கரண்ட் கம்பியில அணில் கடிச்சதுன்னு அன்னைக்கு மழுப்பல் பேட்டி கொடுத்தீங்க… இன்னைக்கு பழுதான சிஸ்டத்தையே மாத்தி காட்ட போகுது தவெக அரசு.. பராமரிப்பு பணியே செய்யாம பழைய டிரான்ஸ்பார்மரை ஓடவிட்டுட்டு, இப்ப சோஷியல் மீடியாவுல வந்து லைக் கேக்குறீங்களா? நீங்க வதந்தி பரப்புங்க… நாங்க 24×7 களத்துல நின்னு கரண்ட் கொடுப்போம்! நீங்க வதந்தி பரப்புங்க… நாங்க 24×7 களத்துல நின்னு கரண்ட் கொடுப்போம்!”

தமிழக தலைநகரமான சென்னையில் அண்மை காலங்களாக தொடர்ந்து ஏற்பட்டு வரும் மின்தடை பிரச்சினைகள், பொதுமக்களின் அன்றாட வாழ்க்கையை பெரிதும் பாதித்து வருவதுடன், அவர்களின் மத்தியில் பெரும் கோபத்தையும் ஏமாற்றத்தையும் அதிகரித்துள்ளது. மின்சாரம் என்பது ஆடம்பர வஸ்து அல்ல, அது மனித வாழ்வின் மிக அத்தியாவசியமான அடிப்படை தேவை என்பதை எவரும் மறுக்க முடியாது. கடுமையான கோடை வெயிலிலும், இரவு நேரங்களிலும் மின்தடையால் அவதியுறும் சாமானிய மக்கள், வேறு வழியின்றி தங்களின் குமுறல்களை வெளிப்படுத்த வீதிக்கு வந்து போராட தொடங்கியிருப்பது சாதாரண விஷயம் இல்லை. மக்களின் இந்த திடீர் வீதி போராட்டங்கள், அவர்களின் பொறுமையின் எல்லையை காட்டுவதோடு, தற்போதைய புதிய அரசு இந்த விவகாரத்தில் உடனடியாக தலையிட்டு போர்க்கால அடிப்படையில் தீர்வு காண வேண்டும் என்ற அவசியத்தையும் உணர்த்துகிறது.

இருப்பினும், இந்த ஒட்டுமொத்த மின்தடை பிரச்சினைக்குமான அரசியல் பின்னணியை நாம் சற்று நடுநிலையோடு உற்று நோக்கினால், ஒரு முக்கியமான மற்றும் நியாயமான கேள்வி எழுகிறது. தமிழ்நாட்டில் புதியதாக தவெக அரசு ஆட்சி அமைத்து இன்னும் சில நாட்களே ஆகியுள்ள நிலையில், மின்தடைக்கான ஒட்டுமொத்த பழியையும் புதிய முதலமைச்சர் மீதும் தவெக அரசு மீதும் தூக்கி போடுவது எந்த வகையில் நியாயமாகும்? ஒரு மாநிலத்தின் அல்லது சென்னை போன்ற ஒரு பெருநகரத்தின் மின்சார கட்டமைப்பு என்பது ஒரே ஒரு நாளில் உருவான ஒன்றல்ல; அது பல பத்தாண்டுகளாக தொடர்ந்து இயங்கி வரும் ஒரு பிரம்மாண்டமான உள்கட்டமைப்பு ஆகும். தற்போதைய நிலைக்கு, கடந்த காலங்களில் மேற்கொள்ளப்படாத முறையான பராமரிப்பு பணிகள், காலாவதியான பழைய டிரான்ஸ்பார்மர்கள், நாளுக்கு நாள் அதிகரித்து வரும் மின்சார தேவை, அதிவேக நகர வளர்ச்சி மற்றும் தரமற்ற கேபிள், சப்-ஸ்டேஷன் குறைபாடுகள் போன்ற பல அடுக்கு காரணங்களே பிரதான பின்னணியாக அமைந்துள்ளன.

கடந்த கால அரசியல் வரலாற்றை நாம் சற்று திரும்பிப் பார்த்தால், இதே போன்றதொரு நிர்வாக சூழல் முந்தைய ஆட்சி காலத்திலும் நிலவியதை நாம் எளிதில் புரிந்துகொள்ள முடியும். கடந்த 2021 ஆம் ஆண்டு திமுக புதியதாக ஆட்சிக்கு வந்தபோதும், சென்னை உட்பட தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இதே போன்ற கடுமையான மின்தடைகளும், டிரான்ஸ்பார்மர் வெடிப்பு பிரச்சினைகளும் தொடர்ச்சியாக ஏற்பட்டன. அப்போது மின்சாரத்துறை அமைச்சராக பதவியேற்றிருந்த செந்தில் பாலாஜி, செய்தியாளர்களை சந்தித்து இதற்குத் தற்போதைய திமுக அரசு காரணமல்ல என்று பலமுறை விளக்கமளித்தார். “முந்தைய பத்தாண்டுகால அதிமுக ஆட்சியில் மின்சார வாரியப் பராமரிப்புப் பணிகள் சரியாகச் செய்யப்படவில்லை, டிரான்ஸ்பார்மர்கள் பழுதடைந்துள்ளன” என்று பல மாதங்களாகக் குற்றம் சாட்டியதுடன், அணில் கடித்ததால் தான் டிரான்ஸ்பார்மர்கள் பழுதாகி விட்டது என்று கூட வேடிக்கையான காரணங்களைக் கூறித் தப்பித்துக் கொண்டனர்.

