தமிழக அரசியலில் ஒரு புதிய நட்சத்திரத்தின் வரவு நிகழும்போது, வழக்கமாக எழுப்பப்படும் முதல் கேள்வி “கூடுகின்ற கூட்டம் வாக்குகளாக மாறுமா?” என்பதுதான். குறிப்பாக நடிகர் விஜய் அரசியல் களத்தில் அடியெடுத்து வைத்தது முதல், அவரை பார்க்க வருகின்ற லட்சக்கணக்கான ரசிகர்கள் தேர்தல் நாளில் அவருக்கு ஆதரவாக வாக்களிப்பார்களா என்ற சந்தேகம் அரசியல் விமர்சகர்கள் மத்தியில் தொடர்ந்து விவாதிக்கப்பட்டு வருகிறது.
ஆனால், இந்த தர்க்கமே அடிப்படை ஆதாரமற்றது எனத் தவெக ஆதரவாளர்கள் வாதிடுகின்றனர். ஒரு தனி மனிதனை பார்ப்பதற்காகவும், அவர்தம் கருத்தை கேட்பதற்காகவும் எவ்வித எதிர்பார்ப்பும் இன்றி மணிக்கணக்கில் காத்திருக்கும் ஒரு தொண்டன், அந்த தலைவன் மீது கொண்டுள்ள பற்று என்பது வெறும் சினிமா மோகம் கடந்தது என்பதை பலரும் உணர மறுக்கின்றனர்.
விஜய்யின் பொதுக்கூட்டங்களிலும் பிரசார பயணங்களிலும் கூடுகின்ற மக்கள் திரள் என்பது திட்டமிடப்பட்டு அழைத்து வரப்பட்ட கூட்டம் அல்ல. சுட்டெரிக்கும் வெயிலையும், நீண்ட நேர காத்திருப்பையும் பொருட்படுத்தாமல் ஒரு தலைவனுக்காக தெருக்களில் தவம் கிடக்கும் அந்த இளைஞர்களிடமும் பெண்களிடமும் இருப்பது ஆழ்ந்த நம்பிக்கையாகும்.
பல மைல் தூரம் பயணித்து வந்து, தள்ளுமுள்ளுக்கும் நெரிசலுக்கும் இடையே தங்கள் தலைவரின் ஒரு சிறு அசைவிற்காக ஏங்கும் ஒரு ரசிகன், ஜனநாயகத்தின் ஆகச்சிறந்த அதிகாரமான வாக்களிக்கும் கடமையை மட்டும் செய்யாமல் போய்விடுவான் என்று நினைப்பது அபத்தமானது. தவெகவுக்கு கூடுகிற கூட்டத்தில் ஒவ்வொரு நபரும் ஒரு உறுதியான வாக்கு என்றே அரசியல் களம் பார்க்க தொடங்கியுள்ளது.
விஜய்யை பொறுத்தவரை, அவரது ரசிகர் மன்றங்கள் பல ஆண்டுகளாக சமூகப் பணிகளில் ஈடுபட்டு, ஒரு முறையான கட்டமைப்போடு செயல்பட்டு வருகின்றன. இப்போது அது அரசியல் கட்சியாக உருவெடுத்துள்ள நிலையில், அந்த தொண்டர் படை தேர்தல் களத்தில் மிக தீவிரமாகப் பணியாற்றி வருகிறது. எனவே, அவரை பார்க்க வரும் கூட்டம் என்பது வெறும் பார்வையாளர்கள் அல்ல, அவர்கள் ஒவ்வொருவரும் ஒரு மாற்றத்திற்காக காத்திருக்கும் களப்பணியாளர்கள்.
மொத்தத்தில் 2026 தேர்தல் களம் என்பது பிம்பங்களுக்கும் யதார்த்தத்திற்கும் இடையிலான ஒரு போராட்டமாக அமைய போகிறது. கூட்டத்தை காட்டி அரசியல் நடத்த முடியாது என்று விமர்சிப்பவர்கள், அந்த கூட்டத்த்ற்கு பின்னால் இருக்கும் உணர்வுகளையும் மாற்றத்திற்கான ஏக்கத்தையும் புரிந்து கொள்ள தவறிவிடுகின்றனர்.
ஒரு ஓட்டு கூட மிஸ் ஆகாது என்ற நம்பிக்கையில் தவெகவினர் முன்னெடுக்கும் இந்த அரசியல் பயணம், தேர்தல் முடிவுகள் வரும்போது பலரது கணிப்புகளை தலைகீழாக மாற்றக்கூடும்.