தெலங்கானா மாநிலத்தை உலக அரங்கில் கவன ஈர்ப்பு மையமாக மாற்றும் நோக்கில், ஹைதராபாத்தில் உள்ள முக்கிய சாலைகளுக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் மறைந்த தொழிலதிபர் ரத்தன் டாட்டா உள்ளிட்டோரின் பெயர்கள் சூட்டப்படும் என்று முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி தலைமையிலான அரசு அதிரடியாக அறிவித்துள்ளது.
இந்த அறிவிப்பு தெலங்கானாவில் உள்ள ‘தெலங்கானா ரைசிங் உலகளாவிய உச்சி மாநாட்டிற்கு’ (Telangana Rising Global Summit) முன்னதாக வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
டிரம்ப் பெயரில் அவென்யூ (Donald Trump Avenue):
ஹைதராபாத்தில் உள்ள அமெரிக்கத் தூதரகம் அமைந்துள்ள முக்கிய சாலைக்கு, ‘டொனால்ட் டிரம்ப் அவென்யூ’ என்று பெயர் சூட்ட அரசு முடிவு செய்துள்ளது. அமெரிக்காவின் முன்னாள் மற்றும் தற்போதைய அதிபரின் பெயரில் உலகில் வைக்கப்படும் முதல் சாலை இது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த முடிவு குறித்து இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகத்திற்கும் அமெரிக்கத் தூதரகத்திற்கும் அதிகாரப்பூர்வமாகத் தெரிவிக்கப்படும்.
ரத்தன் டாட்டா பசுமைவழிச் சாலை:
மாநிலத்தில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் விதமாக அமைக்கப்படவுள்ள RRR (Regional Ring Road) எனப்படும் பசுமைவழிச் சாலைக்கு, மறைந்த தொழிலதிபர் பத்ம பூஷன் ரத்தன் டாட்டா அவர்களின் நினைவாக அவரது பெயர் சூட்டப்பட உள்ளது. ஏற்கனவே இந்தச் சாலையின் ராவ்ரியால் (Raviryala) சந்திப்பு, ‘டாட்டா இன்டர்சேஞ்ச்’ என்று பெயரிடப்பட்டுள்ளது.
மேலும், ஹைதராபாத்தின் நிதி மாவட்டத்தில் (Financial District) அமையவுள்ள கூகுள் நிறுவனத்தின் மிகப்பெரிய வளாகத்திற்கு அருகிலுள்ள சாலை ‘கூகுள் தெரு’ (Google Street) என்றும் பெயரிடப்பட உள்ளது. இதேபோல, ‘மைக்ரோசாஃப்ட் சாலை’ மற்றும் ‘விப்ரோ சந்திப்பு’ போன்ற பெயர்களும் சூட்டப்படவுள்ளதாகவும் தெலங்கானா அரசு அறிவித்துள்ளது.
உலகளாவிய நிறுவனங்களுக்கும், செல்வாக்கு மிக்கப் பிரமுகர்களுக்கும் மரியாதை செலுத்துவதன் மூலம், ஹைதராபாத்தை உலகளாவிய அங்கீகாரம் பெற்ற மையமாக நிலைநிறுத்த இந்த நடவடிக்கை உதவும் என்று முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி தெரிவித்துள்ளார்.