தமிழக வெற்றிக் கழகத்தின் முக்கிய நிர்வாகிகளில் ஒருவரான செங்கோட்டையன், அக்கட்சியின் தலைவர் விஜய்க்கு இருக்கும் மக்கள் ஆதரவையும், வரவிருக்கும் 2026 சட்டமன்றத் தேர்தலில் தங்கள் கட்சியின் இலக்கையும் குறித்துப் பரபரப்பான பேட்டி அளித்துள்ளார்.
எம்.ஜி.ஆர்- உடன் ஒப்புமை: அதே சக்தி நடக்கும்!
“எம்.ஜி.ஆருக்கு எப்படி ஆரம்ப காலத்தில் அவருக்கு பல இடையூறுகள் கொடுத்து அவரைக் அடக்க நினைத்தார்களோ, ஆனால் எம்.ஜி.ஆர் அதையெல்லாம் தகர்த்தெறிந்து தமிழ்நாட்டுக்கு நல்லாட்சியை கொடுத்தார். அதே சக்தி தான் தமிழ்நாட்டில் விரைவில் நடக்கப் போகிறது. மக்கள் சக்தி ஒன்றாக இணைந்திருக்கிறது,” என்று ஆவேசமாகப் பேசினார்.
விஜய் வந்ததன் காரணம் மக்கள் சேவைதான்!
நடிகர் விஜய்யின் அர்ப்பணிப்பைப் பாராட்டிய செங்கோட்டையன், “ஒரு ஆண்டிற்கு 500 கோடி ரூபாய் வந்தாலும் அது எனக்குத் தேவையில்லை. மக்கள் சேவை தான் முக்கியம் என வந்தவர் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய். அவர் இன்று களத்தில் இறங்கி தீவிரமாகச் செயல்படுகிறார். அவருடைய மனிதநேயம் எப்படி இருக்கிறது என்று பார்க்க வேண்டும்,” என்றார்.
தமிழகத்தில் மட்டுமல்லாமல், “கேரளா, கர்நாடகா, ஆந்திரா என எங்கு சென்றாலும் மக்களின் தீர்ப்பு அதுவாகத்தான் இருக்கிறது” என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
234 தொகுதிகளும் எங்களுக்குத்தான்!
வரவிருக்கும் 2026 சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகத்தின் இலக்கு குறித்துப் பேசிய செங்கோட்டையன், கடந்த காலத்தில் ஒருமுறை அதிமுக 225 தொகுதிகளில் வென்றதாகக் குறிப்பிட்டு, அதை முறியடிக்கும் வகையில், “இந்த முறை 2026 ஆம் ஆண்டு நடைபெறும் தேர்தலில் தமிழக வெற்றிக்கழகம் 234 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என்று நம்பிக்கை இருக்கிறது,” என சவால் விடுத்தார்.
“விஜய்யை முதலமைச்சர் ஆக்கி அழகு பார்ப்போம். நாட்டிற்கும் இந்த மண்ணிற்கும் பெருமை சேர்ப்போம்,” என்று கூறி தனது பேட்டியை முடித்தார். செங்கோட்டையன் பேட்டி, தமிழக அரசியல் களத்தில் ஒரு பெரிய எதிர்பார்ப்பையும் விவாதத்தையும் கிளப்பியுள்ளது.