புதினுக்காக 40 நிமிடங்கள் காத்திருந்த ஷெபாஸ் ஷெரீப்! பொறுமை இழந்து அதிபர் அறைக்குள் அத்துமீறியதால் சர்வதேச மாநாட்டில் பரபரப்பு

துர்க்மெனிஸ்தானில் நடைபெற்ற சர்வதேச மாநாடு ஒன்றில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினைச் சந்திப்பதற்காக சுமார் 40 நிமிடங்கள் காத்திருந்த பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், பொறுமை இழந்து புதின் இருந்த அறைக்குள் அனுமதியின்றி நுழைந்த சம்பவம் பெரும் பரபரப்பையும், ராஜதந்திர சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது.

துர்க்மெனிஸ்தானின் நிரந்தர நடுநிலைமையின் 30வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் அஷ்காபாத்தில் நடைபெற்ற சர்வதேச மன்றத்தில், ரஷ்ய அதிபர் புதின், துருக்கி அதிபர் ரெசெப் தயிப் எர்டோகன் மற்றும் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் உள்ளிட்ட பல உலகத் தலைவர்கள் கலந்துகொண்டனர்.

40 நிமிடக் காத்திருப்பு :

நிகழ்ச்சியின் ஓரத்தில் புதினைச் சந்தித்துப் பேச ஷெபாஸ் ஷெரீப் நேரம் ஒதுக்கியிருந்ததாகக் கூறப்படுகிறது. ஆனால், புதின், துருக்கி அதிபர் எர்டோகனுடன் பூட்டிய அறையில் ரகசிய ஆலோசனையில் ஈடுபட்டிருந்தார்.

இதனால், பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்பும், அவருடன் வந்திருந்த பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் இஷாக் தாரும் அருகிலுள்ள அறையில் சுமார் 40 நிமிடங்கள் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. நீண்ட நேரமாகக் காத்திருந்தும் புதின் வெளியே வராததால், ஷெபாஸ் ஷெரீப் மிகுந்த பொறுமையின்மையுடன் காணப்பட்டார்.

அனுமதியின்றி நுழைந்த பிரதமர் : 

ஒரு கட்டத்தில் பொறுமை இழந்த ஷெபாஸ் ஷெரீப், திடீரென ரஷ்ய அதிபர் புதின் மற்றும் துருக்கி அதிபர் எர்டோகன் ஆலோசனையில் இருந்த அறைக்குள் அத்துமீறி நுழைந்தார். எதிர்பாராத விதமாக பாகிஸ்தான் பிரதமர் நுழைந்ததால் அந்த அறையில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. சுமார் 10 நிமிடங்கள் மட்டுமே அவர் அந்த அறையில் இருந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இந்தச் சம்பவம் வீடியோவாகப் பதிவு செய்யப்பட்டு சமூக வலைத்தளங்களில் வெளியாகி, ஷெபாஸ் ஷெரீப்பின் இராஜதந்திர அணுகுமுறை குறித்துப் பலத்த விமர்சனங்களை எழுப்பியுள்ளது. சிலர் இதனை பாகிஸ்தானுக்கு ஏற்பட்ட ராஜதந்திர அவமதிப்பு என்று விமர்சித்துள்ளனர்.

முன்னதாக, ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு உள்ளிட்ட சில நிகழ்வுகளிலும் ஷெபாஸ் ஷெரீப்பை ரஷ்ய அதிபர் புதின் மற்றும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் கண்டுகொள்ளாமல் கடந்து சென்றதாகச் சர்ச்சைகள் எழுந்தது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment