நடிகர் விஜய்யின் திரையுலகப் பயணத்தின் கடைசித் திரைப்படமான ‘ஜனநாயகன்’ படத்தின் இசை வெளியீட்டு விழா மலேசியாவில் புதிய உலக சாதனை படைத்துள்ளதாகத் தமிழக வெற்றி கழகத்தின் (தவெக) தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
உலக அரங்கில் மலேசியச் சாதனை!
மலேசியாவின் புக்கிட் ஜலில் (Bukit Jalil) மைதானத்தில் நடைபெற்ற இந்த பிரம்மாண்ட விழாவில் பங்கேற்றுத் திரும்பிய செங்கோட்டையன், அங்கு நிலவிய எழுச்சியைக் குறித்து உற்சாகத்துடன் பேசினார்.
“மலேசிய வரலாற்றிலேயே முதல் முறையாக ஒரு திரைப்பட இசை வெளியீட்டு விழாவிற்கு சுமார் ஒரு லட்சம் பேர் திரண்டிருப்பது இதுவே முதல் முறை. அந்த நாட்டில் 6 வழிச்சாலைகள், 8 வழிச்சாலைகள் என மிகச்சிறந்த உள்கட்டமைப்பு வசதிகள் இருந்தும், விஜய்யைப் பார்க்க வந்த கூட்டத்தினால் போக்குவரத்து முழுமையாக முடங்கியது. நிகழ்ச்சி முடிந்து விமான நிலையம் செல்ல வேண்டிய பயணிகள் கூட சுமார் இரண்டு மணி நேரம் கடும் நெரிசலில் சிக்கித் தவித்தனர். இது உலக அரங்கில் விஜய்க்கு இருக்கும் அசைக்க முடியாத செல்வாக்கைக் காட்டுகிறது.”
தமிழகத்தின் ஜனநாயகத்தை மீட்கும் படம்!
தமிழகத்தின் தற்போதைய அரசியல் சூழலைச் சுட்டிக்காட்டிய செங்கோட்டையன், ‘ஜனநாயகன்’ திரைப்படம் வெறும் பொழுதுபோக்கு படம் மட்டுமல்ல என்று குறிப்பிட்டார்,
“இன்று தமிழகத்தில் ஜனநாயகம் சுக்கு நூறாக உடைக்கப்பட்டு, மக்களின் உரிமைகள் நசுக்கப்பட்டு வருகின்றன. சிதைந்து போயுள்ள இந்த ஜனநாயகத்தை மீட்கவும், மக்களிடையே ஒரு புதிய எழுச்சியை உருவாக்கவும் வருகின்ற ஜனவரி 9-ம் தேதி ‘ஜனநாயகன்’ திரைப்படம் திரைக்கு வருகிறது. இந்தப் படம் தமிழக அரசியலில் ஒரு பெரிய திருப்புமுனையாக அமையும்,” என்று அவர் ஆணித்தரமாகக் கூறினார்.
ரசிகர்களுக்காகவே ‘ஒரு கடைசி முறை’:
ஏற்கனவே மலேசிய விழாவில் பேசிய விஜய், “33 ஆண்டுகள் எனக்கு ஆதரவாக இருந்த ரசிகர்களுக்கு, அடுத்த 33 ஆண்டுகள் நான் ஆதரவாக இருக்கப் போகிறேன்” என்று தனது அரசியல் பயணத்தை உறுதிப்படுத்தியிருந்தார். அதனை வழிமொழியும் விதமாக, செங்கோட்டையனின் இந்தப் பேச்சு தவெக தொண்டர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மலேசியாவில் ஒரு லட்சம் பேர் திரண்டு ‘மலேசியன் புக் ஆப் ரெக்கார்ட்ஸில்’ இடம் பிடித்த இந்த நிகழ்வு, வரும் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான ஒரு முன்னோட்டமாகவே பார்க்கப்படுவதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.