உலகின் மிகப்பெரிய அரசியல் கட்சியான பாரதிய ஜனதா கட்சி, நிதி பலத்திலும் தற்போது அசுர வளர்ச்சியை எட்டியுள்ளது. 2024-25 நிதியாண்டிற்கான தணிக்கை அறிக்கையின்படி, பாஜகவின் மொத்த நிதி இருப்பு மற்றும் சொத்து மதிப்பு சுமார் ரூ.10,000 கோடியை நெருங்கியுள்ளது. இது இந்திய அரசியல் வரலாற்றிலேயே ஒரு கட்சி வைத்திருக்கும் மிகப்பெரிய தொகையாகக் கருதப்படுகிறது.
பணம் எப்படி குவிகிறது?
பாஜகவின் இந்த இமாலய வளர்ச்சிக்கு முக்கியக் காரணமாக இருப்பது தேர்தல் பத்திரங்கள் (Electoral Bonds) மற்றும் தன்னார்வ நன்கொடைகள். உச்சநீதிமன்றம் தேர்தல் பத்திரங்களை ரத்து செய்வதற்கு முன்பே, அதன் மூலம் கிடைத்த பெரும்பகுதி நிதி பாஜகவின் கணக்கிற்குச் சென்றுவிட்டது. இது தவிர, கார்ப்பரேட் நிறுவனங்கள் மற்றும் தனிநபர்களிடம் இருந்து பெறப்படும் கோடிக்கணக்கான நன்கொடைகளும் கட்சியின் கஜானாவை நிரப்பியுள்ளன.
முதலீடும் கோடிக்கணக்கான வட்டியும்:
கையில் இருக்கும் இந்த மெகா தொகையை பாஜக சும்மா வைத்திருக்கவில்லை. இதில் பெரும் பகுதி வங்கிகளில் நிரந்தர வைப்புத் தொகை (FD) மற்றும் பல்வேறு நிதி சார்ந்த திட்டங்களில் முதலீடு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மட்டுமே ஆண்டுக்கு நூற்றுக்கணக்கான கோடி ரூபாய் வட்டியாகக் கிடைப்பதாக அந்த அறிக்கை கூறுகிறது.
கட்சியின் தினசரி நிர்வாகச் செலவுகள், அலுவலகப் பராமரிப்பு மற்றும் விளம்பரச் செலவுகளை இந்த வட்டிப் பணமே ஈடுகட்டிவிடும் அளவுக்கு நிதி பலம் வலுவாக உள்ளது.
தேர்தல் களத்தில் என்ன பாதிப்பு?
எதிர்வரும் மாநிலத் தேர்தல்கள் மற்றும் நாடாளுமன்றத் தேர்தல்களில் இந்த பண பலம் பாஜகவிற்கு மிகப்பெரிய ‘பிளஸ்’ பாயிண்டாக அமையும்.
அதிநவீன பிரச்சாரங்கள்:
ஹெலிகாப்டர் பயணம், டிஜிட்டல் விளம்பரங்கள் என பிரம்மாண்ட பிரச்சாரம். நாடு முழுவதும் தாலுகா அளவில் சொந்தமாக அலுவலகக் கட்டிடங்கள். ஐடி விங் மற்றும் விளம்பரங்களுக்கு தடையின்றி நிதி ஒதுக்கீடு.
எதிர்க்கட்சிகளின் நிதி நிலைமையுடன் ஒப்பிடும்போது, பாஜகவின் இந்த 10,000 கோடி ரூபாய் சொத்து மதிப்பு மலைக்க வைக்கும் வகையில் உள்ளது. இந்தப் பண பலம் தேர்தல் களத்தில் மற்ற கட்சிகளுக்குப் பெரும் சவாலாக இருக்கும் என அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.