அன்று திமுக அரசுக்கு துறையை சீரமைக்க மாதக்கணக்கில் கால அவகாசம் கொடுத்த இதே அரசியல் தரப்பினர், இன்று தவெக அரசு பொறுப்பேற்று பத்து நாட்களாவதற்குள் முழு பழியையும் தூக்கி போடுவது அவர்களின் முரண்பாடான அரசியலையே காட்டுகிறது. எனினும், முந்தைய ஆட்சியாளர்களை கைகாட்டி தப்பித்து கொள்ளாமல், தற்போதைய தவெக அரசு மக்களின் துயரத்தை துடைக்க உடனடியாக சில அதிரடி நடவடிக்கைகளில் இறங்க வேண்டியது அவசியமாகும். சென்னையில் தற்காலிகமாக பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் அவசர பராமரிப்புப் பணிகளை மின்னல் வேகத்தில் முடுக்கிவிட வேண்டும். காலாவதியான மற்றும் பழுதடையும் நிலையில் இருக்கும் பழைய டிரான்ஸ்பார்மர்களை கண்டறிந்து, அவற்றுக்கு பதிலாக புதிய நவீன திறன் கொண்ட டிரான்ஸ்பார்மர்களை போர்க்கால அடிப்படையில் மாற்றியமைக்க வேண்டும்.

இதனுடன், மின்தடை குறித்து பொதுமக்கள் அளிக்கும் புகார்களுக்கு உடனுக்குடன் பதிலளிக்கவும், களத்தில் இறங்கி பழுதுகளை சரிசெய்யவும் 24×7 மணி நேரமும் இயங்கக்கூடிய ஒரு பிரத்யேகத் துரித ரெஸ்பான்ஸ் அமைப்பை மின்சார வாரியம் உருவாக்க வேண்டும். மேலும், எந்தெந்த பகுதிகளில் எந்தெந்த நேரங்களில் பராமரிப்பு பணிகளுக்காக மின்தடை செய்யப்பட உள்ளது என்ற விபரங்களை முன்கூட்டியே ஆன்லைன் மற்றும் ஊடகங்கள் வாயிலாக வெளிப்படையாக அறிவிக்க வேண்டும். பிரச்சினைகளை மூடிமறைக்க முற்படாமல் அல்லது பழைய அரசைக் கைகாட்டாமல், மின்தடைக்கான தார்மீகக் காரணங்களை நேர்மையாக மக்களிடம் எடுத்துரைத்து, அவர்களின் நம்பிக்கையைப் பெறுவதே ஒரு சிறந்த மக்கள் அரசுக்கு அழகாகும்.

மக்களுக்கு கோபம் இருப்பதும், அவர்கள் அரசை நோக்கி கேள்வி எழுப்புவதும் முற்றிலும் நியாயமான ஒன்றுதான்; ஏனில் அவர்கள் தங்களின் உரிமைகளுக்காக ஓட்டளித்து ஒரு மாற்று அரசை தேர்ந்தெடுத்துள்ளனர். ஆனால், அதே சமயம் பல ஆண்டுகளாக சீர்குலைந்து கிடக்கும் ஒரு பிரம்மாண்டமான உள்கட்டமைப்பை சரிசெய்து, புதிய மாற்றங்களை கொண்டு வர எந்தவொரு புதிய அரசுக்கும் சில அடிப்படை அவகாசம் தேவைப்படும் என்ற எளிய யதார்த்தத்தை நாமும் புரிந்து கொள்ள வேண்டும். தவெகவின் மின்சாரத்துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ள திரு. சி.டி.ஆர். நிர்மல்குமார் அவர்கள், மிக விரைவில் செய்தியாளர்களை சந்தித்து மின்தடைக்கான தற்போதைய உண்மையான காரணங்களையும், நிலுவையில் உள்ள சிக்கல்களையும் மக்களிடம் தெளிவுபடுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அவ்வாறு பிரச்சினைகளை விளக்கிய கையோடு, மின்தடையை நிரந்தரமாக நிவர்த்தி பண்ணுவதற்கான பணிகளைத் தவெக அரசு துரிதப்படுத்தி, சென்னைக்கு தடையற்ற மின்சாரத்தை வழங்கி மக்களின் முகத்தில் புன்னகையை வரவழைப்பது முற்றிலும் உறுதி.

Leave a Comment