அரசியல் களத்தில் நேர்மையும் தூய்மையும் ஒரு தலைவனுக்கு மிக முக்கியமான ஆபரணங்கள் என்பதில் எவ்வித மாற்றுக்கருத்தும் இருக்க முடியாது. பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் எளிமையும், தூய்மையான அணுகுமுறையும், நேர்மையான நிர்வாகமும் இன்றளவும் தமிழக வரலாற்றின் பொற்காலமாக போற்றப்படுகிறது. ஒரு புதிய தலைவராக, மக்கள் போற்றும் முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள விஜய் அவர்கள், அந்த நேர்மையை கடைப்பிடிப்பது பாராட்டுக்குரியது. ஆனால், இன்றைய காலகட்டத்து அரசியல் சூழலில் வெறும் நேர்மை மட்டுமே ஒரு நல்லாட்சியை தந்துவிட முடியாது. காமராஜரின் நேர்மையான அரசியலோடு, மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களின் துணிச்சலான, அதிரடியான அரசியல் அணுகுமுறையையும் கைகளில் எடுக்க வேண்டியது காலத்தின் கட்டாயமாகும். தீமைகளையும் ஊழல்களையும் வேரறுக்க வேண்டுமெனில், ஒரு தலைவனிடம் இரும்புக்கரமும், அஞ்சாத நெஞ்சமும் இருக்க வேண்டும் என்பதை வரலாறு நமக்கு உணர்த்தியிருக்கிறது.
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்கள் எடுத்த அதிரடி நடவடிக்கைகள் தமிழக அரசியலில் என்றும் மறக்க முடியாதவை. அரசியல் ரீதியாக எவ்வளவு பெரிய பலம் வாய்ந்த தலைவராக இருந்தாலும், சட்டத்தின் முன் அனைவரும் சமமே என்பதை நிரூபிக்கும் வகையில், கருணாநிதி அவர்களையே நள்ளிரவில் கைது செய்து சிறையில் அடைத்த துணிச்சல் அவரிடம் இருந்தது. அந்த பாணியில், தற்போதைய முதலமைச்சர் விஜய் அவர்களும் தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும், அவர்களின் பின்னணியை பார்க்காமல் சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும். மக்கள் பணத்தை கொள்ளையடித்து, தங்களின் சொந்த குடும்ப நலனுக்காக பயன்படுத்திய அரசியல்வாதிகள் மீது பாரபட்சமின்றி வழக்குகளை பதிவு செய்ய வேண்டும். அதிகாரம் கையில் இருக்கிறது என்ற மமதையில் சொத்துக்குவிப்பில் ஈடுபட்டவர்கள், சட்டம் தன் கடமையை செய்யும்போது எக்காரணம் கொண்டும் தப்பித்துவிடக் கூடாது என்பதில் அரசு உறுதியாக இருக்க வேண்டும்.
நமது நாட்டின் சட்ட அமைப்பில் இருக்கும் மிகப்பெரிய பலவீனம் என்னவென்றால், ஊழல் வழக்குகள் பல வருடங்களாக, ஏன் சில நேரங்களில் பல தசாப்தங்களாக இழுத்தடிக்கப்படுவதுதான். குற்றம் செய்த அரசியல்வாதிகள் தங்களின் பண பலத்தையும், அதிகார பலத்தையும் பயன்படுத்தி வழக்குகளை தாமதப்படுத்தி, தங்களின் ஆயுள் காலம் முழுவதையும் சொகுசாக கழித்துவிடுகிறார்கள். இந்த அவல நிலைக்கு முதலமைச்சர் விஜய் அவர்கள் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். மக்கள் பணத்தை திருடிய அரசியல்வாதிகள் மீதான வழக்குகள் வருடக்கணக்கில் இழுக்கப்படாமல், தனி கோர்ட் அமைத்து அதிகபட்சமாக ஆறு மாதங்களுக்குள் விசாரித்து முடிக்கப்பட்டு, இறுதி தீர்ப்பு வரும்படி தனி நீதிமன்றங்கள் மூலம் வழக்குகளை மிகத் துரிதமாக நடத்த வேண்டும். விரைவான நீதி மட்டுமே தவறு செய்ய நினைப்பவர்களின் மனதில் பயத்தை ஏற்படுத்தும்.
பொதுமக்களின் வரிப்பணமும், அரசு கஜானாவும் ஒரு மாநிலத்தின் ஏழை எளிய மக்களின் கல்விக்கும், மருத்துவத்திற்கும், உள்கட்டமைப்புக்கும் பயன்பட வேண்டியவை. அத்தகைய புனிதமான மக்கள் காசை தொட்டவர்கள், அதில் ஒரு பைசா முறைகேடு செய்தவர்கள் கூட வெளியில் சுதந்திரமாக நடமாட கூடாது. சட்டம் அவர்களை தேடி பிடித்து சிறை கம்பிகளுக்கு பின்னால் தள்ள வேண்டும். அப்போதுதான், ‘மக்களின் பணத்தை தொட்டால் நம் வாழ்க்கை அழிந்துவிடும்’ என்ற பயம் ஒவ்வொரு அரசியல்வாதிகள், அரசு அதிகாரிகளின் மனதிலும், ஆழமாக பதியும். லஞ்சமும் ஊழலும் இல்லாத ஒரு தூய்மையான நிர்வாகத்தை உருவாக்க வேண்டுமெனில், தவறு செய்தவர்கள் உடனடியாக தண்டிக்கப்படுவது ஒன்றே மிக சிறந்த வழிமுறையாகும்.
மாற்றத்தை நோக்கி தமிழகம் காத்துக்கொண்டிருக்கும் இந்த வேளையில், நேர்மையும் துணிச்சலும் கலந்த ஒரு புதிய தலைமைத்துவத்தை மக்கள் உங்களிடம் எதிர்பார்க்கிறார்கள். காமராஜரின் கொள்கைப் பிடிப்பையும், ஜெயலலிதாவின் அஞ்சாத அதிரடி தன்மையையும் ஒருசேர கொண்டு நீங்கள் செயல்பட வேண்டும் என்பதே ஒட்டுமொத்த தமிழகத்தின் கோரிக்கையாகும். மக்கள் பணத்தை கொள்ளையடித்தவர்களை சிறையில் அடைத்து, ஆறு மாதத்திற்குள் அவர்களுக்குத் தண்டனை வாங்கி கொடுத்து, தமிழக அரசியலில் ஒரு புதிய புரட்சியை ஏற்படுத்துவீர்களா சிஎம் சார்? உங்களின் துணிச்சலான ஒவ்வொரு நடவடிக்கைக்கும், தமிழ்நாட்டு மக்கள் தங்களின் முழு ஆதரவையும், பேராற்றலையும் உங்களுக்கு பின்னால் நின்று வழங்குவார்கள் என்பது நிச்சயம்.