கொடுக்கிற நோட்டுக்குத்தான் ஓட்டு.. விஜய் பேசுவதை சிரித்துவிட்டு கடப்போம்.. சீமானின் அதிரடி அட்டாக்!

ஈரோட்டில் நடைபெற்ற தவெக மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் விஜய் பேசிய கருத்துகளுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் திருச்சியில் செய்தியாளர்களிடம் ஆவேசமாகப் பேசியுள்ளார்.

இடைத்தேர்தலில் ஏன் நிற்கவில்லை?:
விஜய்யின் அரசியல் வருகை குறித்துப் பேசிய சீமான், “விஜய் கட்சி ஆரம்பித்துவிட்டு ஏன் ஈரோடு கிழக்கு மற்றும் விக்கிரவாண்டி இடைத்தேர்தல்களில் போட்டியிடவில்லை? களத்தில் யார் இருக்கிறார்கள் என்பது மக்களுக்குத் தெரியும். இன்னும் களத்திற்கே வராத ஒருவர் களத்தைப் பற்றிப் பேசுவதுதான் மிகப்பெரிய நகைச்சுவையாக இருக்கிறது,” என்று விமர்சித்தார்.

நோட்டுக்குத்தான் ஓட்டா?:
தவெக-வின் வாக்கு வங்கி குறித்துக் கேள்வி எழுப்பிய அவர், “விஜய் இப்போது வைத்திருக்கும் தலைவர்களுக்காக ஓட்டுகள் வந்துவிடாது. அதிமுகவில் எம்.ஜி.ஆர் படத்தையும், திமுகவில் கருணாநிதி படத்தையும் கொடியில் வைத்திருக்கிறார்கள் என்பதற்காக மக்கள் ஓட்டுப் போடுவதில்லை,கொடுக்கிற நோட்டுக்குத்தான் (பணம்) ஓட்டுப் போடுகிறார்கள். அப்படி இருக்கும்போது, விஜய் பேசுவதையெல்லாம் நாம் சிரித்துவிட்டுத்தான் கடந்து செல்ல வேண்டும்,” என்றார்.

விஜய்யின் பேச்சு சிரிப்பை வரவழைக்கிறது:
மேலும், “தமிழக அரசியலில் என்ன நடக்கிறது என்பதே தெரியாமல், யாரோ எழுதிக் கொடுத்ததை மேடையில் பேசிவிட்டு, அதையே திருப்புமுனை எனச் சொல்வது வேடிக்கையாக உள்ளது. களத்தில் நின்று போராடுபவர்களுக்குத் தான் அதன் கஷ்டம் தெரியும்,” என விஜய்யின் அரசியல் முதிர்ச்சியைக் கடுமையாகச் சாடினார்.

நேற்று ஈரோட்டில் நடைபெற்ற தவெக மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் விஜய், “களத்தில் இல்லாதவர்களைப் பற்றிப் பேசத் தேவையில்லை” எனச் சீமானை மறைமுகமாகக் குறிப்பிட்டிருந்த நிலையில், இன்று சீமான் அதற்கு நேரடியாகப் பதிலடி கொடுத்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Comment