தமிழக அரசியல் களம் தற்போது ஒரு மிகப்பெரிய அதிர்வலையை சந்தித்து கொண்டிருக்கிறது. குறிப்பாக, முதல்வர் மு.க. ஸ்டாலின் போட்டியிடும் கொளத்தூர் தொகுதியிலேயே நடிகர் விஜய்யின் தமிழக வெற்றி கழகம் புகுந்து விளையாடியுள்ளதாக வெளியாகும் தகவல்கள் அரசியல் வட்டாரங்களை உலுக்கியுள்ளன.
தொகுதியின் எந்த பக்கம் திரும்பினாலும் இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை “டிவிகே” என்று முழங்குவது, திராவிட முன்னேற்ற கழகத்தின் கோட்டையிலேயே ஒரு மிகப்பெரிய விரிசலை ஏற்படுத்தியுள்ளதோ என்ற ஐயத்தை எழுப்பியுள்ளது. முதல்வர் போட்டியிடும் தொகுதியிலேயே இத்தகைய மாற்றம் நிலவுவது, தமிழக அரசியலின் திசை மாறிக்கொண்டிருப்பதை காட்டுகிறது.
வாக்குப்பதிவு நாளன்று கொளத்தூர் தொகுதியில் நிலவிய சூழல் எக்சிட் போல் கணிப்பாளர்களையே திணறடித்துள்ளது. பாரம்பரியமாக திமுக-விற்கு வாக்களிக்கும் குடும்பங்களில் கூட, இந்த முறை தங்களது பிள்ளைகளின் வற்புறுத்தலால் அல்லது மாற்றத்தின் மீதான ஆர்வத்தால் விஜய்யின் ‘விசில்’ சின்னத்திற்கு பெண்கள் வாக்களித்திருப்பதாக கூறப்படுகிறது. “எப்போதும் இவருக்கேவா ஓட்டு போடுவது, இந்த முறை இந்த தம்பிக்கு ஒரு வாய்ப்பு கொடுத்து பார்ப்போமே” என்ற பேச்சு தொகுதியின் சந்து பொந்துகளில் எல்லாம் எதிரொலித்துள்ளது.
கொளத்தூர் தொகுதியில் பதிவான 86.10 சதவீத வாக்குப்பதிவு என்பது ஒரு மிகப்பெரிய அபாய சங்காகவே பார்க்கப்படுகிறது. பொதுவாகவே ஒரு தொகுதியில் அதிகப்படியான வாக்குப்பதிவு நிகழும்போது, அது ஆட்சி மாற்றத்திற்கான அல்லது அந்த தொகுதி பிரதிநிதியின் மீதான அதிருப்தியின் அடையாளமாகவே அரசியல் வரலாற்றில் பார்க்கப்படுகிறது. கடந்த தேர்தல்களில் மிக எளிதாக வெற்றி வாகை சூடிய ஸ்டாலினுக்கு, இந்த முறை விஜய் என்ற புதிய சக்தியின் வருகை கடும் சவாலை ஏற்படுத்தியுள்ளது.
விஜய் என்ற ஆளுமையின் மீது இளைஞர்கள் கொண்டுள்ள ஈர்ப்பு, வெறும் சினிமா ஈர்ப்பாக மட்டும் இல்லாமல் ஒரு அரசியல் தேடலாக மாறியுள்ளதே இதற்கு முக்கிய காரணம். கொளத்தூரில் வசிக்கும் முதல்முறை வாக்காளர்கள் மற்றும் நடுத்தர வயது இளைஞர்கள் டிவிகே-வை ஒரு மாற்று சக்தியாக தீவிரமாக முன்னிறுத்தியுள்ளனர். “யாரை கேட்டாலும் டிவிகே” என்று சொல்லுமளவிற்கு ஒரு மாயாஜாலத்தை விஜய் நிகழ்த்தியுள்ளார்.
இறுதியாக, மே 4-ஆம் தேதி வெளியாகபோகும் தேர்தல் முடிவுகள் தமிழக அரசியலில் ஒரு புதிய விடியலை அல்லது ஒரு பெரிய வீழ்ச்சியை தீர்மானிக்கும். கொளத்தூர் தொகுதியில் ஸ்டாலின் மீண்டும் சட்டமன்றம் போவாரா அல்லது விஜய் என்ற சுனாமி அவரை தடுத்து நிறுத்துமா என்பதுதான் இப்போதைய மிகப்பெரிய மில்லியன் டாலர் கேள்வி.