விஜய்யின் ஈரோடு பரப்புரைக்கு க்ரீன் சிக்னல்! – அறநிலையத்துறை நிலத்தில் பொதுக்கூட்டம் நடத்த த.வெ.க-வுக்கு அனுமதி.. சிக்கல் தீர்ந்தது!

தமிழக வெற்றிக் கழகத்தின் (த.வெ.க) தலைவர் விஜய்யின் மக்கள் சந்திப்புப் பரப்புரை நிகழ்ச்சி ஈரோடு பெருந்துறை அருகே திட்டமிட்டபடி நடைபெற, தற்போது மாவட்ட நிர்வாகத்தின் அனுமதி கிடைத்துள்ளது. இருப்பினும், இந்த அனுமதியைப் பெறுவதில் ஒரு முக்கிய நிபந்தனை விதிக்கப்பட்டது.

அறநிலையத்துறைக்கு சொந்தமான இடம்:

ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே உள்ள விஜயமங்கலம் சரளைப் பகுதியில் சுமார் 31 ஏக்கர் பரப்பளவில் த.வெ.க தலைவர் விஜய் பரப்புரை கூட்டம் நடத்தத் திட்டமிடப்பட்டிருந்தது. இந்தப் பகுதி விஜயபுரி அம்மன் கோயிலுக்குச் சொந்தமான இந்து சமய அறநிலையத் துறை நிலம் என கோயில் செயல் அலுவலர் மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல்துறையினருக்கு கடிதம் மூலம் தெரிவித்திருந்தார்.

கோயில் நிலத்தில் அரசியல் பரப்புரை நடத்துவதற்கு அனுமதி அளிப்பதில் சில சிக்கல்கள் நீடித்து வந்த நிலையில், த.வெ.க சார்பில் ஒரு முக்கிய முடிவெடுக்கப்பட்டது.

டெபாசிட் மற்றும் கட்டணமாக ஒரு லட்சம்: 

நிலத்தை தற்காலிகமாகப் பயன்படுத்திக் கொள்வதற்காக, தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் இந்து சமய அறநிலையத் துறைக்கு டெபாசிட் மற்றும் கட்டணமாகப் பணம் செலுத்தப்பட்டது. நிலத்தைப் பயன்படுத்துவதற்கான கட்டணம் (வாடகை): ₹50,000, டெபாசிட் தொகை: ₹50,000

என மொத்தமாக ஒரு லட்சம் ரூபாய் செலுத்தப்பட்ட பின்னரே, 31 ஏக்கர் பரப்பளவில் பொதுக்கூட்டம் நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம், கடந்த சில நாட்களாக நீடித்து வந்த பரப்புரைக்கான இடம் கிடைப்பதில் உள்ள சிக்கல் முடிவுக்கு வந்துள்ளது.

கரூர் கூட்டத்தின்போது ஏற்பட்ட அசம்பாவிதங்களுக்குப் பிறகு, தற்போது ஈரோட்டில் நடைபெறும் இந்தக் கூட்டத்திற்கு காவல்துறை சார்பில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேலும், கூட்டம் நடத்துவதற்கு 80க்கும் மேற்பட்ட கடுமையான நிபந்தனைகளை காவல்துறை விதித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Leave a Comment