கிரீன் எனர்ஜி, சோலார்னு சொல்லி ஒரு கிலோவாட்டுக்கு 25 லட்சம் ரூபாய் வரைக்கும் ‘பார்ட்டி ஃபண்ட்’ கறந்தீங்களே… இப்போ அந்த ‘பிள்ளையார்’ பிரமுகர் சிக்குனா, பின்னாடி இருக்குற சபரீசனுக்கு மொத்தமா எண்ட் கார்டுதான்! அறிவாலயத்துக்கு இப்போ எடுக்குற உதறல்… கிளைமாக்ஸ் நெருங்கிடுச்சுன்றதுக்கான சிக்னல்!

தமிழக அரசியல் களத்தில் மின்சார வாரியத்தின் வெள்ளை அறிக்கை தற்போது ஒரு மிகப்பெரிய அரசியல் அணுகுண்டாக வெடித்துள்ளது. புதியதாகப் பொறுப்பேற்றுள்ள த.வெ.க அரசின் மின்சாரத்துறை அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல் குமார் வெளியிட்டுள்ள இந்த அறிக்கை, மின்வாரியத்தின் அவல நிலையை மட்டுமன்றி, அறிவாலயத்தின் முக்கியப் புள்ளிகளை உலுக்கும் ஊழல் புகார்களையும் வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளது. மின்சார வாரியத்திற்கு சுமார் 2.5 லட்சம் கோடி ரூபாய் கடன் இருப்பதாகக் குறிப்பிட்டுள்ள அமைச்சர், மின் கொள்முதலில் மட்டும் 58,000 கோடி ரூபாய் முறைகேடு நடந்துள்ளதாகப் பகிரங்கக் குற்றம் சாட்டியுள்ளார். இந்த விவகாரத்தில், குறிப்பாகக் கிரீன் எனர்ஜி மற்றும் சோலார் மின் கொள்முதலில் ‘பார்ட்டி ஃபண்ட்’ வசூலிக்கப்பட்டதாகக் கூறப்படும் புகார்கள் முன்னாள் முதலமைச்சர் ஸ்டாலினின் மருமகன் சபரீசனுக்குப் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளன.

இந்த வெள்ளை அறிக்கையின்படி, கடந்த 2001-ம் ஆண்டில் 6,492 கோடி ரூபாயாக இருந்த மின்துறையின் கடன், தற்போது 2,47,130 கோடி ரூபாயாக விஸ்வரூபம் எடுத்துள்ளது. இதில் அதிர்ச்சியூட்டும் விஷயம் என்னவென்றால், கடந்த ஐந்து ஆண்டுகால திமுக ஆட்சியில் மட்டுமே சுமார் 87,000 கோடி ரூபாய் கடனாகப் பெறப்பட்டுள்ளது. மின்வாரிய வரலாற்றிலேயே இந்த ஐந்து ஆண்டுகளில்தான் 4,97,996 கோடி ரூபாய் என்ற மிக அதிக வருவாய் ஈட்டப்பட்ட போதிலும், அதைவிட அதிகமாக 5,32,443 கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டுள்ளது. இந்த அசுரத்தனமான செலவுகள் எதுவும் மின்வாரியத்தின் உள்கட்டமைப்பை மேம்படுத்தவோ அல்லது ஆக்கபூர்வமான வழிகளிலோ பயன்படுத்தப்படவில்லை என்பதே தற்போதைய அரசு வைக்கும் முதன்மையான குற்றச்சாட்டாகும்.

நிதி நெருக்கடி ஒருபுறமிருக்க, மின்வாரியத்தில் நிலவும் கடுமையான பணியாளர் பற்றாக்குறையும் இந்த அறிக்கையில் அம்பலமாகியுள்ளது. கடந்த 25 ஆண்டுகளில் தமிழ்நாட்டின் மின் தேவையும் கட்டமைப்பும் பல மடங்கு அதிகரித்துள்ள போதிலும், 2000-ம் ஆண்டில் ஒரு லட்சமாக இருந்த ஊழியர்களின் எண்ணிக்கை தற்போது 74,000 ஆகக் குறைந்துள்ளது. மொத்தமுள்ள 1,40,635 பணியிடங்களில் 65,921 இடங்கள் காலியாகக் கிடக்கின்றன; கடந்த திமுக ஆட்சியில் வெறும் 343 பேர் மட்டுமே பணிநியமனம் செய்யப்பட்டுள்ளனர். இந்த நிர்வாகச் சீர்கேட்டைச் சரிசெய்து, முப்பது ஆண்டுகள் பின்னோக்கிச் சென்றுவிட்ட மின்வாரியத்தை மீட்டெடுக்க, முதல்வர் விஜய் அதிரடியாக 20,449 பணியிடங்களை அடுத்த ஓராண்டிற்குள் நிரப்ப உத்தரவிட்டுள்ளார்.

