விஜய்யை விட்டுப்பிடியுங்கள்!.. பாஜக நிர்வாகிகளுக்கு பியூஸ் கோயல் இட்ட ரகசிய உத்தரவு?

2026 சட்டமன்றத் தேர்தலுக்கான வியூகங்களை வகுக்கச் சென்னை வந்துள்ள மத்திய அமைச்சரும், தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளருமான பியூஸ் கோயல், கட்சி நிர்வாகிகளுடன் நடத்திய ஆலோசனையில் நடிகர் விஜய் குறித்துப் பேசியுள்ள தகவல்கள் அரசியல் வட்டாரத்தில் தீயாய் பரவி வருகின்றன.

விஜய் ஒரு ‘ஸ்பாய்லர்’ (Spoiler)?
பாஜக மையக்குழு கூட்டத்தில் பேசிய பியூஸ் கோயல், தமிழக வெற்றிக் கழகத்தின் வருகையை ஒரு சாதகமான அம்சமாகப் பார்க்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். “விஜய் ஒரு ‘ஸ்பாய்லர்’ போலச் செயல்படுவார். அதாவது, அவர் வாக்குகளைப் பிரிப்பதன் மூலம் தற்போதைய ஆளுங்கட்சியான திமுக-வுக்குத்தான் மிகப்பெரிய நெருக்கடியைக் கொடுப்பார். குறிப்பாக, திமுக-வின் வாக்கு வங்கியில் முக்கியப் பங்கு வகிக்கும் சிறுபான்மையின வாக்குகளை விஜய் சரிசமமாகப் பிரிப்பார்,” என்று அவர் கணக்குப் போட்டுள்ளார்.

நிர்வாகிகளுக்கு விழுந்த கடும் உத்தரவு:
விஜய் குறித்துப் பேசுகையில் பியூஸ் கோயல் மிகத் தெளிவான ஒரு அறிவுறுத்தலை பாஜகவினருக்கு வழங்கியுள்ளார், விஜய் பாஜக கூட்டணிக்கு வர வேண்டிய அவசியம் தற்போது இல்லை. ஆனால், அவர் பொதுவெளியிலோ அல்லது சமூக வலைதளங்களிலோ பாஜகவினரால் கடுமையாக விமர்சிக்கப்படக் கூடாது.

எதிர்ப்பைப் பதிவு செய்யாதீர்:
அவருக்கு எதிரான கருத்துக்களைத் தெரிவிப்பது, ஒருவேளை அவர் பிரிக்க நினைக்கும் திமுக எதிர்ப்பு வாக்குகளை மீண்டும் திமுக பக்கமே திருப்பக்கூடும். எனவே, அமைதி காப்பதே பாஜக-வுக்கு லாபம்.

திமுக-வை வீழ்த்தப் புதிய வியூகம்?
பாஜக-வைப் பொறுத்தவரை, திமுக எதிர்ப்பு வாக்குகளை ஒன்றிணைப்பதை விட, திமுக-வின் ஆதரவு வாக்குகளைச் சிதறடிப்பதே 2026-ல் வெற்றிக்கு வழிவகுக்கும் என்று நம்புகிறது. அந்த வேலையை விஜய் கச்சிதமாகச் செய்வார் என்பதால், அவருக்கு ‘சிவப்பு கம்பளம்’ விரிக்காவிட்டாலும், ‘கருப்புக்கொடி’ காட்ட வேண்டாம் எனத் தலைமை முடிவெடுத்துள்ளது.

அதிமுக – பாஜக கூட்டணி உறுதி?
பியூஸ் கோயலின் இந்தப் பயணம், அதிமுக-வுடன் மீண்டும் கூட்டணி அமைப்பதற்கான முதற்கட்டப் பேச்சுவார்த்தையாகவே பார்க்கப்படுகிறது. எடப்பாடி பழனிசாமியுடன் நடத்திய ஆலோசனையிலும், விஜய்யின் தாக்கம் குறித்தும், வாக்குகள் சிதறுவது குறித்தும் விரிவாக விவாதிக்கப்பட்டதாகத் தெரிகிறது.

பாஜக-வின் இந்த ‘சைலண்ட்’ அட்டாக் வியூகம், விஜய்யைத் தனது பக்கம் இழுப்பதற்கான ஒரு தந்திரமா அல்லது திமுக-வை பலவீனப்படுத்த விஜய்யைப் பயன்படுத்துகிறார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது. பியூஸ் கோயலின் இந்த அறிவுறுத்தல் கமலாய வட்டாரத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.

Leave a Comment