”காலம் ஓடிக்கொண்டே இருக்கிறது” என்பது பழமொழி. ஆனால், இனி காலம் மெதுவாக நகரப்போகிறது என்கிறார்கள் விண்வெளி ஆராய்ச்சியாளர்கள். பூமி தன்னைத்தானே சுற்றிக்கொள்ள எடுத்துக்கொள்ளும் கால அளவு மெல்ல அதிகரித்து வருவதால், எதிர்காலத்தில் ஒரு நாளுக்கு 25 மணிநேரம் கிடைக்கும் என்ற சுவாரசியமான தகவல் வெளியாகியுள்ளது.
விலகிச் செல்லும் நிலவு – வேகம் குறையும் பூமி:
பூமியின் சுழற்சி வேகம் குறைவதற்கும், ஒரு நாளின் நீளம் அதிகரிப்பதற்கும் முக்கியக் காரணமாக இருப்பது நமது நிலவுதான். நிலவின் ஈர்ப்பு விசை பூமியின் கடல்களில் அலைகளை உருவாக்குகிறது. இந்த அலைகளால் ஏற்படும் உராய்வு (Tidal Friction), பூமியின் சுழற்சி வேகத்தை ஒரு பிரேக் போல மெல்லக் குறைக்கிறது.
இதன் விளைவாக, நிலவு ஒவ்வொரு ஆண்டும் பூமியிலிருந்து சுமார் 3.8 சென்டிமீட்டர் தூரம் விலகிச் செல்கிறது. பூமி உருவான காலத்தில் ஒரு நாள் என்பது வெறும் 18 மணிநேரமாக மட்டுமே இருந்தது. ஆனால், கோடிக்கணக்கான ஆண்டுகளில் இது படிப்படியாக அதிகரித்து இன்று 24 மணிநேரமாக நிலைபெற்றுள்ளது.
25 மணிநேரம் எப்போது வரும்?
பூமியின் சுழற்சி வேகம் மிக மிக மெதுவாகவே குறைகிறது. விஞ்ஞானிகளின் கணக்கீட்டின்படி, ஒரு நாளின் நீளம் 25 மணிநேரமாக மாற இன்னும் சுமார் 200 மில்லியன் (20 கோடி) ஆண்டுகள் ஆகும்.
இதற்கு நிலவு மட்டும் காரணமல்ல,புவி வெப்பமயமாதல் காரணமாக துருவப்பகுதிகளில் பனிப்பாறைகள் உருகுவதும் பூமியின் சுழற்சியில் சிறிய மாற்றங்களை ஏற்படுத்துகிறது என நாசா (NASA) ஆய்வுகள் தெரிவிக்கின்றன. பனி உருகி நீர் பூமியின் நிலநடுக்கோட்டுப் பகுதிக்கு வரும்போது, ஒரு பம்பரத்தின் வேகம் குறைவதைப் போல பூமியின் வேகமும் குறைகிறது.
மாறப்போகும் எதிர்காலம்:
இந்த மாற்றம் மனிதர்களின் ஆயுட்காலத்தில் உணர முடியாத ஒன்றாக இருந்தாலும், புவியியல் ரீதியாக இது மிகப்பெரிய மாற்றமாகும். 200 மில்லியன் ஆண்டுகளுக்குப் பிறகு வாழப்போகும் உயிரினங்களுக்கு, ஒரு நாளில் கூடுதலாக ஒரு மணிநேரம் கிடைக்கும்.