தமிழகத்தின் தினசரி மின்தேவை 21,307 மெகாவாட்டாக இருக்கும் சூழலில், மின்வாரியத்தின் சொந்த உற்பத்தி வெறும் 3,495 மெகாவாட்டாக மட்டுமே சுருங்கிப் போயுள்ளது. உப்பூர் அனல்மின் நிலையம் போன்ற முக்கியத் திட்டங்கள் கிடப்பில் போடப்பட்டதால், தனியார் நிறுவனங்களிடமிருந்து அதிக விலை கொடுத்து மின்சாரத்தைக் கொள்முதல் செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு, அதில் பெரும் முறைகேடுகள் நடந்துள்ளன. இதன் பின்னணியில் செயல்பட்ட மின்துறை நிதிக் கட்டுப்பாட்டாளர் காசி என்பவர் தற்போது சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்குத் தொடர்புடைய 397 கோடி ரூபாய் டிரான்ஸ்ஃபார்மர் ஊழல் வழக்கில் காசியின் பெயரும் இடம்பெற்றுள்ளதால், அவர் கையாண்ட முந்தைய டெண்டர்கள் அனைத்தையும் தற்போதைய அரசு தீவிரமாகத் தோண்டத் தொடங்கியுள்ளது.

இந்த ஊழல் வேட்டையில் மிக முக்கியமான விவாதமாக உருவெடுத்துள்ளது சோலார் மற்றும் காற்றாலை மின் திட்டங்களில் வசூலிக்கப்பட்ட ‘பார்ட்டி ஃபண்ட்’ விவகாரம்தான். கிரீன் எனர்ஜி அனுமதிகளுக்காக ஒரு கிலோவாட்டுக்கு 25 லட்சம் ரூபாய் வரை லஞ்சமாகக் கறந்துள்ளதாக அமைச்சர் நிர்மல் குமார் குற்றம் சாட்டியுள்ளார். கடந்த ஆட்சியில் மின்துறையில் அமைச்சர்கள் மாறினாலும், கரூரைச் சேர்ந்த ஒரு குறிப்பிட்ட குழுவே ஆதிக்கம் செலுத்தியுள்ளது. குறிப்பாக, புதுப்பிக்கத்தக்க ஆற்றல் பிரிவு முழுவதும் சபரீசனின் நெருங்கிய உறவினரான ‘பிள்ளையார்’ பிரமுகரின் கட்டுப்பாட்டில் இருந்துள்ளது. இவர்கள் தங்களின் பினாமி நிறுவனங்கள் மூலம் பெரும் அளவிலான மின் உற்பத்திக்கான அனுமதிகளைப் பெற்றுக்கொண்டு, பின்னர் முதலீட்டாளர்களிடம் கோடிக்கணக்கில் பணத்தைப் பெற்றுக்கொண்டு பிரித்துக் கொடுத்துள்ளதாகப் புகார்கள் எழுந்துள்ளன.

இந்த முறைகேடுகளை முறியடிக்கும் விதமாக, த.வெ.க அரசு தற்போது ‘Pooled Substations’ முறையை முழுமையாக ஒழித்து, முறைகேடாகப் பெறப்பட்ட அனுமதிகளை ரத்து செய்து வருகிறது. மேலும், மின் கண்டக்டர் கொள்முதலுக்கான ஒன்பது முக்கிய டெண்டர்கள் அனைத்தும் ஒரே ஐ.பி அட்ரஸிலிருந்து போடப்பட்டு, சுமார் 1,000 கோடி ரூபாய் முறைகேடு நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகால ஆட்சியில் ஏறத்தாழ 20,000 கோடி ரூபாய் அளவுக்கு மின்சாரத்துறையில் விஞ்ஞானப் பூர்வமாகக் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாகக் கூறும் அமைச்சர் நிர்மல் குமார், இதில் தொடர்புடையவர்கள் யாராக இருந்தாலும் தப்ப முடியாது என்று எச்சரித்துள்ளார். முதல்வர் விஜய்யின் நேரடி உத்தரவின் பேரில் லஞ்ச ஒழிப்புத்துறையும் காவல்துறையும் விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளதால், ‘பிள்ளையார்’ பிரமுகர் மூலமாகச் சபரீசனைச் சுற்றியுள்ள சட்டப் பிடி மேலும் இறுகத் தொடங்கியுள்ளது.

Leave a Comment