“நான்தான் எடப்பாடி பழனிசாமியை ஜெயலலிதாவிடம் அறிமுகப்படுத்தினேன். நான் வளர்த்த ஒருவரே என்னை கட்சியை விட்டு நீக்கியபோது, அந்த வேதனையில் இரண்டு நாட்கள் தூங்காமல் அழுதேன்,” என்று தமிழக வெற்றிக் கழகத்தின் (TVK) மூத்த நிர்வாகி செங்கோட்டையன் உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.
அரசியலில் ஒரு ‘சென்டிமென்ட்’ ஷாக்!
விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த பிறகு, முதல்முறையாகத் தனது அரசியல் பயணம் மற்றும் அதிமுகவில் தனக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவங்கள் குறித்துச் செய்தியாளர்களிடம் செங்கோட்டையன் மனம் திறந்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது,
அம்மாவிடம் கூட்டிப்போனது நான்தான்:
“எடப்பாடி பழனிசாமி இன்று இருக்கும் நிலைக்கு நான்தான் அடித்தளம் போட்டேன். ஜெயலலிதாவிடம் அவரை அறிமுகம் செய்து வைத்ததே நான்தான். கூவத்தூர் சம்பவத்தின்போது சசிகலா என்னைத் தனிப்பட்ட முறையில் அழைத்து ‘முதலமைச்சர் பதவியை ஏற்றுக்கொள்ளுங்கள்’ எனக் கேட்டுக்கொண்டார். ஆனால், அப்போது இருந்த நிதி நெருக்கடி மற்றும் சில சூழல்களால் நான் அதை மறுத்துவிட்டேன்.”
தூக்கத்தை தொலைத்த இரண்டு நாட்கள்:
“சுமார் 50 ஆண்டுகளாக எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதாவுடன் பயணித்தவன் நான். கட்சியின் ஒற்றுமைக்காக மட்டுமே நான் பாடுபட்டேன். ஆனால், நான் வளர்த்துவிட்ட ஒருவரே (EPS), என்னை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்தே நீக்கியபோது என்னால் அதைத் தாங்கிக்கொள்ள முடியவில்லை. அந்த வேதனையில் இரண்டு நாட்கள் தூங்காமல் கதறி அழுதேன். நான் எந்தத் தவறும் செய்யவில்லை,” என நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.
எடப்பாடி Vs செங்கோட்டையன்:
கடந்த 2024 தேர்தலுக்குப் பிறகு அதிமுகவை ஒன்றிணைக்கத் தான் எடுத்த முயற்சிகளை எடப்பாடி பழனிசாமி முறியடித்ததாகவும், அதனாலேயே தான் வெளியேற வேண்டிய சூழல் உருவானதாகவும் அவர் குற்றம் சாட்டினார். “எடப்பாடி பழனிசாமி இப்போது திமுகவின் ‘பி டீம்’ போலச் செயல்படுகிறார்” என்றும் அவர் விமர்சித்துள்ளார்.
தற்போது விஜய்யின் தவெக-வில் 34% வாக்கு வங்கி இருப்பதாகத் தெரிவித்த அவர், வரும் சட்டமன்றத் தேர்தலில் தவெக மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.