புதிய அரசுக்கு வாழ்த்துக்கள்.. பழைய நடைமுறைகளை தொடர வேண்டாம்.. புதிய சீர்திருத்தங்களை ஏற்படுத்துங்கள்.. இனி தமிழ்நாட்டில் திமுக – அதிமுக என்ற இரு துருவம் மட்டும் இல்லை.. மூன்றாவது துருவம் வந்துவிட்டது.. அரசியலில் இருந்து விலகுகிறேன்.. புத்தகம் எழுத போகிறேன்.. விட்டு போன பணிகளை தொடர நினைத்தேன், ஆனால் முடியவில்லை.. பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பரபரப்பு அறிக்கை..!

தமிழகச் சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாகி புதிய அரசியல் மாற்றங்கள் ஏற்பட்டுள்ள சூழலில், மதுரை மத்திய தொகுதியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் தனது 10 ஆண்டுகால அரசியல் பயணம், சாதனைகள் மற்றும் தேர்தல் தோல்வி குறித்து தனது அதிகாரப்பூர்வ சமூக வலைத்தள பக்கத்தில் விரிவான விளக்க அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், “பத்து ஆண்டுகளுக்கு முன்பு, நான் வெளிநாட்டில் இருந்த ஒரு நீண்டகால பணியை விட்டுவிட்டு, சமூக முன்னேற்றத்திற்கும் மக்களின் வாழ்க்கை மேம்பாட்டிற்கும் பணியாற்ற வேண்டும் என்ற நோக்கோடு தேர்தல் அரசியலுக்கு வந்தேன். என் முதல் நேர்காணலிலேயே, சமூகநீதி இயக்கத்தின் வரலாறு மற்றும் நீதிக்கட்சி காலத்திலிருந்து அதன் பங்களிப்புகளை பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும், மதுரை மக்களுக்காக மேலும் பல செயல்களைச் செய்ய வேண்டும், என் குடும்பத்திற்கு நல்ல எதிர்காலம் அமைக்க வேண்டும் என்ற மூன்று தனிப்பட்ட நோக்கங்களை கூறியிருந்தேன். மேலும், 10 ஆண்டுகளுக்கு பிறகு என்னுடைய 60 வயதை எட்டியதும் அரசியல் வாழ்க்கையை விட்டு விலகி, 2016-க்கு முன்பு இருந்ததை போல சர்வதேச அளவிலான வாழ்க்கைக்கு திரும்ப வேண்டும் என்ற எண்ணமும் எனக்கு இருந்தது” என்று தனது ஆரம்பகால திட்டங்களை சுட்டிக்காட்டியுள்ளார்.

தொடர்ந்து தனது பணிகள் குறித்து பேசிய அவர், “என் கட்சி, மதுரை மத்திய தொகுதி மற்றும் தமிழ்நாட்டிற்காக பல்வேறு வழிகளில் மாற்றத்தை ஏற்படுத்தியதில் நான் திருப்தி அடைகிறேன். என் மூன்று தனிப்பட்ட நோக்கங்களையும் பெரும்பாலும் நிறைவேற்றியுள்ளேன். ஆனால், நான் தொடங்கிய பல திட்டங்களையும் சீர்கேடுகளையும் முழுமையாக நிறைவேற்ற முடியவில்லை. நிதி மற்றும் மனிதவள மேலாண்மை துறையிலும், பின்னர் தகவல் தொழில்நுட்ப மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறையிலும் இருந்தபோது தொடங்கிய பல மாற்றங்கள் இன்னும் முழுமையடையவில்லை. மதுரைக்காக முழுமையான பாதாள சாக்கடை மற்றும் மழைநீர் வடிகால் திட்டங்கள், மத்திய சிறை மாற்றம், மதுரை மெட்ரோ போன்ற திட்டங்களை நிறைவேற்ற முடியவில்லை. அதனால், 2026 இல் அரசியலை விட்டு விலகும் எண்ணத்தில் இருந்த என் திட்டத்தை ஒத்திவைத்து, மீண்டும் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கேட்டேன். மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டு அமைச்சராக இருந்து தொடங்கிய பணிகளை முடிக்க வேண்டும் என்ற நம்பிக்கையோடு இருந்தேன். ஆனால் தேர்தல் முடிவால் அது தற்போது ஒத்திவைக்கப்பட்டுள்ளது” என்று வருத்தத்துடன் பகிர்ந்துள்ளார்.

தனது பொதுச்சேவை பயணத்தின் தாக்கங்களை பதிவு செய்த பி.டி.ஆர், “2017ஆம் ஆண்டு திமுக தகவல் தொழில்நுட்ப அணியை அமைக்கும்படி என் தலைவர் கேட்டார். அப்போது, விண்ணப்பங்கள் பெற்று நேர்காணல் நடத்தி திறமையானவர்களை தேர்வு செய்வது போன்ற புதிய முறையை அறிமுகப்படுத்தினேன். தமிழகம் முழுவதும் ஆயிரக்கணக்கான கிலோமீட்டர்கள் பயணம் செய்து, கட்சியின் மிகவும் இளம் மற்றும் திறமையான அணியை உருவாக்கினோம். எங்கள் முயற்சிகளால் கட்சியின் இணையவழி பிரச்சார வலிமை பெரிதும் உயர்ந்தது. 2019 மற்றும் 2021 தேர்தல்களில் கூட்டணி வெற்றிக்கு எங்கள் இணையத் தள ஆதிக்கம் முக்கிய காரணமாக இருந்தது. மதுரை மத்திய தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக, 250-க்கும் மேற்பட்ட தொகுதி மேம்பாட்டு திட்டங்களை நிறைவேற்றினோம். முதல்முறையாக அமைச்சராக இருந்த எனக்கு நிதித்துறையை ஒப்படைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நான் நன்றி தெரிவிக்கிறேன். ஆரம்பத்திலிருந்தே புதிய பாதையில் செயல்பட முயன்றேன். இந்த காலகட்டத்தில் மதுரையில் கோரிப்பாளையம் மற்றும் வண்டியூர் மேம்பாலங்கள், வண்டியூர் பூங்கா, சுப்பிரமணியபுரம் 9 மாடி குடியிருப்பு திட்டம் ஆகியவற்றை செய்து முடித்துள்ளேன்” என குறிப்பிட்டுள்ளார்.

தேர்தல் முடிவுகள் குறித்து பேசிய அவர், “கடந்த 10 ஆண்டுகளில் செய்த பணிகளின் அடிப்படையில் நான் தோல்வியடைவேன் என்று எதிர்பார்க்கவில்லை. தொகுதியில் நான் செய்த பணிகளுக்கான ஆதாரங்கள் எங்கும் இருக்கின்றன. என் எதிரணியினரின் வேட்பு மனுக்களில் தவறுகள் இருந்ததாக தகவல் கிடைத்தது. இருந்தாலும், ஜனநாயக செயல்முறையை பாதிக்க விரும்பாமல் நான் சட்டரீதியான சவால்களை முன்வைக்கவில்லை. நான் பணம் கொடுத்து வாக்கு வாங்காத ஒருவராகவும், பொய்ப் பிரச்சாரம் செய்யாத ஒருவராகவும் தேர்தலை சந்தித்தேன் என்பதில் பெருமை கொள்கிறேன். எனக்கு வாக்களித்த 44,286 மக்களுக்கும் நான் என்றும் நன்றியுள்ளவன்” என்று நெகிழ்ச்சியோடு தெரிவித்துள்ளார்.

தமிழக வெற்றி கழகத்தின் வெற்றி மற்றும் புதிய ஆட்சி மாற்றம் குறித்து பதிவிட்டுள்ள அவர், “த.வெ.க 25% வாக்குகளை பெற்றால் புதிய அரசியல் யுகம் தொடங்கும் என நினைத்தேன். ஆனால் அது 35% வரை செல்லும் என நான் எதிர்பார்க்கவில்லை. மாற்றம் தவிர்க்க முடியாதது. தமிழ்நாட்டில் த.வெ.க அரசு அமைந்திருந்தாலும், அது தமிழ்நாட்டு மக்களின் அரசே. புதிய முதலமைச்சர் விஜய்க்கும் அவரது அமைச்சரவை உறுப்பினர்களுக்கும் நான் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். அரசு இயந்திரத்தில் பழைய நடைமுறைகள் தொடரும் மனப்பான்மையை மாற்றி, புதிய சீர்திருத்தங்களை கொண்டு வர வேண்டும். இல்லையெனில் முன்னேற்றம் தடைப்படும். 10 ஆண்டுகள் தொடர்ந்து பொதுச்சேவையில் இருந்த பிறகு, சில வாரங்கள் தனிப்பட்ட ஓய்வெடுக்க விரும்புகிறேன். முன்பு நேரமின்மையால் செல்ல முடியாத இடங்களுக்குப் பயணம் செய்யவும், புத்தகம் எழுதவும், உடல்நலத்தை கவனிக்கவும் இந்த நேரத்தை பயன்படுத்த போகிறேன். அடுத்த சில வாரங்களில், நான் செய்த முக்கிய பணிகள் மற்றும் சாதனைகள் குறித்து மேலும் விவரங்களை பகிர்வேன். நான் மீண்டும் வருவேன் புத்துணர்ச்சியுடன்” என்று தனது அறிக்கையை நிறைவு செய்துள்ளார்.

Leave a Comment