமைப் பண்பின் கீழ்தான் நான் பந்து வீசும் சுதந்திரம் பெற்றேன்,” என்று குல்தீப் குறிப்பிட்டார்.
இந்த நெருங்கிய தொடர்பே, கோலியின் தற்போதைய ஆட்டத்தை அவர் ஆழமாகப் புரிந்துகொள்ளக் காரணம் என்றும் தெரிவித்தார்.
2018-க்கு முந்தைய ‘சூறாவளி’ வடிவத்தைப் பார்த்தேன் :
“தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான அவர் பேட்டிங் செய்தபோது, 2016 முதல் 2018 வரை இருந்த கோலி வெர்ஷனைப் பார்த்தோம். அந்த வெர்ஷனில் அவர் ஒரு சூறாவளி போல ஆடுவார். அவரது ஷாட் தேர்வுகள், பேட்டில் பந்து பட்ட விதம் என அனைத்தும் மிகுந்த நம்பிக்கையுடன் இருந்தது,” என்று குல்தீப் யாதவ் தெரிவித்தார்.
மேலும், “கோலி பந்து வீசும்போதும் சரி, ஃபீல்டிங்கின்போதும் சரி, அவர் கொடுக்கும் ஆலோசனைகள் விலைமதிப்பற்றவை. அணியில் கோலி போன்ற அனுபவமிக்க வீரர்கள் இருப்பது, ஒரு புதிய உற்சாகத்தையும் (Energy) ஆட்டத்தின் தீவிரத்தையும் (Intensity) கொண்டுவருகிறது. இது அணியின் வெற்றிக்கு மிகவும் அவசியம், ” என்று குல்தீப் மேலும் கூறினார்.
சுழல் பந்துவீச்சாளரான குல்தீப் யாதவ், கோலி கேப்டனாக இருந்தபோது அவருடன் அதிக நாட்கள் பயணித்தவர் என்பதால், கோலியின் உத்வேகமான ஆட்டத்தின் மீதான அவரது வார்த்தைகள் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளன.